”தி.மு.க. என்ற இயக்கத்தை கட்டிக் காப்பாற்ற தம்பி கருணாநிதி இருக்கிறார்” பல ஆண்டுகளுக்கு முன்னால் அண்ணா சொன்னார்.
அண்ணா சொன்னது போல, தி.மு.க.வை அண்ணாவுக்குப் பிறகு 50 ஆண்டுகளாக தி.மு.க. என்ற இயக்கத்தை எத்தனையோ சரிவுகளில் இருந்து தூக்கி நிறுத்தியவர் கலைஞர். பொதுவாழ்வில் அவர் கையாண்ட வித்தைகளில், பல எதிரிகள் வீழ்ந்தனர். சில எதிரிகள் வாழ்ந்தனர். ஆனாலும், கலைஞர் என்ற அரசியல்வாதியை யாருமே வீழ்த்த முடியவில்லை. பொதுவாழ்விலிருந்து அவரை நீக்கவும் முடியவில்லை.
தமிழ்நாட்டில் ஐம்பது ஆண்டுகளாக பொதுவாழ்வில் நிலைத்து நிற்கும் அரசியல்வாதியான கலைஞர், குடும்ப வாழ்க்கையில் நிலை குலைந்து போயிருக்கிறார். பொதுவாழ்வில் அவரது கண்ணசைவில் எல்லோரும் கட்டுண்டு கிடந்தார்கள். குடும்ப வாழ்வில் அவரது எந்த அசைவுக்கும் குடும்பத்தினர் கட்டுப்படவில்லை.
1993ல் வைகோ வெளியேற்றப்பட்ட பிறகு, கட்சிக்குள் நடக்கும் அத்தனை களேபரங்களுக்கும் காரணம் குடும்பம்தான் என்று அறியாதவர் அல்ல கலைஞர். குடும்பம் அதிகார மையங்களாக மாறுவதை தடுக்காமால் விட்டதன் விளைவு, இன்று டெல்லி திகார் சிறைவரை சென்றுவிட்டார் கனிமொழி. அந்த மகள் மீது அவர் வைத்திருக்கும் பாசம் நாளுக்கு நாள் அதிகரிக்க, குடும்பத்தின் இன்னொரு பூகம்பத்தை உருவாக்கி இருக்கிறது.
”சிறையில் 135 நாட்களுக்கு மேல் இருந்துவிட்டு, வரும் நவம்பர் 3ம் தேதியில் கனிமொழி வெளியே வந்துவிடுவார் என்ற நம்பிக்கையில் தி.மு.க. தலைவர் கருணாநிதியும் அவரது மனைவி ராசாத்தியும் இருக்கின்றனர். இந்த வேளையில், கோபாலபுரத்தில் தனது மூத்த மகள் செல்வி ஆடி ரூத்ரதாண்டவத்தால், அதிர்ச்சியில் சிலையாக நின்றார் கலைஞர்” என்று கட்சியின் உயர் பொறுப்பில் இருப்பவர் சொல்லக்கேட்டு, அதை விசாரித்தால், அது வெறும் ரூத்ரதாண்டவம் மட்டுமல்ல, தி.மு.க.வின் எதிர்காலமே அதில் அடங்கி இருக்கிறது என்பதுதான் உண்மை.
அக்டோபர் 20ம் தேதி மாலை டெல்லிக்கு கிளம்பினார் கருணாநிதி. அதற்கு முன்பாகத்தான், கோபாலபுரத்தில் இச்சம்பவம் நடந்தேறியுள்ளது. சி.ஐ.டி. காலனியிலிருந்து மாலை கோபாலபுரத்துக்கு வந்திருக்கிறார் கலைஞர். குடும்பத்தினரைத்தவிர வேறு யாரும் இல்லை அங்கே. தயாளும்மாள், ஸ்டாலின், செல்வி ஆகிய மூவரும் இருக்க, மெளனமாக இருந்த கலைஞரிடம் மெல்ல பேச்சுக் கொடுத்தாராம் செல்வி.
“என்னப்பா… நாங்க கேள்விப்பட்டதெல்லாம் உண்மையா. ஜெயில்ல இருந்து கனி சென்னைக்கு வந்தா ஏர்போர்ட்டுக்கு போய் கட்சி சீனியருங்க எல்லாம் வரவேற்கனும்னு சொன்னீங்களா” என்று செல்வி கேட்க, வழக்கம் போல் மெளன சாமியார் போல் காட்சி தந்திருக்கிறார் கலைஞர்.
“அவளை எப்ப கட்சிக்குள் கொண்டு வந்தீங்களோ, அன்னிக்கியே கட்சி நாசமா போச்சு. இன்னிக்கி கட்சி இந்த கதிக்கு ஆளானது யாராலன்னு நெனைச்சிப் பாத்தீங்களாப்பா. அதை நெனைச்சிப் பாத்தீங்கன்னா இப்படி இருக்கமாட்டீங்கப்பா நீங்க. அவளை ஏர்போர்ட்டுக்கு போய் வரவேற்கணும்ன்னு சொல்றீங்களே. அவ என்ன கட்சிக்கு தியாகம் செஞ்சிட்டு போய் ஜெயில்ல இருக்காளா. அவளுக்கு கட்சியில அந்தஸ்து கொடுக்கணும்னு ஏம்பா இப்படி துடிக்கறீங்க…
“ஏர்போர்ட்டுக்கு வரணுமாம். மறுநாளே மகளிர் அணியோட பொதுக்கூட்டம் நடத்துவீங்களாம். அதுக்கு அவளையே தலைமை தாங்கச் சொல்வீங்களாம். அடுத்த நாளே, மாவட்டச் செயலாளர் எல்லாம் அவ வீட்டுக்கு போய் பார்க்கணுமாம். உடனே, அவளை கட்சி ஆபிசுக்கு கூட்டிட்டு போய், ஏதாவது பொறுப்பு கொடுக்கணும்னு பேசி இருக்கறீங்களே. இதெல்லாம் செஞ்சா, கட்சிக்காரனுங்க என்ன நினைப்பானுங்க. சொல்லுங்கப்பா..
“ஒன்னே ஒன்னுப்பா. நீங்க என்ன செய்வீங்களோ… எது செய்வீங்களோ. அவ வரட்டும். அவ கேசுக்காக எத்தனை கோடி வேணாலும் செலவு செய்யுங்க. அதுக்காக, எங்க பங்குக்கும் நாங்க ஏதாவது செஞ்சி தொலைக்கறோம். ஜெயில்ல இருந்தப்போ அவளை கட்சியை விட்டு நீக்க முடியாதுன்னு சொன்னீங்க. சரி. இப்ப வெளியில வந்ததுமே, கட்சியில இருந்து தூக்கிடுங்க. அதுதான் இந்த குடும்பத்துக்கும், கட்சிக்கும் நல்லது. ஆனா, அவளுக்கு கட்சியில அந்தஸ்து கொடுக்கனும் முக்கியத்துவம் கொடுக்கணும்ன்னு நினைச்சி, ஏதாவது செஞ்சீங்க, நாங்க சும்மா இருக்க மாட்டோம்” என்று வெடி வெடியென வெடித்து கிளம்பிய செல்வி, இருபத்தைந்து நிமிடங்களுக்கு மேல் கொதித்துவிட்டு நின்றார்.
இத்தனை நடக்கும் போது, மெளனமாக இருந்த கலைஞர், அடுத்து சீறிப் பாய்ந்தாரா என்றால், அதுதான் இல்லை. சிலை போலவே, சக்கர நாற்காலியிலேயே அமர்ந்துக் கொண்டிருந்தாராம். மோட்டு வளையை பார்ப்பதும் மோவாயை தேய்த்துக் கொள்வதுமாகவே இருந்திருக்கிறார்.
கோபாலபுரத்தில் இருந்துக் கொண்டு, தனது கருத்துக்களை அவர் எதைச் சொன்னாலும் அதுவும் அந்த நேரத்தில் எடுபடாது என்று உணர்ந்த கலைஞர், மெல்ல அறிவாலயம் சென்று, அன்று இரவு சி.ஐ.டி. காலனிக்கு சென்றிவிட்டாராம். அங்கிருந்தபடியே, கோபாலபுரத்தில் நடந்த ரூத்ரதாண்டவத்தின் பின்னணி என்ன என்று விசாரித்திருக்கிறார்.
இரு தினங்களுக்கு முன்பாக, போட் கிளப்பில் கோபாலபுரத்து குடும்பங்கள் ஒன்றாக அமர்ந்து விவாதம் செய்திருப்பது கலைஞருக்கு தெரிந்துவிட்டது. அங்கே எடுக்கப்பட்ட முடிவுகளின் படி செல்வி களத்தில் இறங்கி இருப்பதும் உணர்ந்துக் கொண்டார். இந்த விஷயத்தை இப்படியே ஆறப்போட்டுவிட்டு, டெல்லி கிளம்பி இருக்கிறார்.
கோபாலபுரத்தில் நடந்த விஷயங்களை, கலைஞரின் பாதுகாவலர் மற்றும் உதவியாளர் நித்யா மூலமாக கேள்விப்பட்ட ராசாத்தி கொதித்து எழுந்துவிட்டார். டெல்லி சென்றதுமே, கனிமொழிக்காக கலைஞரிடம் ஒரே ஒரு நிபந்தனையை விதித்திருக்கிறார் ராசாத்தி. ‘இனி அரசியலில் இருந்து கனிமொழியை விலகச்சொன்னால், பல பேர் அரசியலை விட்டு விலக வேண்டியிருக்கும்” என்று ராசாத்தியும் பூடகமாக பேச, தத்தளித்திருக்கிறார் கருணாநிதி.
அதன்பிறகு, டெல்லியில் நடந்த எந்த சந்திப்பிலும் தயாநிதி மாறனை காணவேயில்லை. முற்றிலும், தயாநிதியை அழைக்கவே கூடாது என்பதுதான் ராசாத்தி போட்ட முக்கிய நிபந்தனையாம். மேலும், சோனியாவை சந்திக்கச் சென்ற போது, கலைஞரின் காரில் ஏற முற்பட்ட தயாநிதியை டி.ஆர்.பாலு நைசாக பேசி, இறக்கியிருக்கிறார்.
சோனியாவுடனான சந்திப்பில், கலைஞர் நலம் விசாரிக்கு முன்பே, “எல்லாரும் எங்களை கைவிடறாங்கம்மா. நீங்கத்தான் எப்படியாவது எங்களை காப்பத்தணும்’னு சொல்லி ராசாத்தி வைத்த ஒப்பாரி, சோனியாவை மிரள வைத்திருக்கிறது.
சோனியா சந்திப்பு முடிந்தத அன்றே, கனிமொழி ஜாமீன் மனு மீதான தீர்ப்பை நவம்பர் 3ம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக கோர்ட் அறிவித்துவிட்டது. 24ம் தேதியிலேயே கனிமொழிக்கு ஜாமீன் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை பொய்த்துப்போனத்தில் ராசாத்தி இன்னும் அதிக வேதனையில் மூழ்கிவிட்டார். இந்த நேரத்தில் சென்னைக்கு கிளம்பினால், டெல்லியில் பூகம்பம் வெடிக்கும் என்று நினைத்து, மேலும் ஒரு நாள் தங்கிவிட்டு, சென்னை திரும்பினார் கலைஞர்.
எது எப்படியோ, வரும் நவம்பர் 3ம் தேதி கனிமொழி வெளியே வருவதற்கான அறிகுறிகள், தெளிவாக தெரியும் நிலையில், கலைஞர் சில முடிவுகளை எடுக்க வேண்டி இருக்கிறார்.
அதற்கு முன்பாக, கோபாலபுரத்தில் விதிக்கப்பட்ட ஒரே நிபந்தனையை ஏற்பாரா அதற்கு பதில் ராசாத்தி போட்ட ஒரே நிபந்தனையை ஏற்பாரா என்பது அவர் எடுக்க வேண்டிய முடிவு.
கோபாலபுரத்தில் “இனி அரசியலில் கனி கூடாது” என்பதுதான் ஒரே நிபந்தனை.
”அரசியலில் கனி நீடிக்க வேண்டும். இல்லையென்றால்…. ”என்று ராசாத்தி போட்ட நிபந்தனை.
இதில் ராசாத்திக்கு ‘அது நடக்காது. நீ கேட்டது நடக்கும்’ உறுதி தந்திருகிறாராம்.
ஆக, தி.மு.க. தொண்டன் அடுத்த சரிவுக்கு… மன்னிக்கவும், அடுத்த சரித்திரத்துக்கு தயாராகிக் கொண்டிருக்கிறான்.
நன்றி: இந்திரன், தமிழக அரசியல்.