Saturday, October 15, 2011

குற்றவாளியை விடுவித்தாரா ஆளும் கட்சி எம்.எல்.ஏ.?

முகப்பேர் கலாட்டா!

நில அபகரிப்பு புகாரில் இது ரத்தத்தின் ரத்தங்கள் சம்பந்தப்பட்டது!
சென்னை முகப்பேரில் வசிக்கும் தியாகராஜன் என்பவர் ஜூ.வி. ஆக்ஷன் செல்லில் (044-42890005) அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து அவரை சந்தித்தோம்.
''1981-ல் என் அம்மா லட்சுமிக்கு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் குலுக்கல் முறை ஒதுக்கீட்டின் கீழ் சென்னை முகப்பேரில் காலி மனை ஒதுக்கீடு செய்யப்​பட்டது. அதில் வீடு கட்டி 14 ஆண்டுகளாக குடியிருந்தோம். பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட அம்மாவைப் பார்த்துக்கொள்ள சரஸ்​வதி என்பவரை வேலைக்காரியாக நியமித்தோம். 2005-ல் அம்மா இறந்து​போனாலும், தொடர்ந்து சரஸ்வதி வேலை செய்துவந்தார்.
கடந்த ஆண்டு எனது வீட்டுக்கு அருகில் குடியிருந்த ஆட்டோ டிரைவர் அருள் எனக்கு போன் செய்து, 'உங்களோட நாகப்பட்டினம், முகப்​பேர் வீட்டுப் பத்தி​ரங்கள் எங்கிட்டத்தான் இருக்கு. நாங்க கொடுக்கிற காசை வாங்கிட்டு, கையெழுத்துப் போடு’ன்னு மிரட்டினார். முகப்பேர் 89-வது வட்ட அ.தி.மு.க. செயலாளர் 'ரவுண்ட் பில்டிங்’ குமார், சரஸ்வதி, அருள், கண்ணன் போன்றோர் கூட்டுச் சதி செய்து எனது சொத்து ஆவணங்களைத் திருடிவிட்டார்கள். உடனே ஜெ.ஜெ. நகர் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டரிடம் புகார் கொடுத்தபோது, எந்த நடவடிக்கையும் இல்லை. அடுத்​தடுத்து இன்ஸ்பெக்டர்கள் மாறியும் இதே நிலைதான். கடைசியில் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தேன். கடந்த 11-ம் தேதி ரவுண்ட் பில்டிங் குமார், சரஸ்வதி உள்ளிட்ட அனை​வரையும் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்தனர். அடுத்த சில மணி நேரத்தில் அம்பத்தூர் தொகுதி எம்.எல்.ஏ-வான வேதாச்சலம் அங்கு வந்து, 'ரவுண்ட் பில்டிங்’ குமாரை அழைத்துச் சென்றுவிட்டார். 'குமார் தலைமறைவாகிவிட்டார். மற்றவர்களைக் கைது செய்துவிட்​டோம்’ என்று போலீஸார் சொல்​கிறார்கள். நில அபகரிப்பு புகாரில் தி.மு.க-வினர் மீது நடவடிக்கை எடுக்கும் முதல்வர் ஜெயலலிதா, சொந்தக் கட்சிக்காரர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்...'' என கண்ணீர் வடித்தார்.
'ரவுண்ட் பில்டிங்’ குமாரை பல முறை தொடர்புகொள்ள முயன்றும், முடியவில்லை. ஜெ.ஜெ. நகர் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் சிங்கராஜிடம் கேட்டோம். ''நான் இந்த விவகாரத்தில் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறேன். விரைவில் பத்திரங்களை கைப்பற்றி அனைவரையும் கைது செய்வோம்...'' என்றார்.
எம்.எல்.ஏ. வேதாச்சலமோ, ''எங்கள் கட்சி சார்பில் போட்டியிடும் சில வேட்பாளர்கள் மீது தி.மு.க-வினர் தேர்தல் தொடர்பான புகார் கொடுத்திருந்தனர். அதற்காகத்தான் ஸ்டேஷனுக்குச் சென்று வாக்குவாதம் செய்தேன். மற்றபடி நிலம், வீடு கொள்ளை அடித்தவர்களுக்கு நான் எப்போதுமே துணை போகமாட்டேன்!'' என்று படபடப்போடு சொன்னார்.

No comments:

Post a Comment