'சிவரக்கோட்டை பகுதியில் இருக்கும் விவசாய நிலத்தில், தி.மு.க-வைச் சேர்ந்தவரான மத்திய ரசாயனத் துறை அமைச்சர் அழகிரி பெயரில் இருக்கும் அறக்கட்டளை சார்பில் கல்லூரி கட்டியிருக்கிறார்கள். இதனால் எங்களின் நீராதாரம் மற்றும் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது' என்று கடந்த சில ஆண்டுகளாகவே புலம்பி வந்தனர் மதுரை மாவட்டம், சிவரக்கோட்டை மக்கள். ஆனால், அதற்கு யாருமே செவி சாய்க்கவில்லை.தற்போது அ.தி.மு.க. ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருக்கும் நிலையில், விஷயத்தைக் கையில் எடுத்திருக்கும் மாவட்ட ஆட்சியர் சகாயம், அதிரடி நடவடிக்கைகளில் இறங்க, ஆனந்தக் கூத்தாடத் தொடங்கியுள்ளனர் சிவரக்கோட்டை மக்கள்!
''மதுரை-விருதுநகர் நான்கு வழிச்சாலையில் கொஞ்சம் பச்சை இருக்குதுனா... அது சிவரக்கோட்டை ஒரு காரணம். மழைக் காலத்துல தண்ணீர் வர்ற கமண்டல நதியும், எவ்வளவு மழை பெய்ஞ்சாலும் தேக்கி வெச்சிக்கிடுற கரிசல்குளம் கம்மாயும்தான் காரணம். இதை நம்பி, சிவரக்கோட்டையில மட்டுமே 356 ஏக்கர் நஞ்சை நிலம் இருக்குது.மூணு வருஷத்துக்கு முன்ன திடீர்னு கம்மாக் கரையை ஒட்டி இருந்த வயல்களை சிலர் விலைக்கு வாங்க ஆரம்பிச்சாங்க. தர மறுத்தவங்கள மிரட்டி நிலத்தைப் பறிச்சாங்க. காந்தி அழகிரி பேர்ல அதையெல்லாம பதிவு பண்ணின பிறகுதான், 'பெரிய மனுஷங்க’ சமாச்சாரம்ங்கிற விஷயமே புரிஞ்சுது. விவசாய நிலத்தை வாங்கினதால, 'கண்மாய் நீரைப் பயன்படுத்துவோர் சங்கத் தலைவர்'ங்கற பதவிக்கு வந்துட்டாங்க காந்தி அழகிரி. ஒருவேளை விவசாயம் பண்ணுற ஐடியா வெச்சுருப்பாங்க போலனு நினைச்சோம். கொஞ்ச நாள்லயே, அவங்க பேர்ல இருந்த நிலங்களை மு.க. அழகிரி கல்வி அறக்கட்டளை பெயருக்கு மாத்திட்டு, இன்ஜினீயரிங் காலேஜ் கட்ட ஆரம்பிச்சுட்டாங்க.
நஞ்சை நிலத்துல கட்டடங்களைக் கட்டக்கூடாதுனு சட்டமே இருக்கு. அதை மீறினதோட, கண்மாயில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் வெளியேறுற 4-வது மடை, சின்ன, சின்ன வாய்க்கால் எல்லாத்தையும் மூடிட்டாங்க' என்று நிறுத்தியவர், வறண்ட தொண்டையை தண்ணீரில் நனைத்துக் கொண்டு தொடர்ந்தார்.'நீர்வள நிலவளத் திட்டத்தின் கீழ் கரிசல்குளம் கண்மாயை தூர்வாரணும்னு சிவரக்கோட்டை விவசாயிங்க பல வருஷமா கரடியா கத்திக்கிட்டு இருக்கோம். பொதுப்பணித்துறை அதிகாரிங்க கண்டுக்கவே இல்ல. ஆனா, திடீர்னு கண்மாய்க்குள்ள ஒரு கால்வாய் தோண்ட ஆரம்பிச்சுட்டாங்க. பெய்ற மழைத் தண்ணி மொத்தத்தையும் வெளியேத்தி, கண்மாயைக் கட்டாந்தரையா ஆக்கிட்டு, பிற்காலத்துல ஆக்கிரமிக்கிறதுதான் அவங்களோட நோக்கம். இதுக்காக அரசாங்கப் பணம் 40 லட்சம் ரூபாயை செலவு செஞ்சுருக்காங்க. விவசாயிகள் பலரும் ஒண்ணு சேர்ந்து, அப்ப இருந்த கலெக்டருக்கு மனு அனுப்பியும், எந்த நடவடிக்கையும் இல்லை.வேற வழியில்லாமதான் இந்த ஆகஸ்ட்ல மதுரை உயர் நீதிமன்ற கிளையில வழக்கு போட்டோம். மாணவர் சேர்க்கைக்கு தடை போட்ட நீதிமன்றம், பொதுப்பணித்துறை செயலாளர், கலெக்டர், தாசில்தார் எல்லாருக்கும் உத்தரவு போட்டுச்சு.ரெண்டாவது நாளே கலெக்டர் சகாயம் எங்க ஊருக்கு வந்துட்டாரு. கம்மாய் கரை, வயல், வரப்புனு ஆய்வு பண்ணினாரு. 'இது நஞ்சை இடம், 2 போகம் விவசாயம் செய்றோம்'ங்கறதை நிரூபிக்கற வகையில அடங்கல்களைக் காட்டினோம். தவறு நடந்திருக்கறத ஊர்ஜிதம் செய்து கொண்டவர், 'உங்க கண்மாய் பழையபடியே உங்களுக்குக் கிடைக்கும்'னு உறுதி கொடுத்துட்டு போனார். இப்ப அவரு எடுத்துக்கிட்டிருக்கற நடவடிக்கைகள பார்த்தா... அது நிஜமாயிடும்னுதான் தோணுது' என்றார் ஏக எதிர்பார்ப்புடன்.
மாவட்ட ஆட்சியர் சகாயத்திடம் கேட்டபோது, ''ஆதிகாலத்துல, நிலம், பாசன ஆதாரங்கள், இதில் வருகிற வருமானம் போன்றவைப் பாதுகாப்பதும் கவனிப்பதும்தான் கலெக்டரோட அடிப்படையான வேலையா இருந்திருக்கு. மற்ற வேலைகள் எல்லாம் பிற்காலத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டதுதான். ஆக, விவசாயிகளைக் காப்பதும், விவசாய நிலங்களைப் பாதுகாப்பதும்தான் என்னுடைய பிரதானக் கடமை. நான் அந்தக் கடமையைத் தான் செஞ்சுருக்கேன்.
பலவித மிரட்டல்கள், பிரச்னைகளைத் தாண்டி, இந்த விஷயத்தை அரசோட கவனத்துக்குக் கொண்டு வந்த விவசாயி ராமலிங்கம் உண்மையிலேயே பாராட்டுக்குரியவர். அதனாலதான், 'அவர் போலீஸ் பாதுகாப்பு கேட்டா தாராளமா கொடுங்க’னு எஸ்.பி-கிட்ட சொல்லியிருக்கேன்' என்றார்.
இந்நிலையில், இப்பிரச்னை தொடர்பான விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி அழகிரி, அவருடைய மனைவி காந்தி மற்றும் மகன் துரைதயாநிதி ஆகியோருக்கு சம்மன் அனுப்பினார் மாவட்ட ஆட்சியர் சகாயம்!
'அதில் தேவையில்லாத கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார் கலெக்டர் சகாயம். இதில் உள்நோக்கம் இருக்கிறது. எனவே சம்மனை ரத்து செய்ய வேண்டும்' என அழகிரி தரப்பு நீதிமன்ற படியேற, பழைய சம்மனை திரும்பப் பெற்று, சட்டத்துக்கு உட்பட்டு புதிய சம்மன் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
- ராமலிங்கம்
மதுரை மாவட்ட விவசாயிகள் நலச்சங்க செயலாளர் மற்றும் சிவரக்கோட்டை உழவர் மன்றத் தலைவர்
No comments:
Post a Comment