உலகத்தின் எந்த பகுதி மக்கள் வேண்டுமானாலும் திரண்டு வந்து போராடிவிடுவார்கள். ஆனால், அமெரிக்காவில் மட்டும் அது நடக்கவே நடக்காது. காரணம், முதலாளித்துவத்தை ஆதரிக்கிற குணம் அமெரிக்கர்களின் ஜீனிலேயே உண்டு என்று சொல்வார்கள். ஆனால், அடி மேல் அடி விழும் பட்சத்தில் அமெரிக்க மக்கள்கூட நடுத்தெருவுக்கு வந்து போராடத் தயங்க மாட்டார்கள் என்பதைத்தான் 'வால் ஸ்ட்ரீட்டை ஆக்கிரமிப்போம்' (Occupy Wall Street) போராட்டம் காட்டுகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக வேலை கிடைக்காமல் திண்டாடும் இளைஞர்கள், ஏதேதோ முதலீட்டுத் திட்டங்களில் பணத்தை போட்டு பணத்தை இழந்தவர்கள், வருமானம் இல்லாததால் வீட்டை விற்றவர்கள், கல்லூரிப் படிப்பை மேற்கொண்டு தொடர முடியாதவர்கள், இத்தனை நாளும் கிடைத்த வந்த அரசு வசதிகள் இனிமேல் நின்றுபோய்விடுமோ என்கிற பயத்தில் நடுங்குபவர்கள் என பலரும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்கிறார்கள்.
இந்த போராட்டத்தில் கலந்து கொள்கிறவர்களின் முக்கிய கோரிக்கையே, 'முதலீடு என்கிற பெயரில் இனிமேலாவது எங்களை ஏமாற்றாதீர்கள்,' என்பதுதான். 'இந்த ஏமாற்று வேலைகளை முன்னின்று நடத்திய நிதி நிறுவனங்களையும் வங்கிகளையும் தண்டிக்க வேண்டும். வங்கிகளின் வேலையே மக்களின் பணத்தை கொள்ளை அடிப்பதுதான். போலீஸ்காரர்கள் இந்த கொள்ளைக்கூட்டத்துக்கு துணை போகிறவர்கள்' என பலகையில் எழுதி இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்கிறார்கள் பலர்.
கிட்டத்தட்ட ஒரு மாத காலத்துக்கு முன்பு நியூயார்க் நகரில் சிறிய அளவில் ஆரம்பமான இந்த போராட்டம் இன்றைக்கு அமெரிக்காவின் பல நகரங்களுக்கும் பரவுகிற அளவுக்கு வீரியம் கொண்டதாக மாறி இருக்கிறது. கடந்த சில நாட்களாக அமெரிக்காவையும் தாண்டி, லண்டன், ரோம் போன்ற நகரங்களிலும் பரவ ஆரம்பித்திருக்கிறது.
எப்படி வெடித்தது போராட்டம்?
இந்தப் போராட்டம் எப்படி வெடித்தது என்பதை புரிந்துகொள்ள வேண்டுமெனில் கடந்த இருபது, இருபத்தைந்து ஆண்டுகளாக அமெரிக்காவில் நடந்துவரும் பொருளாதார மாற்றங்களை கொஞ்சமாவது புரிந்துகொள்ள வேண்டும்.
1970 வரை அமெரிக்க நிதித் துறையை அரசுத் துறை அதிகாரிளே நிர்வாகம் செய்து வந்தனர். ஆனால், எண்பதுகளுக்கு பிறகு அமெரிக்காவின் தனியார் துறை வங்கிகளை சேர்ந்த உயரதிகாரிகள் நிதி நிறுவனங்களின் தலைவர்களாக மாற ஆரம்பித்தனர். குறுகிய காலத்தில் லாபம் சம்பாதிப்பது எப்படி என்கிற நோக்கத்திலேயே யோசிக்கும் தனியார் துறை வங்கி அதிகாரிகள், நிதித் துறையை தலைமை ஏற்று நடத்தும் அதிகாரிகளாக மாறிய பிறகு அதையும் அந்தக் கண்ணோட்டத்திலேயே பார்க்க ஆரம்பித்தனர்.
மக்களுக்கு மீண்டும் மீண்டும் கடன் கொடுத்து அவர்களை பிறவிக் கடன்காரர்களாக மாற்ற ஆரம்பித்தனர். தெரிந்தவர், தெரியாதவர் என அத்தனை பேருக்கும் கடன் கொடுப்பதன் மூலம் வங்கிகள் வளர்வதாகவும், அதனால் நாட்டின் பொருளாதாரம் மிகப் பெரிய வளர்ச்சி காணுவதாகவும் ஒரு மாயையான தோற்றம் காட்டினர். இதனால் 2006, 2007-ஆம் ஆண்டில் அமெரிக்காவில் ரியல் எஸ்டேட் விலை அசுர வளர்ச்சி அடைந்தது.
பலருக்கும் தந்த கடனையே ஒரு முதலீட்டு கருவியாக (கொலாட்டரல் டெப்ட் ஆப்ளிகேஷன்) மாற்றி, அதிலும் பணம் போடச் சொன்னார்கள். இப்படி செயற்கையாக உயர்த்திக் கொண்டு செல்லப்படும் வளர்ச்சி எத்தனை நாளைக்குத் தாங்கும்? ஒழுங்காக இரண்டு ஆண்டுகள்கூட கொண்டு செல்ல முடியவில்லை. எக்கச்சக்கமாக கொடுத்த கடன் திரும்ப வராமல் போக ஆரம்பித்தது. இதனால் லெமன் பிரதர்ஸ் வங்கி திவாலானது. பல லட்சம் பேர் பணத்தை இழந்தார்கள். இந்த பிரச்னையால் அமெரிக்க பொருளாதாரமே அதலபாதாளத்துக்கு போய், உலக அளவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட காரணமாக மாறியது.
அன்றே வெடித்திருக்க வேண்டிய மக்கள் எழுச்சிதான் இந்த வால் ஸ்டீரிட் முற்றுகைப் போராட்டம். ஆனால், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இப்போது எழுந்திருக்கிறது. ஏன் இந்த தாமதம் என்று கேட்கிறீர்களா?
என்ன நடந்தது? எதனால் நாம் வேலை இழந்தோம் என்பதை புரிந்து கொள்ள மக்களுக்கு கொஞ்சம் அவகாசம் தேவைப்பட்டிருக்கலாம். அரசாங்கம் தன்னுடைய தவறுகளைத் திருத்திக் கொள்ள ஒரு வாய்ப்பை மக்கள் தந்திருக்கலாம். ஆனால், அவர்களின் எந்த எதிர்பார்ப்பும் நிறைவேறாத பட்சத்தில் போராட்டத்தில் குதிப்பது தவிர வேறு வழியே இல்லை என்று மக்கள் இப்போது போராடத் தொடங்கி இருக்கலாம்.
ஆனால், கசப்பான உண்மை என்னவெனில், மக்கள் எதற்காக இந்த போராட்டம் செய்கிறார்கள், என்னென்ன மாற்றங்களை கொண்டு வந்தால் மக்களின் பணம் கொள்ளை போகாமல் இருக்கும் என்பதை பற்றி எல்லாம் புரிந்து கொள்ள முடியாத நிலையில் இருக்கிறார் அமெரிக்க அதிபர் ஒபாமா. அவரைப் பொருத்தவரை வால் ஸ்ட்ரீட்தான் அமெரிக்க பொருளாதாரத்தையே நகர்த்திக் கொண்டு செல்லும் தேர்ச் சக்கரம். என்ன பிரச்னை வந்தாலும் சக்கரத்தை கழற்றிவிட்டால் பின்பு வண்டி எப்படி ஓடும்? அதே நேரத்தில் மக்களையும் கண்டுகொள்ளாமல் இருக்க முடியாது. எனவே, வால் ஸ்ட்ரீட்டுக்கு பங்கம் வராமல் மக்கள் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என ஒபாமா சொல்வது வழக்கம் போல வழவழா கொழகொழா.
வழக்கமாக இது மாதிரியாக உருவாகும் போராட்டங்களுக்கு உடனே ஒரு தலைவர் பிறப்பார். செயலாளர், பொருளாளர் என புதுப்புது தலைவர்கள் தோன்றி இந்த போராட்டத்தை எடுத்துச் செல்வார்கள். ஆனால், 'ஆக்குபை வால் ஸ்ட்ரீட்’ போராட்டத்தை பொருத்தவரை, தலைவர் என இதுவரை யாருமில்லை. 'எங்களுக்கு நிறபேதமில்லை; ஆண், பெண் வித்தியாசமில்லை. எந்த அரசியல் சித்தாந்தங்களுக்கும் நாங்கள் அடிமை இல்லை' என பிரகடனம் செய்துவிட்டு, போராடிக் கொண்டிருக்கிறார்கள். இது ஒருவகையில் நல்ல விஷயம் என்றாலும் தலைமை இல்லாமல் இருப்பது பிற்காலத்தில் இந்த இயக்கம் சின்னஞ்சிறிய அளவில் முடிந்து போய்விடக்கூடிய விஷயமாக இருக்கும்.
மும்பையும் முற்றுகையிடப்படுமா?
சரி, 'ஆக்குபை வால் ஸ்ட்ரீட்' போராட்டம் போல நமது மும்பையில் வருமா? இந்த கேள்வியை பங்குச் சந்தை வட்டாரத்தில் இருக்கும் ஒரு பொருளாதார நிபுணரிடம் கேட்டோம். "இப்போதைக்கு பெரிய அளவில் வருவதற்கு வாய்ப்பில்லை," என்று சொன்னார் அவர். அதற்கான காரணங்களையும் அவர் எடுத்துச் சொன்னார்.
"அமெரிக்க முதலீட்டுச் சந்தை போல நம்மூர் முதலீட்டுச் சந்தை அத்தனை வெறி கொண்டதல்ல. சாதாரண மக்கள் தங்கள் ஓய்வுக் காலத்துக்கென சேமித்து வைத்த பி.எஃப். பணத்தை பங்குச் சந்தையில் போட்டால் என்ன தப்பு என்று கேட்கிற ஊர் அது.
ஆனால், நம்மூரில் அப்படியல்ல. ஆயிரம் முதலீட்டுத் திட்டங்கள் இருந்தாலும் அதை கண்காணிப்பதற்கு ஆர்.பி.ஐ, செபி, ஐ.ஆர்.டி.ஏ., ஆம்ஃபி என பல அமைப்புகள் இருக்கிறது. மக்களின் பணம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த அமைப்புகள் பல்வேறு விதிகளை உருவாக்கி வைத்திருக்கிறது. இதனால் மக்களின் பணம் பாதுகாப்பாக இருக்கும் என்கிற போது, அவர்கள் ஏன் ரோட்டுக்கு வந்து போராடப் போகிறார்கள்? அடிப்பட்டவன்தான் போராடுவான். நம் மக்களுக்கு இன்னும் அந்த மாதிரியான அனுபவம் வருவதற்கான சூழ்நிலையே ஏற்படவில்லையே!" என்றார் அவர்.
'ஆக்குபை வால் ஸ்ட்ரீட்' போராட்டம் அமெரிக்க நிதித் துறையில் பாரதூரமான மாற்றங்களை ஏற்படுத்தாவிட்டாலும் சிற்சில அடிப்படை மாற்றங்களை கொண்டு வரும் என்பதில் சந்தேகமில்லை.
No comments:
Post a Comment