தடதடக்கும் தமிழருவி மணியன்
வைகோவுக்காக ஊர் ஊராகப் போய் தனது காந்திய மக்கள் இயக்கம் சார்பாக தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார் தமிழருவி மணியன். கடந்த 10-ம் தேதி இரவு திருப்பூர், அரிசிக் கடை வீதியில் ம.தி.மு.க. மேயர் வேட்பாளர் நாகராஜனை ஆதரித்துப் பிரசாரக் கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்தில் தமிழருவி மணியன் பொளந்து கட்டிவிட்டார்.
''நண்பர்களே... திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது எனக்கொன்றும் பகைமை கிடையாது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது எனக்கொன்றும் காதலும் கிடையாது. ஆனால், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வர வேண்டும் என நான் விரும்பினேன். சமூக நலன் சார்ந்து சரி என்றால், இயம்புவது என் தொழில். தவறு என்றால், எதிர்ப்பது என் வேலை. எனக்காக இந்த மேடையில் வந்து நான் நிற்கவில்லை. உங்களுக்காக... மக்களுக்காக வந்து நிற்கிறேன்.
திராவிட முன்னேற்றக் கழகம் கடந்த ஐந்து வருடங்களில் ஒட்டுமொத்தத் தமிழகத்தையும் கபளீகரம் செய்தது. இன்றைக்கு நில அபகரிப்பு வழக்குகளை முன்னாள் அமைச்சர்கள் மீது ஜெயலலிதா தொடுக்கும்போது, எந்த அதிர்வலைகளும் இல்லை. ஆட்சி நடத்தியதில் செலுத்திய கவனத்தைவிட அடுத்தவன் சொத்தை அபகரிப்பதில்தான் தி.மு.க. அதிகக் கவனம் செலுத்தி இருக்கிறது. நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், கலைஞருக்கு மாற்று ஜெயலலிதா என்பது தவிர்க்க முடியாத உண்மை. தீமைதான்... ஆனாலும் தவிர்க்க முடியாத தீமை!
நன்மையும் தீமையும் கலந்ததுதான் அரசியல். குறைந்த தீமை எது... அதிகப்பட்சத் தீமை எது என்பதைக் கண்டறிந்து குறைந்த தீமையைக் கட்டித் தழுவி.... அதிகம் பரவி இருக்கும் தீமையை அழித்தொழிக்க வேண்டும். அதைத்தான் கடந்த தேர்தலில் நாம் செய்தோம்.
கொள்கை பரப்புச் செயலாளரைப் போல அ.தி.மு.க-வுக்காக ஐந்து ஆண்டு காலம் இயங்கிய மனிதன் வைகோ. நான் வைகோவிடமே ஒரு முறை சொன்னேன். 'எம்.ஜி.ஆரைத் தி.மு.க-வில் இருந்து கருணாநிதி தூக்கி எறிந்தார். அந்தக் காலத்தில் இருந்து சாகும் வரை கருணாநிதியைக் கடுமையாக எதிர்த்தே வந்தார். உங்களையும் அதே போலத்தான் கருணாநிதி தூக்கி எறிந்தார். ஆனால், நீங்கள் எம்.ஜி.ஆரைப் போல கருணாநிதியை எதிர்க்கவில்லை. நீங்கள் அன்பு சார்ந்த மனிதர். அதுதான் உங்களது பிரச்னை’ என்று சொன்னேன். தவறுகளில் இருந்து பாடங்களைப் பெறுபவன்தான் மனிதன். வைகோவுக்கு இப்போது காலம் வழங்கிய வரம் என்ன தெரியுமா? அவருக்குப் பக்கத்தில் இருந்த அத்தனை சந்தர்ப்பவாதிகளும் காலத்தால் கழட்டி வீசப்பட்டுவிட்டார்கள். இன்று வைகோவின் தலைமையைக் கேள்வி கேட்க எவரும் இல்லை.
தேர்தலுக்கு முன்பு வரை ஜெயலலிதா எல்லோரையும் தேடி வருவார். தேர்தல் முடிந்த பிறகு ஜெயலலிதாவை நீங்கள் தேடிப் போக வேண்டும். போனாலும் பார்க்க முடியாது. ஜெயலலிதா என்பவர் யார்? அவர் பழங்காலத்துப் பேரரசியின் மறு வடிவம். ஒரு பேரரசிக்கு உரிய சர்வலட்சணத்தோடுதான் அவர் அரசியல் நடத்துவார். அதற்கு உட்பட்டுத்தான் நீங்கள் அவரோடு இருக்க வேண்டும்.
திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு குடும்பத்துக்காக நடத்தப்படும் கட்சி. கருணாநிதிக்கு கணுக்காலில் இருந்து தலை வரை மூளை. அவ்வளவு மூளையும் தன்னைப்பற்றியே சிந்திக்குமே தவிர, இந்த மண்ணைப்பற்றி சிந்திக்காது.
இந்த உள்ளாட்சித் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இரண்டையும் மறுதலித்துவிட்டு நீங்கள் வாக்களிக்கப் புறப்பட வேண்டும். அதே நேரத்தில் திருச்சி இடைத் தேர்தலில் நீங்கள் அ.தி.மு.க-வுக்கு வாக்களிக்க வேண்டும். என்னடா மணியன் முரண்பாடாகப் பேசுறானே என்று நினைக்காதீங்க.
தி.மு.க. கடைசிக் கட்டத்தில் இருக்கிறது. அதற்கு நீங்கள் மீண்டும் ஆக்சிஜன் கொடுத்துவிட்டால், அது விஸ்வரூபம் எடுத்துவிடும். கலைஞர் எழுந்தால் அவரை வீழ்த்துவது சிரமம். ஜெயலலிதாவை வீழ்த்த யாரும் புறப்படத் தேவை இல்லை. அவரே வீழ்ந்துவிடுவார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் கடைசி அத்தியாயத்தை எழுதுவதுதான் பெரியார் வளர்த்தெடுத்த திராவிட இயக்கத்துக்கு நல்லது. அப்போதுதான் திராவிட இயக்கத்தின் எச்சமான வைகோ விஸ்வரூபம் எடுப்பார். இந்த இனத்தின் எதிரிகள் இரண்டு பேர். ஒன்று கருணாநிதி. இன்னொன்று கதர்ச் சட்டை அணிந்த காங்கிரஸ்காரர்கள் ஒவ்வொருவரும்.
நான் சாகும் வரை எந்தக் கட்சியிலும் சேர மாட்டேன். அதே நேரத்தில் அரசியலில் சக்தி மிக்க... ஆளுமை மிக்க ஒரு கட்சி உருவாக வேண்டும் என்று நான் விரும்புகிற நேரத்தில், என் கண் முன் தெரிகிற மனிதர் வைகோ.
கூலிக்காகப் பேசும் பேச்சாளர் இல்லை நான். ஆனால், திருப்பூர் ம.தி.மு.க. வேட்பாளர் நாகராஜனுக்காக வாக்கு கேட்டு வந்திருக்கிறேன். எதற்காக? நாகராஜன் நல்ல மனிதர். அதோடு அகத்திலும் புறத்திலும் தூய்மையான வைகோ என்ற மனிதனுக்காக!
அரசியலில் 40 ஆண்டு காலமாகப் பார்த்துப் பார்த்து கருமியின் கவனத்தோடு நான் சேர்த்துவைத்திருக்கும் என் நம்பகத்தன்மையை மூலதனமாக வைத்து மண்டியிட்டு மன்றாடி வேண்டுகிறேன். வைகோ என்ற ஒரு நல்ல மனிதனுக்குப் பின்னால் வந்து சேருங்கள். ம.தி.மு.க. எங்கெல்லாம் போட்டி இடுகிறதோ, அங்கெல்லாம் அவர்களுக்கு வாக்களித்து அரசியல் மாற்றத்தை உருவாக்குங்கள்!'' என்று இடியாக முழங்கி முடித்தார்!
No comments:
Post a Comment