ஜூ.வி. நிருபர் படையில் இருந்து 80 பேர் தமிழகம் முழுவதும் களம் இறங்கினார்கள். நகரம், கிராமம், ஆண், பெண் என்று அனைத்துத் தரப்பு களில் இருந்தும் 3,698 பேரை நேரில் சந்தித்தார்கள். இதில் பெண்கள் மட்டும் 1,183 பேர்.சமச்சீர்க் கல்விச் சறுக்கல், பரமக்குடி துப்பாக்கி சூடு உள்ளிட்ட தலைவலிகளில் ஆளும் அ.தி.மு.க-வும் தேர்தல் தோல்வியால் துவண்டிருக்கும் தி.மு.க-வும் தங்கள் செல்வாக்கைக் காட்ட முட்டி மோதுகின்றன இந்த உள்ளாட்சித் தேர்தலில். கம்யூனிஸ்ட்களுடன் கூட்டணி அமைத்து தே.மு.தி.க. போட்டியிடுகிறது. ம.தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் தனித்து நிற்கின்றன. இப்படிப்பட்ட சூழலில் நடக்கும் உள்ளாட்சித் தேர்தலில் மக்களின் மனசை நம் ஜூ.வி. நாடி பிடித்துப் பார்க்காவிட்டால் எப்படி?
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் பல ஆச்சர்ய முடிவுகளை அளித்தது. எதிர்க் கட்சி அந்தஸ்தைக்கூட கொடுக்காமல் தி.மு.க-வை வீட்டுக்கு அனுப்பினார்கள் வாக்காளர்கள். அதன் பிறகு பதவியேற்ற ஜெயலலிதா ஆட்சி எப்படி இருக்கிறது? எதிர்க் கட்சித் தலைவராக விஜயகாந்த்தின் செயல்பாடு எப்படி? உள்ளாட்சித் தேர்தலில் மக்களின் எதிர்பார்ப்பு என்ன? கேள்விகளுடன் சர்வே தாள்களை நீட்டியபோது உற்சாகத்தோடு பூர்த்தி செய்து கொடுத்தார்கள்.
உள்ளூர் வேட்பாளர்களின் செல்வாக்குதான் உள்ளாட்சித் தேர்தலில் எதிரொலிக்கும் என்பது வரலாறு. அதையேதான் சர்வே முடிவும் காட்டுகிறது. சட்டசபைத் தேர்தல் தோல்வியைவிட உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க-வின் நிலை மாறும் என்று அதிகம் பேர் சொல்லி இருக்கிறார்கள்.
அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால், சட்டம் ஒழுங்குப் பிரச்னை இருக்காது என்பார்கள். ஆனால், பரமக்குடி துப்பாக்கிச் சூடு மக்களின் மனதில் பாதிப்பை உண்டாக்கியதால், 'சட்டம் - ஒழுங்கு சுமாராகத்தான் இருக்கிறது’ என்று அதிகம் பேர் சொல்லி இருக்கிறார்கள். தி.மு.க-வினர் மீதான நில அபகரிப்பு நடவடிக்கை நியாயமானதுதான் என்று மிக அதிகமான மக்கள் நம்புகிறார்கள். கடந்த சட்டமன்றத் தேர்தலோடு ஒப்பிடும்போது ஜெயலலிதா மீதான நம்பிக்கையில் சிறு சரிவு தெரிகிறது. இந்தப் பக்கம் தி.மு.க-வின் மீதும் பெரிய நம்பிக்கை ஏற்படவில்லை. மொத்தத்தில் 'மக்கள் மனசு’ என்ன என்பதை உங்கள் பார்வைக்கு முன்வைக்கிறோம்!
*********************************************************************************
No comments:
Post a Comment