மன்மோகன் சிங் ஒரு மரபார்ந்த அரசியல்வாதி இல்லை என்பதாலேயே, மக்களின் உணர்வுகள் அவருக்குப் புரிவது இல்லை என்று அங்கலாய்ப்பவர்கள் உண்டு. அது பெரும் தவறு. வாய்ப்பு கிடைக்கும்போது எல்லாம், தான் ஒரு தேர்ந்த அரசியல்வாதி என்பதை அவர் நிரூபித்துக்கொண்டேதான் இருக்கிறார்!கூடங்குளம் அணு உலைச் செயல்பாடுகளை முடக்கக் கோரி தொடர் உண்ணாவிரதம் இருந்த மக்களின் பிரதிநிதிகளை அவர் சந்தித்த அன்று, டெல்லியில் அரசு ஆதரவு ஊடகங்கள் புல்லரித்தன, நாட்டின் கடைக்கோடிக் கிராம மக்களின் உணர்வுகளுக்கும் போராட்டத்துக்கும்கூட பிரதமர் முக்கியத்துவம் அளிக்கிறார் என்று. அதே நாளில்தான், 'இந்தப் போராட்டத்தின் பின்னணியில் அந்நிய சக்திகள் இருக்கலாம் என்றும் 1,000 கோடி வரை இத்தகைய போராட்டங்களுக்காக அந்தச் சக்திகள் களம் இறக்கி இருக்கலாம்’ என்றும் இந்திய அணு சக்தித் துறை, மத்திய உளவுத் துறைக்கு ஒரு குறிப்பை அனுப்பி இருக்கிறது.
ஒரு போராட்டத்தை முடக்கவும் போராடும் மக்களைக் கொச்சைப்படுத்தவும் இதைவிட ஓர் அரசாங்கம் நாசூக்கா கவும் தந்திரமாகவும் செயல்பட முடியுமா என்ன?போராட்டக்காரர்களிடம், ''மக்களுடைய பாதுகாப்புதான் முக்கியம்'' என்று திரும்பத் திரும்ப வாக்குறுதி அளித்தார் பிரதமர். ஆனால், அதற்கு முதல் நாள்தான் கூடங்குளம் அணு உலை தொடர்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்குமாறு, தமிழக முதல்வருக்குக் கடிதம் அனுப்பினார். எதிர்கால வளர்ச்சிக்கு அணு சக்தியின் தேவை எந்த அளவுக்கு முக்கியம் என்று அவருடைய கட்சிக்காரர்கள் பிரசங்கம் நடத்தினார்கள்!போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பிரதமரை நன்கு புரிந்துவைத்து இருந்தார்கள். அவருடைய பசப்பு வார்த்தைகளில் அவர்கள் ஏமாறவில்லை. அடுத்தகட்டப் போராட்டத்துக்கு நாள் குறித்தார்கள். அணு உலைச் செயல்பாட்டுக்கு ஆதரவாக தமிழக முதல்வருக்கு பிரதமர் இரண்டாவது கடிதம் அனுப்பியபோது, கூடங்குளம் அருகே உள்ள இடிந்தகரை மீண்டும் போராட்டக் களமானது. இந்த முறை தொடர் உண்ணாவிரதத்துடன் சாலை மறியல், அணு உலை முற்றுகைப் போராட்டங்களையும் கையில் எடுத்திருக்கிறார்கள் மக்கள்.இந்தப் போராட்டத்தின் முக்கியத்துவத்தை இந்தியா எந்த அளவுக்கு உள்வாங்கிக்கொண்டு இருக்கிறது என்று தெரியவில்லை. இந்தப் போராட்டத்தில் அமர்ந்திருக்கும் மக்களில் பெரும்பான்மையினர் அடித்தட்டு மக்கள் - ஏழை மீனவர்கள் - படிப்பறிவு அற்றவர்கள். ஆனால், அவர்கள் அவர்களுக்காக மட்டும் போராடவில்லை; உலகளாவிய ஒரு பிரச்னைக்காகப் போராடுகிறார்கள், அசாத்தியத் துணிச்சலுடனும் உறுதியுடனும்!
இந்தக் கட்டுரை உருவாக்கத்தின்போது, ஜப்பான் தலைநகர் டோக்கியோவிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மணிக்கு 2.7 மைக்ரோ சீவெர்ட்ஸ் அளவுக்கு அணுக் கதிர்வீச்சு பரவி இருக்கும் செய்தியை பி.பி.சி. அறிவிக்கிறது. யகொஹாமாவில் உள்ள ஓர் அடுக்கு மாடிக் குடியிருப்பில் ரத்தப் புற்றுநோயை உருவாக்கும் 'ஸ்ட்ரான்டியம் - 90’ கதிரியக்கப் பொருள் கண்டறியப்பட்டதாகச் செய்திகள் கூறுகின்றன. பூகம்பம் மற்றும் சுனாமியால் ஃபுகுஷிமா அணு உலை பாதிக்கப் பட்டது மார்ச் மாதத்தில். இப்போது அக்டோபர் மாதம். டோக்கியோ ஃபுகுஷி மாவில் இருந்து 230 கி.மீ. தொலைவில் இருக்கிறது. யகொஹாமா நகரமோ இன்னும் அதிக தொலைவில் இருக்கிறது. இந்தச் செய்திகள் வெளியான அதே நாளில்தான் பத்திரிகைகளில் இந்திய அணு சக்தித் துறை கொடுத்துள்ள விளம்பரம் சொல்கிறது, 'அணு உலைகள் பாதுகாப்பானவை; கவலை வேண்டாம்’ என்று!கடந்த ஒரு வாரமாக நிலக்கரித் தட்டுப்பாட்டால் நாடே இருளில் சிக்கி இருக்கிறது. பல மாநிலங்களில் 9 மணி நேரம் வரை மின் வெட்டு. கிராமங்களில் மொத்த மின் விநியோகமே 2 அல்லது 3 மணி நேரம்தான்!
இந்தியாவின் எரிசக்தித் தேவையில் 55 சதவிகிதத் தேவையை நிலக்கரிதான் பூர்த்திசெய்கிறது. மின்சாரத்தின் தேவை அதிகரித்து வரும் நிலையில், ஏற்கெனவே பற்றாக்குறை நிலவுகிறது. தவிர, இப்போது வெள்ளம், தொடர் போராட்டங்கள் காரணமாக நிலக்கரி உற்பத்தி கடுமையாகப் பாதித்து இருப்பதால், முன்னெப்போதும் சந்திக்காத சிக்கலைச் சந்தித்து இருக்கிறது நம்முடைய எரிசக்தித் துறை. நாட்டின் மொத்த மின் உற்பத்தி நிறுவுத்திறனான 99,503 மெகா வாட்ஸில் பாதி அளவு திறன்கொண்ட 29 முக்கிய அனல் மின் உற்பத்தி நிலையங்கள், அடுத்த சில நாட்களுக்கான நிலக்கரி கையிருப்பையே வைத்திருக்கின்றன. சீரான மின் உற்பத்திக் குக் குறைந்தது ஒரு மாதக் கையிருப்பு அவசியம்.இப்போது ஏற்பட்டு இருக்கும் சிக்கலை, அடுத்த ஓரிரு வாரங்களுக்குள் அரசு கட்டுக்குள் கொண்டுவந்துவிடலாம். ஆனால், இது ஓர் எச்சரிக்கை. தொழில் துறை சார்ந்து வளரும் ஒரு நாடு, எரிசக்தித் துறையில் தொலைநோக்கோடு திட்டங்களைத் தீட்ட வேண்டிய அவசியத்தையும் புதிய எரிசக்திக் கொள்கையை உருவாக்க வேண்டிய தேவை யையும் நிர்பந்திக்கும் எச்சரிக்கை!
ஒருபுறம், நம்முடைய எரிசக்தித் தேவை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இன்னொருபுறம், அணு சக்தி அதற்குத் தீர்வு இல்லை என்பதும் தெரிகிறது. என்ன செய்யலாம்?
விகடன்
No comments:
Post a Comment