''கல்லூரியில் படிக்கும் தம்பி, கிரவுண்டில் விளையாடியபோது கழுத்தில் அடிபட்டுவிட்டான். 'சாதாரண வலி' என்று இருந்துவிட்டோம். தற்போது கைகள் மரத்துப் போவதும், வலி ஏற்படுவதுமாக
அவதிப்படுகிறான். 'அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்’ என்கிறார் மருத்துவர். மிகவும் இள வயதிலிருக்கும் அவனுக்கு ஆபரேஷன்தான் தீர்வா... மாற்று சிகிச்சை இருக்கிறதா?''
டாக்டர் ஜெகராம், எலும்புமூட்டு சிறப்பு அறுவைசிகிச்சை நிபுணர், திருச்சி
''வாகனங்களில் 'ஷாக் அப்சார்பர்ஸ்' (Shock absorbers) உள்ளது போல, கழுத்து - உடல் இடையே இயற்கையாக நமக்கு அமைந்த ஷாக் அப்சார்பர்ஸ், கழுத்துவட்டு ஜவ்வு கள். இவை, கழுத்தின் பல்வேறு செயல்பாடுகளின்போது கழுத்தெலும்புகள் ஒன்றோடு ஒன்று உரசி தேய்ந்துவிடாமல் தவிர்க்க உதவுகின்றன. பொதுவாக, நாற்பது வயதைத் தாண்டியவர்களுக்கு இந்த ஜவ்வின் செயல்பாட்டில் தொய்வு தென்படும்.
டூ-வீலரில் அதிகம் பயணம் செய்பவர்கள், கனரக வாகன டிரைவர்கள், கம்ப்யூட்டரில் பெரும்பாலான நேரத்தைக் கழிப்பவர்களுக்கு இந்தப் பிரச்னை முன்கூட்டியே வர வாய்ப்புள்ளது. உரிய பயிற்சிகள் மற்றும் தற்காப்புகளை மேற்கொண்டால் பாதிப்புகளைத் தவிர்க்கலாம்.
உங்கள் தம்பியைப் போல, விபத்து மற்றும் விளையாட்டுத் தருணங்களில் அடிபடும்போது இளம் வயதினருக்கும் இந்த கழுத்துவட்டு ஜவ்வு, உடலுக்குச் செல்லும் நரம்புகளை அழுத்தும் விபரீதம் ஏற்படலாம். மருத்துவ வழக்கில் இதை 'சர்விக்கல் டிஸ்க் ப்ரோலாப்ஸ்' (cervical disc prolapse) என்பார்கள்.
ஆரம்பத்திலேயே வலியை அடையாளமாகக் கண்டு சிகிச்சை எடுத்துக் கொண்டால் பெரும் பாதிப்புகளைத் தவிர்த்து விடலாம். நாள் கடத்தினால்... விலகிய ஜவ்வு, கழுத்திலிருந்து உடலுக்கு செல்லும் நரம்புகளை அழுத்தத் துவங்கி, சம்பந்தப்பட்ட உடல் அவயம் செயலிழக்கத் துவங்கும். கை, கால் என்று உறுப்புகளுக்கான நரம்புகள் கழுத்தில் அழுத்தப்படும்போது அந்த உறுப்பின் வலு முதலில் குறையத் துவங்கும். பிறகு, மரத்துப்போவதையும் படிப்படியாக உணரலாம். பிற்பாடு ஆபரேஷன்கூட முழுமையாக கை கொடுக்காது. நாள் போக்கில் வாதம் வரவும் வாய்ப்புண்டு.
இதற்கு அறுவைசிகிச்சைதான் தீர்வு. பாதிப்பைப் பொறுத்து சம்பந்தப்பட்ட ஜவ்வை நீக்குவது அல்லது மற்றொரு செயற்கை அமைப்பால் 'ரீப்ளேஸ்’ செய்வது போன்றவற்றை எலும்பு அறுவைசிகிச்சை நிபுணர் முடிவு செய்வார்.''
No comments:
Post a Comment