Saturday, October 29, 2011

ராஜாவுக்குக் கல்யாணம்!


உலகில் மன்னர் ஆட்சி நடைமுறையில் இருக்கும் சில குட்டியூண்டு நாடுகளில் ஒன்று, நமது பக்கத்து நாடான பூட்டான். ஓர் அரசக் குடும்பத் திருமணத்துக்கான எந்தவித ஆடம்பரமும் இல்லாமல் மிக எளிமையாக நடந்திருக்கிறது அதன் மன்னர் ஜிக்மி கேஸர் நாம்ஜியால் வாங்சக் (Jigme Khesar Namgyel Wangchuck) திருமணம். திருமணத்துக்குப் பிற நாட்டுத் தலைவர்கள், மன்னர்கள் அழைக்கப்படவில்லை. நண்பர்களாகப் பங்கு கொண்டவர்கள் ராகுல் காந்தி, அமைச்சர் ஜோதிராத்தியா சிந்தியா இருவர் மட்டுமே. பூட்டானின் பழைய தலைநகர் புனாகாவில் இருக்கும் பரம்பரை புத்தர் கோவிலில்தான் திருமணம். மணப்பெண் இருபத்தோறு வயதான ஜெட்சன் பெமா (Jetsun Pema).


இவர், இந்தியாவில் படித்தப் பின் தற்போது லண்டனில் படிக்கும் கல்லூரி மாணவி. ஏற்கெனவே ஆக்ஸ்போர்டிலும் அமெரிக்காவிலும் படித்தவர் என்பது ஐரோப்பிய மீடியா கசியவிடும் தகவல். நான்கு மணிநேரப் பிரார்த்தனைக்குப் பின் மன்னரிடம் தரப்பட்ட சிவப்புத் துணித் தொப்பியை மணமகளுக்கு அணிவித்தார். பிறகு அழைத்துச் சென்று தம் தங்கச் சிம்மாசனத்துக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த தனியாசனத்தில் அமர வைத்தார். அவ்வளவுதான், திருமணம் முடிந்தது. ஜெட்சன் பூட்டான் ராணியாகி விட்டார். வெறும் ஏழு லட்சமே மக்கள் தொகை கொண்ட, எளிமையான வாழ்க்கையில் மிக சந்தோஷமாக இருக்கும் இந்த நாட்டுக்கு, மக்கள் கேட்காமலேயே ஜனநாயக அரசை மக்களிடம் திணித்திருப்பவர் இவரது தந்தை. இதனால் இப்போது 47 உறுப்பினர்கள் கொண்ட பார்லிமெண்ட்டும் இருக்கிறது. இதில் மன்னர் தம் திருமணத்தை அறிவித்த போது, “நாட்டின் ராணியாக வரப்போகிறவர் நல்லவராகவும் மக்களின் நலம் பேணுபவராகவும் இருப்பார்” எனச் சொல்லி இருந்தார். அந்த நாளிலிருந்து மக்கள் ஆவலுடன் ராணியைக் காண காத்திருந்தனர்.

திருமணத்தை பூட்டான் முழுவதும் மக்கள் தங்கள் வீட்டுத் திருமணமாகக் கொண்டாடினர். பேப்பர் போஸ்டர்கள் கூட அனுமதியில்லாத பூட்டானில் முதல் முறையாக டிஜிட்டல் பேனர்களில் மன்னர் தம்பதியின் படம். குடும்ப விழாவாக நடைபெற்ற திருமணத்தைத் தொடர்ந்து மக்கள் கூடியிருந்த ஸ்டேடியத்தில் அவர்களின் வாழ்த்தைப் பெற்ற மன்னரும் ராணியும், அவர்கள் முன் முத்தமிட்டுக் கொண்டது எதிர்பாராத இனிய ஆச்சர்யம். பொது இடத்தில் பெண்களைத் தொடுவது கூடத் தவறு என்று கருதப்படும் நாட்டில் மன்னரின் இந்தச் செய்கை மன்னரை ஹீரோவாகப் பார்க்கும் இளைஞர்களுக்கு மகிழ்ச்சியைத் தந்தது. GDP என்ற வளர்ச்சி குறியீடுபோல GHP என்பது ஒரு நாட்டு மக்களின் சந்தோஷத்தைக் குறிக்கும் குறியீடு. அதில் 148 உலக நாடுகளில் ஏழாவது இடத்திலும், ஆசியாவில் முதல் இடத்திலும் பூட்டான். அதனால்தான் மக்கள் ஆட்சி மலர்ந்திருந்தாலும் மன்னரின் திருமணத்தால் தேசமே சந்தோஷப்படுவதில் ஆச்சர்யமில்லையே.

No comments:

Post a Comment