ராஜன் செல்லப்பா ரணகளப் பேட்டி
இடைநில்லாப் பேருந்தாக காலை 7 மணிக்குத் தொடங்கி இரவு 10 மணி வரை பிரசாரத்தில் ஓடிக்கொண்டு இருக்கிறார் அ.தி.மு.க-வின் மதுரை மேயர் வேட்பாளர் ராஜன் செல்லப்பா. ''மதுரை மாநகராட்சியில் கூடாரம் போட்டு அபகரிக்கும் கூட்டத்தைத் துரத்தாவிட்டால், இனி சொந்த வீட்டில் குடியிருக்கவே தி.மு.க-காரங்க வாடகை கேட்பாங்க...'' - வில்லாபுரம் ஏரியாவில் முழங்கிக்கொண்டு இருந்த ராஜன் செல்லப்பாவிடம் மினி பேட்டி...
''ஹாட்ரிக் வெற்றி கண்ட தி.மு.க-விடம் இருந்து மதுரையை மீட்டுவிட முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறதா?''
''மக்கள் சக்திக்கு மிஞ்சியது எதுவும் இல்லை என்பதை சட்டமன்றத் தேர்தல் நிரூபித்துவிட்டது. அ.தி.மு.க-வுக்கு ஆதரவான அந்த அலை இப்போதும் அப்படியே இருக்கிறது. இங்கு இருந்த தி.மு.க. மேயர்கள் மூவருமே சுதந்திரமாக செயல்படவில்லை. அழகிரி ஆட்டுவித்தபடியே ஆடினார்கள். 'அடுத்தும் நாம்தான் வருவோம்’ என்ற மமதையில் மாநகராட்சிக்குள் தொட்டது அனைத்திலும் ஊழல் செய்தார்கள். அவற்றை வெளிக்கொண்டு வர வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள். இந்த விழிப்பு உணர்வும், அம்மா அறிவித்திருக்கும் நலத் திட்டங்களும் எங்களுக்கு வெற்றியை சுலபமாகத் தந்துவிடும்.''
''ஊழல்கள் என்று பொத்தாம் பொதுவாகச் சொல்லாமல் ஆதாரத்துடன் குறிப்பிட்டுச் சொல்ல முடியுமா?''
''ஒன்றென்ன... ஏகப்பட்ட ஆதாரங்கள் இருக்கின்றன. ஏராளமான கட்டடங்களுக்கு கட்டணம் வசூலிக்காமல் பிளான் அப்ரூவல் கொடுத்தார்கள். அப்பாவிகளிடம் கழுத்தை நெரித்து வரி வசூல் செய்தவர்கள், பல பெரிய வர்த்தக நிறுவனங்களிடம் லஞ்சம் வாங்கிக்கொண்டு 15 ஆண்டுகளாக வரியே வசூலிக்கவில்லை. மாநகராட்சிக்குச் சொந்தமான பல முக்கிய இடங்களை தி.மு.க-காரர்களே ஆக்கிரமித்தார்கள். ஒப்பந்தப் பணியாளர்கள் நியமனத்திலும் ஏகப்பட்ட மோசடி. சாலையே போடாமல் போட்டதாக கணக்குக் காட்டி பல கோடிகளைச் சுருட்டினார்கள். மக்கள் வரிப் பணத்தில் சம்பளம் வாங்கும் துப்புரவுப் பணியாளர்களை, ஒரு வி.ஐ.பி-க்குச் சொந்தமான கல்யாண மண்டபத்தைச் சுத்தப்படுத்த தினமும் அனுப்பி இருக்கிறார்கள். நாங்கள் இதை எல்லாம் கட்டாயம் தோண்டி எடுப்போம். தவறு செய்த யாரையும் தப்பிக்கவிட மாட்டோம்!''
''ஆனால், 'அண்ணன் அழகிரியின் தேர்தல் வியூகம் இந்த முறையும் எங்களை ஜெயிக்கவைக்கும்’ என்று தி.மு.க-வினர் தெம்பாக இருக்கிறார்களே!''
''அழகிரிக்குன்னு ஏதாவது போராட்ட வரலாறு இருக்கா? அரசியல்ரீதியாக எதிர்த்து நிற்கத் துணிவில்லாமல், ஆளும் கட்சியாக இருக்கும்போது மட்டும்தான் அவர் பருப்பு வேகும். போலீஸை வைத்துக்கொண்டு மிரட்டி அரசியல் செய்பவருக்கு பேர் அஞ்சா நெஞ்சனா? உண்மையிலேயே அழகிரி அஞ்சா நெஞ்சனாக இருந்தால், இப்ப மோதிப் பார்க்கட்டும். தன்னைக் காப்பாத்திக்கிறதே அவருக்கு இப்பபெரும்பாடு!''
''தி.மு.க. ஆட்சியில் மதுரைக்குப் பல திட்டங்கள் வந்திருப்பதாக தி.மு.க. வேட்பாளர் பாக்யநாதன் பட்டியல் போடுகிறாரே?''
''இரண்டு முறை ஆளும் கட்சி அந்தஸ்தில் இருந்த மதுரை மேயர்கள் அவர்களுடைய முதல்வரைச் சந்தித்து மதுரைக்காக வாங்கி வந்த சிறப்புத் திட்டங்கள் ஏதாவது உண்டா? உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், திட்டங்களுக்கு நிதி கேட்டு மதுரை மேயர்கள் கருணாநிதியை சந்திக்கவே இல்லை. ஆனால், எங்களது ஆட்சியில் மதுரை தி.மு.க. மேயராக இருந்த ராமச்சந்திரனுக்கு அப்பாயின்ட்மென்ட் கொடுத்து சந்தித்த அம்மா அவர்கள், இரண்டு முக்கியப் பாலங்கள் உள்ளிட்ட திட்டங்களுக்கு அனுமதி கொடுத்தார்கள். அந்தப் பாலங்களைக் கட்டாமல்விட்டதுதான் தி.மு.க-வின் சாதனை.''
'நீங்கள் மேயரானால் மதுரைக்கான சிறப்புத் திட்டங்கள்?''
''அம்மா அறிவித்த மோனோ ரயில் திட்டம் மதுரைக்கு வரும். குடி தண்ணீர்ப் பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வு, விரிவுபடுத்தப்பட்ட பகுதிகளில் புதிதாகப் பாலங்கள், சாலைகள் உள்ளிட்ட திட்டங்களை உடனடியாக நிறைவேற்றுவோம். வன்முறைக் களமாக சித்திரிக்கப்பட்டுவிட்ட மதுரையை உண்மையான கோயில் மாநகரமாக, கல்வி மாநகரமாக, வர்த்தக மாநகரமாக, புறநகரில் தொழிற்சாலைகளைத் தொடங்கி தொழில் மாநகரமாக மாற்றுவதுதான் எங்களின் லட்சியம்!''
''தேர்தல் முடிவு உங்களுக்கு எந்த அளவுக்குச் சாதகமாக அமையும் என்று எதிர்பார்க்கின்றீர்கள்?''
''2 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் எங்களது வெற்றி இருக்கும். இதை மமதையால் அல்ல, அடக்கத்துடன்தான் சொல்கிறேன்!'' - படபடவென பேசிவிட்டு மீண்டும் பிரசார ஜீப்பில் ஏறுகிறார் ராஜன் செல்லப்பா.
No comments:
Post a Comment