Monday, October 31, 2011

பெங்களூரில் பயலலிதா!


66கோடி - காலாவதியான சென்னை கார்ப்பரேஷனின் சில கவுன்சிலர்களைக் கேட்டால் 'பிஸ் கோத்து’ காசு. இது இன்றைக்கு. ஆனால், 15 ஆண்டுகளுக்கு முன்னால் அது மலை அளவுப் பணம். அதுவும், 'எனக்கு ஒரே ஒரு ரூபாய் சம்பளம் போதும்’ என்று பகிரங்கமாக அறிவித்திருந்த ஜெயலலிதாவிடம் இருந்தது என்று அன்றைய அரசு வழக்குப் பதிவு செய்தது.

1996-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 7-ம் தேதி காலையில் போயஸ் கார்டன் வீட்டுக்குள் போலீஸை அனுப்பினார் கருணாநிதி. 'சாமி கும்பிட்டுட்டு வர்றேன்’ என்று பவ்யமாகக் கேட்ட ஜெயலலிதா வுக்கு 'மனித உரிமைகள்’ அடிப்படையில் அனுமதி கொடுத்தார். சென்னை மத்திய சிறைச்சாலையில் 21 நாட்கள் அடைக்கப்பட்ட ஜெயலலிதா ஜாமீன் வாங்கி வெளியில் வந்தார். அவரும் அவரது அமைச்சரவை சகாக்களும் (இதில் கணிசமானவர்கள் இப்போது கருணாநிதிக்குப் பக்கத்தில் இருக்கிறார் கள்!) செய்த ஊழல் குறித்து விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டது. ஜெயலலிதா, தினமும் அந்த நீதிமன்றப் படியை மிதித்தார். (அவருக்காக அப்போது பல கதைகள் சொல்லி வாதாடிய வக்கீல் ஜோதியும் இப்போது கருணாநிதியுடன்!) வழக்குகள், தீர்ப்பு கள், தண்டனைகள், மேல்முறையீடுகள், இரண்டு ஆண்டு சிறை, டான்சி வழக்கில் மூன்று ஆண்டு சிறை, பிறகு விடுவிப்பு என... இந்தச் சமாசாரங்களைத் தொகுத்தாலே, 'அலகாபாத் லா ஜர்னலை’விடப் பெரிதாகிவிடும். ஜோசியம் பார்த்துப் பார்த்து முழு ஜோசியர் ஆனதைப்போல, வக்கீல்களிடம் பேசிப் பேசியே முழு வக்கீலாக முதல்வர் ஆகிவிட்டார்!
இதுவரை 13 வழக்குகளில் விடுபட்டு விட்ட ஜெயலலிதாவுக்குச் சிக்கல் 14-வது வழக்கான சொத்துக் குவிப்பில் வந்தது. 14-வது ஆண்டில் வந்தும் இருக்கிறது. எண் கணித ஜோசியர்கள் இதற்கு என்ன சொல்வார்களோ?
10 ஆயிரம் சேலைகள், பல நூறு வாட்ச்சுகள், செருப்புகள், வெள்ளிப் பாத்திரங்கள், நகைக் கூடங்கள்... அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களின் மதிப்பை லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிகாரி நல்லம நாயுடு 66 கோடி என்று மதிப்பிட்டார். சிறை வைக்கப்பட்ட ஜெயலலிதாவிடம் விசாரணை செய்தவரும் அவர்தான்.
'தங்க நகைகள், வெள்ளிச் சாமான்கள் எப்படிக் கிடைத்தன?’ என்று நல்லம நாயுடு கேட்க... 'கொஞ்ச நகைகள் மைசூர் மகா ராஜா என் தாத்தாவுக்குக் கொடுத் தது. பிறகு, எம்.ஜி.ஆர். எனக்குக் கொடுத்தார். எனக்குப் பிறந்தநாள் அன்பளிப்பாகக் கட்சித் தொண்டர் கள் கொடுத்தார்கள்’ என்று ஜெய லலிதா சொன்னதாகச் சொல்வார் கள்.
சென்னை மத்திய சிறைக்குள் வைத்து 14 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த அதே கேள்வி - பதில் வைபோகம் கடந்த வாரம் கர்நாடக மாநிலம் பரப்பனஹள்ளி அக்ர ஹாரா சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. அந்த இடத்துக்குப் போகக் கூடாது என்பதற்காக ஜெயலலிதா தரப்பு செய்த இழுத்தடிப்புகள் முழு நீள மெகா சீரியலுக்கு உரியவை.
பெங்களூரு சிறப்பு நீதிமன்றம், கர்நாடக உயர் நீதிமன்றம், டெல்லி உச்ச நீதிமன்றம் என வாய்தா மேல் வாய்தா கேட்டு வழக்கை உருளைக்கிழங்காக மாற்றி உருட்டி விளையாடியதைக் கூட்டிப் பார்த்தால், 109 தடவைகள். ஜாமீன் கொடுப்பதும் வாய்தா வாங்குவதும் குற்றம் சாட்டப்பட்டவருக்குச் சட்டம் வழங்கும் சலுகைகள்தானே தவிர, தப்பிப்பதற்கான சந்துபொந்துகள் அல்ல. 75 ஆயிரம் பக்கக் குற்றப் பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ள 42 சாட்சிகள் விசாரித்து முடிந்த நிலையில்... ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய நால்வர் மட்டும் எல்லாச் சட்டங்களையும் மீறிய மனிதர்களாக இத்தனை ஆண்டுகள் வலம் வர முடிந்ததே சட்ட நடைமுறைகளின் துரதிஷ்டம்தான்!
வருமானத்துக்கு அதிகமாக சொத்துச் சேர்த்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் கைதாகி, ஜாமீனில் வெளியே வந்த ஜெயலலிதா, ஆறு மாதங்கள் வெளி நிகழ்ச்சிகளில் பங்கேற்கவில்லை. முதல் கூட்டமாக சேலத்தில் கலந்துகொண்டபோது, ''பொய் வழக்குகள் போட்டுவிட்டதால் மட்டுமே என்னைக் குற்றவாளி என்று கூறும் கருணாநிதியே, ஒரு நிரூபிக்கப்பட்ட குற்றவாளி. 'விஞ்ஞான முறையில் ஊழல் செய்தவர் கருணாநிதி’ என்று சர்க்காரியா கமிஷனே வரிவரியாக எழுதிவிட்டது. இப்படிப்பட்ட இந்த யோக்கியவாதிதான் பொய்யாய்ப் பல கதைகளைப் புனைந்து வீட்டுக்குள் இருந்து என் நகைகளை எடுத்துச் சென்று கோர்ட்டில் கொடுத்துள்ளார். இத்தனை லட்சோபலட்சமான மக்களே எனக்கு அணிகலன்களாக இருக் கும்போது தங்க நகை எதற்கு? இனி அதை வாழ்நாளில் அணியவே மாட்டேன். கோர்ட் மூலம் என் நகைகளை மீட்டு, நான் நிரபராதி என்பதை நிரூபித்துவிட்டு அவற்றை ஏழைக் குழந்தைகளின் நலனுக்குச் செலவு செய்வேன்’ என்று பகிரங்கமாக அறிவித்தார். இதன்படி பார்த்தால், தன்னை நிரபராதியாக அறிவிக்க ஜெயலலிதா அவசரப்பட்டு இருக்கத்தான் வேண்டும். ஆனால், எதிர்மறையாக தாமதப்படுத்தினார்!
அது பொதுக்கூட்ட மேடை. சவால்விட்டார். ஆனால், இது சட்ட மேடை. அதற்குப் பணிந்தும், பயந்தும் போனவர்களில் - குற்றவாளிகள்கூடத் தப்பி இருக்கலாம். சட்டாம்பிள்ளைகள் மாட்டிக்கொண்டு முழித்தார்கள். ஜெயலலிதாவே டான்சி வழக்கில் அப்படி மாட்டியவர்தான். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல்வராகி, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் ஒரு ஷரத்து, அவரைச் சறுக்கி ராஜினாமா செய்யவைத்தது. அந்தச் சட்டத்தின்படி 'மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றவர் தேர்தலில் நிற்க முடியாது’!
பதவி விலகியவர் உச்ச நீதிமன்றத்தின் கதவைத் தட்டினார். ''அரசுப் பணியில் இருப்பவர் அரசு நிலத்தை வாங்கியது தவறு தான். அதை அவர் திருப்பிக் கொடுத்துவிட வேண்டும். செய்த தவறுக்கு அவரே மனசாட்சிப்படி பிராயச்சித்தம் தேடிக் கொள்ள வேண்டும்'' என்று நீதிபதிகள் தீர்ப்பு அளித்தார்கள்.
மூன்று ஆண்டு சிறைத் தண்டனையில் இருந்து ஜெயலலிதாவை விடுவித்த தீர்ப்பே தவிர, அது நிரபராதி என்று விடுதலை செய்த தீர்ப்பு அல்ல. பெங்களூரூ சிறப்பு நீதிமன்ற நீதிபதி மல்லிகார்ஜுனையா என்ன தீர்ப்பு சொல்லக் காத்திருக்கிறார் எனத் தெரிய வில்லை. குற்றம் சாட்டப்பட்டவரின் வாக்குமூலம் என்பது, வழக்கின் இறுதிக் கட்டம்தான். தீர்ப்பு சொல்லக் குறுகிய காலமே இருக்கிறது.
உள்ளாட்சித் தேர்தல் வெற்றிச் செய்தி 21-ம் தேதி குவிந்தது. அதற்கு முந்தைய நாள் திருச்சி இடைத் தேர்தலின் வெற்றிச் செய்தி. ஆனால், எந்த மகிழ்ச்சியையும் அனுபவிக்க முடியாமல் கர்நாடகாவுக்குள் அவரது கார் சுற்றியது. மனசு இன்னும் வேகமாகச் சுற்றி இருக்கும்.
'கோர்ட் மூலம் என் நகைகளை மீட்டு நான் நிரபராதி என்பதை நிரூபித்துவிட்டு...’ என்ற வாசகங்கள் அவரது ஞாபகங்களுக்குள் வந்து போயிருக்குமா?

ஆனந்த விகடன்

No comments:

Post a Comment