எங்கே, எப்படி, யாரைத் தொற்றும் என்று கணிக்கவே முடியாது. யாரையும், எங்கேயும் தாக்கி மிரட்டக்கூடியவை தொற்று நோய்க் கிருமிகள். இதுபோன்ற தாக்குதலுக்கு ஆளாகி உயிர் மீண்டு வந்துள்ளார், இனாம் ஹக்கீம். இவர் ஈராக் நாட்டைச் சேர்ந்த நடிகை.
இவரது இதயத்துக்குள் ஊடுருவிச் சென்று ஆக்கிரமித்து, உயிருக்கே உலைவைக்க இருந்த தொற்று நோய்க் கிருமிகளை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி சாதனை படைத்து இருக்கிறது, சென்னை குளோபல் மருத்துவமனை. தொற்று நோய்க் கிருமிகளை அகற்ற அறுவை சிகிச்சை மேற்கொள்வது, இதுவே முதல் முறை.
சீஃப் கார்டியோதொரசிக் சர்ஜன் டாக்டர் மதுசங்கர் தலைமையிலான குழுவினர்தான், இந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்தார்கள். டாக்டர் மதுசங்கரிடம் பேசினோம்.
''மூன்று மாதங்களுக்கு முன்பு ஈராக் நாட்டில் இருந்து, இனாம் ஹக்கீம் என்ற 24 வயதான பெண் எங்கள் மருத்துவமனைக்கு வந்தார். அவருக்கு தொடர்ந்து இருமல், சளியுடன் ரத்தம் வெளியேறி மிகவும் ஆபத்தான கட்டத்தில் இருந்தார். அந்த நாட்டைச் சேர்ந்த டாக்டர்கள், 'நெஞ்சில் எக்ஸ்ரே எடுத்துப் பார்த்ததில், நுரையீரலின் இரு புறமும் கட்டிகள் நிறைய இருக்கின்றன. அந்தக் கட்டிகளைபயாப்ஸி செய்து பார்த்ததில், புற்றுநோய் என்ற சந்தேகம் எழுகிறது...’ என்று சொல்லி, இந்தியாவுக்கு அனுப்பிவிட்டார்கள்.
நாங்கள் சி.டி. ஸ்கேன் எடுத்துப் பார்த்தோம். நுரையீரலுடன், இதயத்திலும் பாதிப்பு தெரிந்தது. எக்கோ கார்டியோகிராம் தொடங்கி பல்வேறு பரிசோதனைகளைத் தொடர்ச்சியாக மேற்கொண்டோம். இதயத்தின் வலது பக்கம் வீக்கம் இருந்தது. அதை ஆராய்ந்தபோது, பெரிய கட்டி இருந்தது. நாய்ப் புழு எனப்படும் (dog tape worm)ஒரு வகைப் புழுதான் கல்லீரல் தொடங்கி, நுரையீரல், இதயம் வரை தாக்கி இருக்கிறது என்பதை அறிந்தோம்.
நாங்கள் பயாப்ஸி செய்து பார்த்து, 'இது ஒரு வகையான பாக்டீரியா தொற்று... புற்று நோய் இல்லை’ என்று சொன்ன பிறகுதான், அந்தப் பெண்ணுக்கு உயிர் பிழைக்கும் நம்பிக்கையே வந்தது.
உடனே சிகிச்சையைத் தொடங்கினோம். ஹார்ட் லங்க் மெஷின் மூலமாக இதயத்தின் உள்ளே இருந்த புழுக்களை முற்றிலுமாக அகற்றினோம். சுமார் நான்கு மணி நேரம் இந்த அறுவை சிகிச்சை நடந்தது. மாத்திரை, மருந்துகளால் குணப்படுத்திவிடலாம் என்பதால், நுரையீரலில் உள்ள பாக்டீரியாக்களை அகற்றவில்லை.
அவர் மிகச் சரியான தருணத்தில் சிகிச்சைக்கு வந்துவிட்டார். இன்னும் சில நாட்கள் கழித்து வந்து இருந்தால், பாக்டீரியா இதயம் முழுவதும் பரவி இருக்கும். அதைத் தொடர்ந்து இதயம் வெடித்து உயிருக்கு ஆபத்து நிகழ்ந்து இருக்கும்...'' என்று சொன்னவர், நாடாப் புழுக்களைப்பற்றி விரிவாய் பேசினார்.
''பொதுவாக மனிதனின் வயிற்றுக்குள் நூற்றுக்கும் மேற்பட்ட புழுக்களும், பூச்சிகளும் இருக்கின்றன. நம் நாட்டில் அதிகமாகக் காணப்படுவது டேப் வார்ம் எனப்படும் நாடாப் புழுக்கள்தான். இந்த வகைப் புழுக்கள் ஒருவரிடம் நுழைந்து, உடல் முழுவதும் பரவித் தாக்கக்கூடியவை. நாய், ஆடு மூலமாகவே இந்த கிருமிகள் பெருமளவு பரவுகிறது. மனிதனிடம் இருந்து மனிதனுக்குப் பரவுவது இல்லை. ஈராக் போன்ற வளைகுடா நாடுகளில் ஆடுகள் அதிகம் என்பதால் அங்கு உள்ள மனிதர்களுக்கு இந்த பாக்டீரியா பாதிப்புகள் அதிகம் இருக்கும்.
பூனை, நாய், பன்றி போன்ற பிராணிகளை வளர்ப்பவர்கள், முகத்தோடு முகம்வைத்துக் கொஞ்சுவது, கை கழுவாமல் சாப்பிடுவது காரணமாக, இந்த நாடாப் புழுக்கள் உடலுக்குள் நுழைந்துவிடுகின்றன. மனித உடம்புக்குள் புகுந்துவிட்டால், முதலில் ஈரலைத் தாக்கி, கட்டிகளை உருவாக்கும். இந்தக் கிருமிகள் மிக அபூர்வமாகத்தான் நுரையீரலைத் தாக்கும். அதைவிட அபூர்வமாகத்தான் இதயத்துக்குள் நுழையும். இந்தப் புழுக்களால் சிலருக்கு மூளைகூட பாதிப்பு அடைவது உண்டு. சுகாதாரமான உணவு, ஆரோக்கியமான பழக்கங்களைத் தொடர்ந்து கடைப்பிடித்தால் மட்டுமே, பாக்டீரியா கிருமிகளிடம் இருந்து நம்மைக் காத்துக்கொள்ள முடியும்!'' என்றார்.
மரணத்தின் பிடியில் இருந்து தப்பி இருக்கும் இனாம் ஹக்கீமிடம் பேசினோம். ''எனக்கு 18 வயதில் திருமணம் முடிந்தது. மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள். ஐந்து மாதங்களுக்கு முன்பு அடிக்கடி சளி, இருமல் இருந்தது. சளியுடன் ரத்தமும் சேர்ந்து வரத் தொடங்கவே, டாக்டர்களைப் பார்த்தோம். அவர்கள், 'கேன்சராக இருக்க வாய்ப்பு உள்ளது’ என்று சொல்லவே, பயந்துபோய் இங்கே வந்தோம்.
இங்கே பரிசோதனை செய்து கேன்சர் இல்லை என்றதுமே தெம்பாகிவிட்டேன். இதோ ஆபரேஷன் முடிந்துவிட்டது. நிம்மதியாக முழு ஆரோக்கியத்துடன் ஊருக்குக் கிளம்பிக்கொண்டு இருக்கிறேன். உடனே ஓடிப்போய் குழந்தைகளைப் பார்த்துக் கொஞ்ச வேண்டும் என்ற ஆவலுடன் இருக்கிறேன்...'' என்றார் பளிச் புன்னகையுடன்.
நடிகை என்பதை மீறி, அம்மாவாக ஜொலித்தார் இனாம் ஹக்கீம்!
No comments:
Post a Comment