Saturday, October 8, 2011

தங்க நாற்கரச் சாலை - பயணம் பத்திரம்!


தங்க நாற்கரச் சாலைகள், நான்கு வழிப் போக்குவரத்து... என்று சாலை வசதிகள் மேம்படுத்தப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. அதேசமயம், விபத்துகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ஏன்? வாகனங்களின் வேகம், பராமரிப்பு இல்லாமை என்றெல்லாம் சொல்லப்பட்டாலும், முக்கியமான காரணம் அதுவல்ல. போக்குவரத்து விதிகளை நாம் சரிவரப் பின்பற்றுவதில்லை என்பதுதான் முதல் காரணம்!

எப்படி? இந்த விபத்துக்களில் பாதிக்கப்படுபவர்களில், பெரும்பாலோர் வாகனங்களில் பயணிப்பவர்கள் அல்ல; பாதசாரிகள் - நடந்து செல்பவர்கள்தான் என்கிறது ஒரு புள்ளிவிபரம். இவர்கள் எப்படி விபத்துக்கு ஆளாகிறார்கள்? கவனித்துப் பார்த்தால் நம்மிடையே உள்ள அலட்சியம் தெரியும். நடந்து செல்லும்போது, முன்னும் பின்னும் கவனித்துத்தான் நடக்க வேண்டும். மூவராக, நால்வராக சேர்ந்து பேசிக்கொண்டு நடப்பது, காதில் செல்ஃபோனை வைத்துக்கொண்டு பேசியபடியே செல்வது, அந்தப் பேச்சு சுவாரஸ்யத்தில் சிக்னலைக் கவனிக்காமல் சாலையைக் கடப்பது... இதுபோன்ற தவறுகள்தான் பாதசாரிகள் விபத்துக்கு உள்ளாகக் காரணமாகின்றன.


அதேசமயம், வாகன ஓட்டிகளின் கவனமும் மிக அவசியம். விரைவாகச் செல்வது என்பது, விபத்துக்கு உள்ளாகாத அளவுக்கு வேகம் என்றுதான் இருக்க வேண்டும். அப்படி இல்லாமல், அதீத வேகத்துடன் வண்டியைச் செலுத்தினால், சட்டென்று நிறுத்த முடியாது. நிறுத்த வேண்டி வந்தாலோ, வண்டி கவிழவும், விபத்தில் சிக்கவும் நேரிடும். தவிர, நெடுஞ்சாலைகளில் செல்லும்போது, முன்னால் செல்லும் வாகனத்தை முந்த, ஓவர்டேக் செய்ய முற்படும்போது, வலப்புறமாகச் செல்ல வேண்டும். மாறாக, இடதுபுறமாக ஓவர்டேக் செய்ய முனைவது பெரும் தவறு. அதேபோல, மிதவேகமாகச் செல்பவர்கள் சாலையின் இடதுபுறமாகச் செல்வது விபத்தைத் தவிர்க்க உதவும்.

இவை அனைத்தையும் விட முக்கியமான விஷயம் ஒன்றுண்டு. பயணத்தை திட்டமிட்டவுடன், கிளம்பும் நேரத்தை முடிவு செய்யவேண்டும். செல்லும் இடமும், பயணிக்கும் தூரமும், அடைய வேண்டிய நேரமும் நமக்குத் தெரியும். அதனால், முன்னதாகவே கிளம்பி, நிதானமாகப் பயணித்து, பத்திரமாகச் சென்று சேரலாம். ‘சீக்கிரம் கிளம்புதல், நிதானமாகப் பயணித்தல், பத்திரமாய் சென்று சேர்தல்’ என்பதை, பயணத்தின் தாரக மந்திரமாக அமைத்துக் கொண்டால், நம் பயணங்கள் பத்திரமாக நிகழும்.

அதற்கான முயற்சி நம் செயல்பாட்டில்தான் இருக்கிறது. நாம்தான் திட்டமிடவும் வேண்டும்; அதைச் செயல்படுத்தவும் வேண்டும். இந்தத் திட்டமிடலும், செயல்படுத்தலும் நம்முடைய நன்மைக்காக மட்டுமல்ல; மற்றவர்களின் பாதுகாப்புக்காகவும்தான்! செய்யலாம்தானே!

No comments:

Post a Comment