Wednesday, October 19, 2011

தாவரங்களில் சில அதிசயங்கள்!


உலகிலேயே பெரிய மரம் செக்குவாயா. உயரம் 113 மீட்டர். சுற் றளவு 15.5 மீட்டர். மரம்தான் பெரியது; இலையும் விதையும் மிகச் சிறியவை. இலையின் நீளம் 2.5 செ.மீ. விதையின் நீளம் 4 மி.மீ. மரத்தின் வயது 2000 ஆண்டுகளுக்கு மேல். கலிபோர்னியாவின் வட பகுதியில் இந்த மரங்கள் இருக்கின்றன!

உலகிலேயே மிகவும் உயரமான சப்பாத்திக் கள்ளி அமெரிக்காவின் தென்மேற்குப் பகுதியிலும், மெக்ஸிகோவின் வடக்குப் பகுதியிலும் உள்ள பாலைவனங்களில் வளருகிறது. ‘உலக்கைக் கள்ளி’ என்பது இதன் பெயர். உயரம் 15 மீட்டர். வளரும் வேகம் மிகவும் குறைவு. 10 ஆண்டுகளில் 2 செ.மீ. தான் வளரும். சுமார்200 ஆண்டுகள் உயிர்வாழும்!


உலகிலேயே மிகப்பெரிய ஆலமரம் கொல்கத்தா தாவரவியல் தோட்டத்தில் இருக்கிறது. 1782-ம் ஆண்டு முளைத்தது. 464 விழுதுகளுடன் இது வளர்ந்திருக்கும் பரப்பு ஒன்றரை ஏக்கர். அடி மரத்தின் சுற்றளவு 15.5 மீட்டர். மரத்தின் உயரம் 26 மீட்டர். இதன் நிழலில் 7000 பேர்கள் நிற்கலாம். இந்த ஆலமரம் ஓர் ஈச்ச மரத்தின் மேல் முளைத்து வளர்ந்து இவ்வளவு பெரிதாகிவிட்டது.


உலகிலேயே மிக உயரமாக வளரும் செடி, நிலத்தில் இல்லை; நீரில்தான் இருக்கிறது. கடல் பாசி இனத்தைச் சேர்ந்த இதன் தாவரப் பெயர் ‘மாக்ரோ ஸைட்டிக் பைரிஃபெரா. ’ தென் அமெரிக்காவின் தென் கோடியில் உள்ள சமுத்திரத்தில் வளரும் இதன் உயரம் 186 மீட்டர்! நிலத்தில் வாழும் தாவரங்கள் காற்றிலுள்ள ஆக்ஸிஜனைக் கிரகிக்கின்றன. நீரினுள் வாழும் தாவரங்கள் நீரில் கரைந்துள்ள ஆக்ஸிஜனைக் கிரகிக்கின்றன.


மிகப் பெரிய இலை ‘விக்டோரியா ரிஜியா’ என்னும் அல்லியின் இலைதான்! இலையின் குறுக்களவு 1.85 மீட்டர். வட்ட வடிவமான விளிம்பு மேல்நோக்கி வளைந்திருக்கிறது. இலையின் மேல்சிறுவர்கள் உட்கார்ந்தால்கூட தாங்கிக்கொண்டு மிதக்கும்! இதன் பிறப்பிடம் பிரிட்டிஷ் கயானா. கொல்கத்தாவில், இந்தியன் தாவரத் தோட்டத்தில்கூட இந்த அல்லி இருக்கிறது.


உலகிலேயே மிகப்பெரிய மலர் சுமத்ரா தீவில் இருக்கிறது. ஆனால், இதற்குத் தனியாகத் தண்டோ, இலையோ கிடையாது. ஒட்டுண்ணியாக வாழும் இனத்தைச் சேர்ந்தது. மற்றத் தாவரங்களின் தண்டுகளிலும் வேர்களிலும் ஒட்டிக்கொண்டு வளரும். இதன் எடை 15 பவுண்டு. குறுக்களவு சுமார் 1 மீட்டர்! இளஞ்சிவப்பு நிறம். மொட்டு முழு வளர்ச்சி அடைந்து மலர சுமார் ஒரு மாதம் ஆகும். 1918-ம் ஆண்டு ஸ்டாம்போர்ட் ராபிள்ஸ் என்பவர், ஆர்னால்டு என்பவருடன் இதைக் கண்டுபிடித்தார். ராபிள்ஸும்ஆர்னால்டும் கண்டுபிடித்ததால் இந்த மலரின் பெயரை ‘ராபிள்ஸியாஆர்னால்டு’ என்று வைத்தார்கள்.

உலகிலேயே உயரமான மலர்‘அமோர்போ பாலஸ்.’ சுமத்ராவில் இருக்கிறது. மலரின் உயரம் சுமார் 2.5 மீட்டர்! இது 20 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரே ஒரு மலர்தான் மலரும்! மலர்தான் பெரிதே தவிர, துர்நாற்றம் சகிக்க முடியாது!


ஃபின்லாந்தில் வளரும் ‘பைன்’ மரங்களின் வேர்கள்தாம் உலகிலேயே மிகவும்‘நீளமான வேர்கள். ஒரு வேர் பூமிக்குள் சுமார் 50 கி.மீ. தூரம் நீண்டு செல்லும்!


உலகிலேயே மிகப்பெரிய விதை ‘கடல் தேங்கா.’ இதை ‘கடல் பனை’ என்றும்சோல்வார்கள். விதை சுமார் 50 பவுண்டு. மரம், பனை மரம் மாதிரி இருக்கும். பிரஸ்லின் தீவில் வளர்கிறது. உயரம் சுமார் 31 மீட்டர். பெண் மரம் முளைத்து 100 ஆண்டுகள் கழித்துத்தான் பூக்கத் தொடங்கும். கா முற்றுவதற்கு 10 ஆண்டுகள் ஆகும்! விதை முளைப்பதற்கு 3 ஆண்டுகள் ஆகும்!


மரங்களில் ‘ஓக்’ மரத்துக்குத்தான் வேர்கள் அதிகம். ஒரு பெரிய ‘ஓக்’ மரத்தின் வேர்களையெல்லாம் ஒன்று விடாமல் தோண்டியெடுத்து, அவற்றைத் தொடர்ச்சியாக வைத்துக்கொண்டே போனால், அது சுமார் 40,000 கி.மீ. நீளம் இருக்கும்! 2 பூமியின் மேல் ஒரு சுற்று சுற்றிவிடலாம்!

No comments:

Post a Comment