Saturday, October 15, 2011

நகராட்சித் தலைவர்... முந்துவது யார்?


16 நகரங்கள் பரபர ரிப்போர்ட்!

துறையூர்
: இங்கே தி.மு.க-வின் மாவட்ட பிரதிநிதி 'மெடிக்கல்’ முரளி மற்றும் அ.தி.மு.க-வின் நகர அவைத் தலைவர் ரவிவர்மாவுக்கும் போட்டி. முரளி முன்னாள் அறங்காவலர் குழுத் தலைவராக இருந்தபோது கோயில்களுக்கு செய்த பணிகள், பக்தர்கள் மத்தியில் அவருக்கு நல்ல பெயரை ஏற்படுத்திக் கொடுத்து இருக்கிறது. இருந்தாலும் அப்செட்டில் இருக்கும் உட்கட்சிப் பங்காளிகள் ஏதேனும் உள்ளடி வேலையில் ஈடுபடுவார்களோ என்ற கலக்கத்தில் இருக்கிறார். அ.தி.மு.க. வேட்பாளரான ரவிவர்மா கட்சியில் நீண்ட காலம் இருந்திருந்தாலும், கட்சியினர் மத்தியில் அவ்வளவாக செல்வாக்கு இல்லாதவராக இருக்கிறார். அதனால் அவரது பிரசாரம் கொஞ்சம் டல்லடிக்கவே செய்கிறது. அதோடு, துறையூர் நகரப் பகுதி எப்போதும் தி.மு.க-வுக்கு செல்வாக்கான ஏரியா என்பதால், முரளியே முந்துகிறார்!

'விடிந்தால் கல்யாணம்’ என்பது போல் கிட்டத்தட்ட பரபரப்பின் விளிம்பில் நிற்கிறது, உள்ளாட்சி தேர்தல் களேபரம். அரசியல் வானில் அடடா ஆச்சர்யங்களும், அடேங்கப்பா மாற்றங்களும் நொடிக்கு நொடி நிகழ்ந்து கொண்டு இருக்கிற நிலையில், ஒரு ரவுண்டு ஓடி... அடுத்த செட் சேர்மன் வேட்பாளர்களின் நிலையைப் பதிவு செய்து வந்தோம்!
காங்கேயம்: கடந்தமுறை பேரூராட்சித் தலைவராக இருந்த தி.மு.க-வின் சுப்பு என்கிற சுப்பிரமணிக்கும், அ.தி.மு.க-வின் வெங்கு என்கிற மணிமாறனுக்கும்தான் போட்டி. கடந்த ஐந்து ஆண்டு ஆட்சியில் ஊருக்கு எதுவும் செய்யவில்லை என்ற வெறுப்பு சுப்பு மீது இருக்கிறது. கட்சிக்காரர்களும் வேண்டாவெறுப்பாகக் கடமை ஆற்றுகின்றனராம். கடைசி ஐந்து நாட்களில் தாராள செலவுக் கொள்கையைக் கடைப்பிடிக்க முயல்கிறார். கடந்த முறைக்கு முந்தைய தடவை இந்தப் பேரூராட்சியின் தலைவராக இருந்த ஏ.சி.கோவிந்தசாமியின் மகன்தான் அ.தி.மு.க. வேட்பாளர் வெங்கு. அப்பா செய்த நலத்திட்டங்கள், அவருக்கு ஊரிலுள்ள நல்ல பெயர் போன்றவற்றால் பெருவாரியான வாக்குகள் வெங்கு பக்கம் குவியும். இதற்கிடையில் போட்டியில் மளமளவென முன்னேறி வருகிறார் ம.தி.மு.க-வின் ஏ.சி.வெங்கடேசன். இவரது 'மிஸ்டர் க்ளீன்’ இமேஜும், மிக பக்குவமான குணமும் வெங்குவை வெலவெலக்க வைத்திருப்பதும் நிஜம்.
திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி நகராட்சியின் முதல் சேர்மனான மணிமாறனின் மனைவி மைதிலி தி.மு.க. வேட்பாளர். இன்றும் சைக்கிள் மட்டுமே பயன்படுத்துபவர் மணிமாறன் என்கிற எளிமையை மக்கள் அங்கீகரிக்கின்றனர். எதிர்க்கட்சிகளின் மந்தமான செயல்பாடுகள் தி.மு.க-வுக்கு எக்ஸ்ட்ரா பலத்தைக் கொடுக்கிறது. இந்த நகராட்சியை அ.தி.மு.க. கைப்பற்றியதே இல்லை என்பது கூடுதல் பலம். அ.தி.மு.க. வேட்பாளரான உமாமகேஸ்வரிக்கு நகராட்சியில் உள்ள முறைகேடுகள் மற்றும் தி.மு.க-வின் அதிரடி அரசியலை வெறுக்கும் நடுநிலை மக்களின் ஓட்டுகள் பலம். தே.மு.தி.க. ஆதரவுடன் களம் இறங்கி உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் ரேவதியும் மல்லுக்கட்டுகிறார். கடும் போட்டிகளுக்கு இடையே மூச்சு திணறி தி.மு.க. முன்னேறுகிறது.
ஸ்ரீவில்லிபுத்து£ர்: தி.மு.க. சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. தாமரைக்கனியின் மனைவி தேவகி களம் இறக்கி விடப்பட்டுள்ளார். அதுபோல் அ.தி.மு.க. சார்பில் முத்துராஜின் மனைவி செந்தில்குமாரி போட்டியிடுகிறார். புதுமுக வேட்பாளர் செந்தில்குமாரி தேர்தல் களத்தில் கரையேறுவாரா என்ற சந்தேகம் அ.தி.மு.க-வினருக்கு முதலில் ஏற்பட்டது. ஆனால், இப்போது நிலைமை தலைகீழ். ஸ்ரீவில்லிபுத்தூரில் கணிசமான ஓட்டு வங்கியை வைத்திருக்கும் அத்தனை சமுதாயத்தினரையும் கவரும் வகையில் சில ரகசிய ஆஃபர்களை அள்ளிவிட்டுள்ளனர் அ.தி.மு.க. நிர்வாகிகள். கூடவே முன்னாள் எம்.எல்.ஏ. தாமரைக்கனியின் குடும்பத்தினர் மீது உள்ள அதிருப்தியும் இப்போது அ.தி.மு.க-வுக்கு சாதகம். ஒரு வழக்கு விவகாரத்தில் தாமரைக்கனியின் மகன்கள் உள்ளே போய்வந்ததை எல்லாம் மக்கள் மறக்கவில்லை. தேவகி வெற்றி பெற்றால் அவர் நகராட்சித் தலைவராகவும், மகன் தங்கமாங்கனி நகராட்சித் துணைத் தலைவராகவும் ஆகி விடுவார்கள். நகராட்சி நிர்வாகம் மொத்தத்தில் தாமரைக்கனியின் குடும்பத்தின் கைகளுக்குப் போய்விடுமே என உள்ளூர்வாசிகள் அஞ்சுகின்றனர். விளைவு, அ.தி.மு.க-வின் செந்தில்குமாரிக்கு சாதகமான அலை வீசுகிறது.
குளச்சல்: தி.மு.க. மற்றும் அ.தி.மு.க-வுக்கு இடையில் போட்டி நிகழ்ந்தாலும் இவர் கள் திரும்பிப்பார்க்கும் வகையில் முன்னேறி வருகிறார் சுயேச்சை வேட்பாளர் ஜேசையா. தி.மு.க-வின் வேட்பாளராக களமிறங்கியுள்ள நசீர் ஏற்கெனவே நகராட்சித் தலைவராக இருந்தவர். தொகுதியிலுள்ள முப்பது சதவிகித இஸ்லாமிய வாக்குகளே தன்னைக் கரைசேர்த்துவிடும் என்பது இவரது கணிப்பு. அ.தி.மு.க. சார்பாக களம் இறங்கி இருப்பவர் நகர செயலாளர் பெலிக்ஸ் ராஜன். மீனவ சமுதாயத்தை சேர்ந்த இவர், கட்சி செல்வாக்கும், மீனவ மக்களின் வாக்கும் தன்னை கைதூக்கிவிடும் என்று நம்புகிறார். இருந்தாலும் வெற்றி வாய்ப்பு தி.மு.க-வுக்கே சாதகம்!
மன்னார்குடி: அ.தி.மு.க-வின் நிழல் அதிகார மையம் என அரசியல் புள்ளிகளால் விமர்சிக்கப்படும் இடம் மன்னார்குடி. ஆனால், கடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் டி.ஆர்.பி.ராஜாவிடம் தோல்வியைத் தழுவியது அ.தி.மு.க. இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தலில் மன்னார்குடி நகராட்சியை கைப்பற்றியே ஆக வேண்டும் என்கிற கட்டாயத்தில் உள்ளது ஆளும் கட்சி. மக்களிடத்தில் பெரிதும் அறிமுகமில்லாத சுதாஅன்புசெல்வன் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து தி.மு.க. சார்பில் மன்னை நாராயணசாமியின் பேத்தியான மகேஸ்வரி சோழராஜன் களம் இறங்கி உள்ளார். மன்னார்குடி டு சென்னை ரயில் விட்டது, டி.ஆர்.பாலு செல்வாக்கு ஆகியவை தி.மு.க-வை மன்னார்குடியில் வெற்றிகரமாகக் கரை சேர்க்கிறது.
பட்டுக்கோட்டை: பிரபலமான பண்ணவயல் குடும்பத்தைச் சேர்ந்த ஜவஹர்பாபு அ.தி.மு.க. சார்பில் போட்டியிடுகிறார். ஜவஹர்பாபு அமைதியானவர் என்றாலும் அவரைச் சுற்றியுள்ள பலர் மீது அவ்வளவாக நல்ல பெயர் இல்லை. தி.மு.க. சார்பில் நகரச் செயலாளர் சீனி.அண்ணாதுரை போட்டியிடுகிறார். இவர்கள் குடும்பம் மட்டுமே தி.மு.க-வில் அதிகாரம் செய்வது உட்கட்சிக்குள் பலருக்கு வருத்தம். ஆனாலும் தொல்லைகள் கொடுக்க மாட்டார் என்கிற நம்பிக்கையும் வணிக மக்களின் ஆதரவும் கை கொடுக்கிறது. ஆனால் அ.தி.மு.க. தொண்டர்கள் கடுமையாக உழைத்து வருவதால் கடுமையான போட்டிக்கு இடையே நூலிழையில் யார் வேண்டுமானாலும் முந்தக்கூடும்.
சீர்காழி: தி.மு.க-வின் வசம் இருக்கும் சீர்காழி நகராட்சியில் தற்போது தி.மு.க சார்பில் களத்தில் இருக்கும் ஜெ.இறைஎழில், கட்சியினரிடமும் மக்களிடமும் மிகவும் அறிமுகமானவர். கட்சிக்காரர்கள் வீட்டு விஷேசம், கட்சி நிகழ்ச்சிகள் அனைத்திலும் கலந்துகொள்வார். அதனால் கட்சியின் அனைத்துத் தரப்பினரும் அவருக்காக மிக ஆவலாக உழைக்கிறார்கள். அவரை எதிர்த்து அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் வளர்மதி, சத்துணவுத் திட்ட ஊழியர். தேர்தலுக்காக அரசியலுக்குள் அழைத்து வரப்பட்டிருக்கிறார். மக்களிடம் அதிகம் அறிமுகமில்லை. இவருக்கு ஆதரவாக சீர்காழி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சக்தி கட்சிக்காரர்களை விரட்டி வேலை வாங்குகிறார். இருந்தா லும் இவர்களால் தி.மு.க-வின் இறைஎழிலை எட்டிப்பிடிக்க முடியாது என்பதே இறுதி நிலவரம்.
பவானி: பவானி நகராட்சி அ.தி.மு.க வேட்பாளராக போட்டியிடுபவர் கே.சி.கருப்பண்ணன். ஏற்கெனவே எம்.எல்.ஏ-வாக இருந்ததால் பவானிவாசிகளுக்கு அறிமுகமானவர்தான். ஆனால், உருப்படியாக எதையும் செய்யாதது இப்போது உலைவைக்கிறது. அ.தி.மு.க-வின் செல்வாக்கு இவருக்கு கைகொடுக்கலாம். பவானி சிட்டிங் அ.தி.மு.க சேர்மன் எம்.ஆர்.துரை இம்முறை சுயேச்சையாகப் போட்டியிட்டு அ.தி.மு.க-வினரையே அலற வைக்கிறார். இவர் சேர்மனாக இருந்தபோது பவானியில் நல்ல மாற்றங்களை கொண்டுவந்திருப்பதால், தனிப்பட்ட மக்கள் செல்வாக்கு இருக்கிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரும் இவருக்கு ஆதரவுக்கரம் நீட்டியதால், குறிப்பாக அடித்தட்டு மக்களின் ஓட்டு இருப்பதால்... வெற்றி வாய்ப்பு இருக்கிறது.
ஜோலார்பேட்டை: அ.தி.மு.க-வின் வேட்பாளரான ஆசிரியை வசுமதி சீனிவாசனும், தி.மு.க. வேட்பாளரான வழக்கறிஞர் முத்தமிழ் செல்விக்கும் இடையேதான் பலத்த போட்டி. முத்தமிழ் செல்வி, தி.மு.க-வின் நீண்டகால விசுவாசி மட்டுமல்லாமல், மக்களுக்கு நன்கு அறிமுகம் ஆனவர். முத்தமிழ் செல்விக்காகக் கட்சியினர் ஒருமனதாக இறங்கி உழைக்கிறார்கள். ஆனாலும்கூட அ.தி.மு.க. எம்.எல்.ஏ. வீரமணி முழு வீச்சில் வேலைபார்ப்பதால் வெற்றிவாய்ப்பு வசுமதிக்கே என்று தெரிகிறது.
ஆம்பூர்: முன்னாள் எம்.எல்.ஏ இ.ரா.சம்பங்கியின் மருமகள் சாந்தி ராஜி தி.மு.க சார்பாகவும், அரசிய லுக்குப் புதுமுகமான சங்கீதா பாலசுப்பிரமணி அ.தி.மு.க சார்பிலும் போட்டியிடுகிறார்கள். ஏற்கெனவே நகரமன்றத் தலைவர் தேர்தலில் வெற்றிவாய்ப்பை இழந்த சாந்திராஜி இப்போது ஆம்பூர் நகராட்சியை கைப்பற்றியே ஆகவேண்டும் என தீவிரமாக களம் இறங்கி இருக்கிறார். ஆனால், திமுக கூட்டணியிலிருந்து விலகிய முஸ்லிம் லீக் ஓட்டுகள் பெருமளவில் சிதறுவதால், தி.மு.க-வுக்கு வெற்றிவாய்ப்பு பாதகம்தான். குறைந்த ஓட்டுகள் வித்தியாசத்தில் அ.தி.மு-வின் சங்கீதாவே வெற்றி பெறுவார் என்று கொடி தூக்குகின்றனர் ரத்தத்தின் ரத்தங்கள்.
செங்கல்பட்டு: அ.தி.மு.க. சார்பில் முதலில் வேட் பாளராக அறிவிக்கப்பட்டவர் மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் ஆறுமுகம். 'இவருக்கு செல்வாக்கு சுத்தமாக இல்லை’ என்று உள்ளூர் நிர்வாகிகள் போர்க்கொடி தூக்கியதால், நகர அ.தி.மு.க. செயலாளர் குமாரசாமி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். உள்ளூர்க்காரர், கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருவார்...என்றெல்லாம் கட்சியினரிடம் நல்ல பெயர் வாங்கி வைத்திருப்பதால் தெம்பாக இருக்கிறது அ.தி.மு.க. முகாம். இவருக்கு எதிராக களம் இறங்கி இருக்கிறார் தி.மு.க. நகரசெயலாளர் சதீஷ்பாபு (எ) அன்புச்செல்வன். பக்குவமான மனிதர் என்பதும் கட்சி செல்வாக்கும் மட்டுமே இவருக்கு கைகொடுக்கிறது. இரு கழகங்களின் வேட்பாளர்களுமே பணத்தை தாராளமாக செலவு செய்கின்றனர். இருந்தாலும் வெற்றி வெளிச்சம் குமாரசாமி மீதே படர்கிறது.
கடலூர்: இங்கே அ.தி.மு.க வேட்பாளராகக் களம் இறக்கப்பட்டிருப்பவர், சி.கே.சுப்ரமணியன். தி.மு.க தரப்பில் நகர இளைஞரணி செயலாளர் பழக்கடை ராஜா. சுப்ரமணியன் கட்சி யின் சீனியர் என்பதால், நன்கு அறிமுகமானவராக இருக்கிறார். பொதுமக்களும் படித்தவர்களும் ஆளும் கட்சியே வந்தால் அரசின் நலத்திட்டங்கள் எதுவும் தடைபடாது என்கிறார்கள். மீனவர்கள் ஓட்டும் பக்க பலமாக உள்ளதாம். ஆனால், தி.மு.க.வி-லோ கடும் அதிருப்தி நிலவுகிறது. இருக்கும் சீனியர்களுக்கு ஸீட் கொடுக்காமல் ராஜாவுக்கு வாய்ப்பு கொடுத்தது, கட்சியினரை கடுப்பாக்கி யுள்ளது. ஒதுங்கியே நிற்பது மட்டுமில்லாமல், உள்ளடி வேலைகளும் செய்து வருகிறார்களாம். அதனால், கடலூர் நகராட்சி கட்டாயம் அ.தி.மு.க வசம்தான் போகுமாம்.
கொடைக்கானல்: சிட்டிங் சேர்மனான முகமது இப்ராஹிமையே வேட்பாளராக்கி இருக் கிறது தி.மு.க. இவரை முன்கூட்டியே முடக்கிப் போடுவதற்காக நிலமோசடி வழக்கில் கைது செய்தார்கள். இருப்பினும் தனது பிரசாரத்தை வேகமாக செய்து வருகிறார் முகமது இப்ராஹிம். இவரை எதிர்க்கும் அ.தி.மு.க. வேட்பாளரான நகரச் செயலாளர் கோவிந்தன் கட்சியில் சீனியர். அந்த வட்டாரத்தில் இவருக்கு நல்ல செல்வாக்கு இருக்கிறது. கொடைக்கானலின் கிராம பகுதிகளில் இருக்குமளவுக்கு நகரத்தில் தே.மு.தி.க-வுக்கு செல்வாக்கு இல்லை என்பதால், முரசுகொட்டும் அக்கட்சியின் வேட்பாளரான நகரச் செயலாளர் செல்வராஜ் மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்படுகிறார்.
காரைக்குடி: முன்னாள் எம்.எல்.ஏ-வான கற்பகத்தை நிறுத்தி இருக்கிறது அ.தி.மு.க.! படித்தவர், பரிச்சயமானவர் என்ற ப்ளஸ் பாயின்ட்கள் இருந்தாலும், கட்சியின் கோஷ்டி பூசல்கள் இவருக்கு சவால். தி.மு.க. சார்பாக நகர துணைச் செயலாளரான துரை.நாகராஜின் மனைவி பாண்டி மீனாள் இங்கே வேட்பாளர். கற்பகம் அளவுக்கு பரிச்சயமானவர் இல்லை என்றாலும், 'காரைக்குடி தி.மு.க. கோட்டை’ என்ற இமேஜும், காங்கிரஸ் ஆதரவு ஒப்பந்தமும் இவருக்குக் கைகொடுக்கிறது. தே.மு.தி.க. வேட்பாளராகப் போட்டியிடும் மாநில மகளிரணி செயலாளரான பர்வத ரெஜினா பாப்பா நாடாளுமன்ற தேர்தலிலேயே காரைக் குடி நகரத்தில் சுமார் ஆறாயிரம் ஓட்டுகளை வங்கியவர். படித்தவரான இவர் வாங்கும் ஓட்டுகள் ஒவ்வொன்றும் கற்பகத்தின் கனவுகளைக் கலைக்கும்.
அம்பாசமுத்திரம்: இங்கே முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் ஆசியுடன் களம் இறங்கி இருக்கிறார் தி.மு.க. வேட்பாளர் தமிழ்ச்செல்வி. கட்சியினரின் தீவிர பிரசாரமும் கடந்த முறை நகராட்சிப் பகுதியில் நடந்திருக்கும் நலத்திட்டங்களும் தன்னைக் கரை சேர்க்கும் என நம்புகிறார். அ.தி.மு.க வேட்பாளர் செல்விக்கு ஆளும் கட்சி என்பதும், சிட்டிங் எம்.எல்.ஏ-வான இசக்கி சுப்பையா நேரடியாகக் களம் இறங்கித் தேர்தல் பணியாற்றுவதும் எக்ஸ்ட்ரா பலம். தொண்டர்கள் உற்சாகத்துடன் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிக்கிறார்கள். தே.மு.தி.க. வேட்பாளரான வேலம்மாளின் பலமே கூட்டணிக் கட்சியான கம்யூனிஸ்ட்கள்தான். இதுபோக, வேட்பாளராகி இருக்கும் மேலும் சிலரும் வாக்குகளை பிரித்து சிதறச் செய்தாலும், இந்தப் பகுதியில் அ.தி.மு.க-வுக்கு இருக்கும் தனிப்பட்ட செல்வாக்குக் காரணமாக அம்பாசமுத்திரம் நகராட்சி இலை வசமாகும் வாய்ப்பு அதிகம்!
- ஜூ.வி. டீம்
''ஊழல் புகார் இல்லை!''
ஜூ.வி. 9.10.11 தேதியிட்ட இதழில் செங்கோட்டை நகராட்சித் தேர்தல் நிலவரம் குறித்து எழுதியிருந்தோம். அதில் தி.மு.க. வேட்பாளர் ரஹீம் பற்றி அந்தப் பகுதியில் பரவலாக பேசப்பட்ட தகவல்களைக் குறிப்பிட்டிருந்தோம். இது தொடர்பாக ரஹீமின் வழக்கறி ஞர் லூக் ஜெயக்குமார் நமக்கு அனுப்பியுள்ளகடிதத்தில், ''ரஹீம் மீது ஊழல் குற்றச் சாட்டுகள் இருப்பதாக வெளியான செய்தி எந்தவித மான ஆதாரமும் இல்லாத உண்மைக்குப் புறம்பான செய்தி ஆகும். அவர் எந்தவிதமான ஊழலும் செய்யவில்லை. கவுன்சிலர்கள் தாக்கப்பட்ட விவகாரம், செங்கோட்டை நீதித் துறை நடுவர் நீதிமன்றத்தில் சம்பந்தப்பட்ட நபர்களுடன் சமரசமாக முடித்துக் கொள்ளப் பட்டது'' என்று கூறியுள்ளார். குறிப்பிட்ட அச்செய்தியை வெளியிட்டதில் நமக்கும் எந்த உள்நோக்கமும் இல்லை என்பதை தெரிவித்துக் கொள் கிறோம்.

No comments:

Post a Comment