சிலுசிலுவென மழைக் காற்றில் வந்து இறங்கி, சிலுப்பிக்கொண்டு சிரித்த முகமாக அமர்ந்தார் கழுகார்! ''தீபாவளி எப்படி?'' என்றோம்.''நாளும் கிழமையும் நமக்கு வேலைதானே!'' என்று ஆரம்பித்தார் கழுகார்.
''தீபாவளிக்கு முந்தைய நாள் செவ்வாய்க்கிழமை அன்று
மாநகராட்சியின் புதிய மேயர்கள் பதவி ஏற்பு விழா நடந்தது. சென்னை மேயராக சைதை துரைசாமி பதவி ஏற்கும் விழாவுக்கு முதல்வரே நேரில் வந்ததுதான் அனைவரும் எதிர்பாராத ஆச்சர்யம்! முந்தைய நாள் திங்கள் கிழமை கார்டனில் இருந்து துரைசாமிக்கு போன். அவசர அவசரமாகக் கிளம்பினார். அப்போதுதான் முதல்வரும் பதவி ஏற்பு நிகழ்வுக்கு வருகிறார் என்ற தகவல் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது!''''ஏன் இந்த திடீர் ஆர்வம்?’
''சென்னை மாநகராட்சியை முதன் முதலாகத் தன் தலைமையிலான அ.தி.மு.க. கைப்பற்றியதை, தனது நெடுநாள் லட்சியங்களில் ஒன்று நிறைவேறியதாக நினைக்கிறாராம் ஜெயலலிதா. 40-வது ஆண்டு விழாவைக் கொண்டாடி வரும் அ.தி.மு.க. இது வரை ஆறு முறை ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி உள்ளது. ஆனால், ஒரு முறைகூட சென்னை மேயர் பதவியை அடைந்தது இல்லை. முதன் முதலாக ரிப்பன் பில்டிங்கைக் கைப்பற்றியது சந்தோஷத்துக்கு உரிய விஷயம்தானே அவர்களுக்கு! முதலில் சிம்பிள் விழாவாகத்தான் திட்டம் இட்டனர். விழாவில் ஜெயலலிதாவும் பங்கேற்பதாக முடிவானதும்தான்... புதிய தார் ரோடு, வண்ணப் பூச்சு, பேனர்கள், விருந்து, பத்திரிகையில் முழுப் பக்க விளம்பரம், அலங்காரம், டிஜிட்டல் ஸ்கிரீன்கள் என்று ஜெட் வேகத்தில் விழா ஏற்பாடுகள் தடபுடல் ஆகின.''
''முதல்வர் பதவி ஏற்பு போல இருந்தது என்று சொல் லும்!''
''காலையில் இருந்து மழை கொட்டித் தீர்த்ததால், ரிப்பன் மாளிகை வளாகத்தைச் சுற்றிலும் கணுக்காலுக்கு மேல் வெள்ளம். ஜெயலலிதா வந்த பாதையில் மட்டும் தண்ணீரை உடனே வெளியேற்றினார்கள். நான்கு புறமும் வெள்ளநீர் சூழ தீவுக்குள் நடந்தது பதவியேற்பு. கம்பீரமான மேயர் நாற்காலிக்கு பக்கத்தில் ஜெயலலிதா எளிமையான குஷன் நாற்காலியில் உட்கார்ந்திருந்தது கவனிக்கத்தக்கதாக இருந்தது. இன்னொரு சுவாரஸ்யம்...''
''அதையும் சொல்லும்!''
''அன்றைய தினம் முதல்வரின் முகத்தில் சந்தோஷ ரேகைகள் அதிகமாகப் படர்ந்திருந்தன. செல்வம் என்ற கவுன்சிலர் 'அம்மாவின் ஆசியுடன் உறுதி மொழிகிறேன்’ என்றபோது, ஜெயலலிதா குறுக்கிட்டு, 'கடவுள் அறிய’ என்று சொல்லச் சொன்னார். நாகம்மாள் என்ற கவுன்சிலர் 'சட்ட முறைப்படி’ என்பதற்கு பதிலாக 'சட்டைமுறைப்படி’ என்று சொல்ல ஜெயலலிதா வாய்கொள்ளாமல் சிரித்தார்!''
''சில கவுன்சிலர்களுக்கு இந்த உறுதிமொழிப் பத்திரத்தைக் கூடப் படிக்கத் தெரியவில்லை என்பதை நினைத்தால், சென்னை மக்கள் பாவம்தான்!''
''பார்ப்போம்!''
''நெல்லை மாநகர அ.தி.மு.க-வின் உள்கட்சி விவகாரம், மேயர் பதவியேற்பு நிகழ்ச்சியின்போது அப்பட்டமாக அம்பலத்துக்கு வந்துவிட்டது. மாநகராட்சி மேயராக விஜிலா சத்யானந்த் பதவி ஏற்கும் நிகழ்ச்சி 25-ம் தேதி காலை 11 மணிக்கு நடக்கும் என அறிவிக்கப்பட்டது. பி.ஹெச்.பாண்டியன் உள்ளிட்ட கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் அனைவரும் மாநகராட்சிக் கூட்ட அரங்கத்துக்குள் நுழைந்தனர். ஆனால், மாவட்டச் செயலாளரும் அமைச்சருமான செந்தூர் பாண் டியன் மற்றும் மாநகரச் செயலாளர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் வந்து சேரவில்லை. பி.ஹெச்.பாண்டியன் கூட்ட அரங்கத்தில் இருந்ததால், அவரை நேருக்கு நேர் சந்திப்பதைத் தவிர்க்க இருவரும் காலதாமதம் செய்தனர். இதனால் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடிய பின்னர் அரை மணி நேரமாகப் பதவி ஏற்காமல் காத்திருந்தார் விஜிலா.''
''மந்திரியும் மாஜியும் எப்போதுதான் வந்தார்கள்?''
''தொலைபேசியில் அடிக்கடி தொடர்பு கொண்டபடியே இருந்த விஜிலாவின் உதவியாளரை அழைத்த பாண்டியன், 'இன்னும் எவ்வளவு நேரம் காத்திருக்கணும்?’ எனக் காட்டம் காட்டியதும் பதவி ஏற்பு நிகழ்ச்சி தொடங்கியது. மேயர் பொறுப்பு ஏற்றதும் விறுவிறுவென வெளியேறினார் பாண்டியன். அதற் காகவே காத்திருந்தது போல செந்தூர் பாண்டியனும் நயினார் நாகேந்திரனும் உள்ளே நுழைந்தனர்.
நிகழ்ச்சிகள் முடிந்ததைக் கண்டதும் ஆத்திரம் அடைந்த நாகேந்திரன், 'அமைச்சர் வருவதற்குள் என்ன அவசரம்? கொஞ்ச நேரம் காத்திருக்க முடியாதா?’ என்றார் எரிச்சலுடன். அமைச்சர் செந்தூர் பாண்டியன், '11 மணியில் இருந்து 2 மணி வரைக்கும் பதவி ஏற்கலாம்னு முதல்வரே சொல்லி இருக்காங்க. அப்படி இருக்கையில் ஏன் இந்த அவசரம்?’ எனக் கேட்க, தவித்துப்போன விஜிலா அவர்களை சமாதானப்படுத்தினார்.
கவுன்சிலர்களும் கட்சியினரும், 'இவங்களோட கோஷ்டி சண்டையை இப்படிப் பொது இடத்திலா காட்டுவது?’ என ஆதங்கப்பட்டனர்!'' என்று சொல்லிவிட்டு அடுத்த சப்ஜெக்ட்டுக்கு மாறினார் கழுகார்!
''கனிமொழிக்கு ஜாமீன் கிடைக்க இருப்பது ஜெயலலிதாவை அப்செட் ஆக்கி உள்ளதாகச் சொல்கிறார்கள் போலீஸ் வட்டாரத்தில். 'கருணாநிதி டெல்லி சென்று சோனியாவைப் பார்க்கிறார். மறுநாளே கனிமொழியின் ஜாமீன் மனுவை பெரிய எதிர்ப்பு இல்லாமல் ஓகே செய்கிறது சி.பி.ஐ. இப்படியே போனால் ஸ்பெக்ட்ரம் வழக்கே நீர்த்துப்போனாலும் போய்விடும். முதலில் கனிமொழியை விட்டுவிட்டு அடுத்த ஒரு மாதம் கழித்து ஆ.ராசாவை வெளியேவிட்டால், வழக்கே கோவிந்தாதான்!’ என்ற ரீதியில் முதல்வர் சிந்திக்கி றாராம்!''
''அதற்காக...?''
''அதற்காக போலீஸ் வட்டாரத்தில் ரகசியமாக சில செய்திப் பரிவர்த்தனைகள் நடக்கின்றன. ஜாமீன் பெற்று சென்னை வந்து இறங்கும் கனிமொழியைத் தமிழக போலீஸ் வளையத்தில் சிக்கவைப்பதற்கான முயற்சிகள்தான் அது!''
''அவர் மீதுதான் இங்கு எந்த வழக்கும் இல்லையே?''
''இதுவரை இல்லை! ஆனால், எடுக்க எவ்வளவு நேரம் ஆகும்? சென்னை சங்கமத்தை மையம்கொண்டதாக அது இருக்கலாம் என்று இப்போதே சொல்ல ஆரம்பித்து உள்ளார்கள். அந்தக் கலைவிழாவை நடத்துவதற்கு தமிழக அரசின் சுற்றுலாத் துறை பெரும் அளவில் உதவிகள் செய்துள்ளது. இவை வெளிப்படையாக நடந்தவைதான். அந்தக் கணக்கு வழக்குகளை மையமாக வைத்ததாகப் புது வழக்கு அமையலாம் என்கிறார்கள்.''
''கனிமொழி மீது ஜெயலலிதாவுக்கு என்ன கோபம்?''
''அவர் மீதான கோபம் என்பதைவிட மத்திய அரசு மீதான கோபமாகத்தான் பார்க்க வேண்டும். அப்படி ஒரு கைது நடவடிக்கையைச் செய்தால், அது கனிமொழிக்கு அரசியல்ரீதியான பாப்புலாரிட்டியைக் கொடுக் கலாமோ என்ற ரீதியிலும் யோசனை நடக்கிறதாம்!'' என்ற கழுகார்...
''சினிமாப் புள்ளிகள் வட்டாரத்தில் ரகசியமாகப் பேசப்படும் ஒரு செய்தி யில் நான் கேள்விப்பட்டதை மட்டும் சொல்கிறேன்!'' என்று பீடிகை போட்டார்!
''திரைப்பட இயக்குநர் ஒருவருக்குக் கடந்த வாரத்தில் ஒருவர் போன் செய்திருக்கிறார். 'நாங்கள் ஒரே நேரத்தில் 15 படங்களைத் தயாரிக்க இருக்கிறோம். அதில் நீங்கள் ஒரு படம் டைரக்ட் செய்ய வேண்டும்’ என்று கேட்டார். இந்த இயக்குநரும் ஒப்புக்கொண்டார். 'ஒரே நேரத்தில் 15 படம் பண்ணப்போறதா சொல்றீங்களே? உங்க தயாரிப்பாளர் யாரு?’ என்று கேட்கிறார் இயக்குநர். தயங்கித் தயங்கி அந்த மனிதர், 'அவங்கதான்... மேடத்தோட மகள்!’ என்று சொல்லி இருக்கிறார்.''
''மேடம்னா யாரு?''
'' 'எல்லாம் நம்ம மேடம் டாட்டர்தான். அவங்க அமெரிக்காவுல இருக்காங்க. அவங்கதான் இனிமேல் படத் தயாரிப்புல இறங்கப் போறாங்க’ என்று அந்த மனிதர் சொல்லி இருக்கிறார். இதற்கு மேல் அந்த விஷயத்தைத் தோண்டிக் கேட்க, அந்த இயக்குநருக்கும் பயமாக இருக்கவே... போனை வைத்துவிட்டார். இதே மாதிரியான போன் இன்னொரு ஹீரோ- டைரக்டருக்கும் போயிருக்கிறது. 'மேடம் மகள் படம் பண்ணப்போகிறார்’ என்று அப்போதும் சொல்லப்பட்டுள்ளது...''
''கொஞ்சமும் நம்பும்படியாக இல்லையே?''
''மீதியும் சொல்லி முடிக்கிறேன்! குடும்பச் சர்ச்சையில் சிக்கி இருக்கும் டான்ஸ் டைரக்ட ருக்கும் இதேபோல் போன் போனது. அவரிடம் அந்தப் பெண்ணே நேரில் பேசினாராம். மிக மிகச் சுத்தமான தமிழில் ஓர் ஆங்கில வார்த்தைகூடக் கலக்காமல் அந்தப் பெண் பேசி இருக்கிறார். 'நான் இப்போது அமெரிக்காவில் இருக்கிறேன். விரைவில் தமிழகம் வரும்போது உங்களைச் சந்திக்கிறேன்’ என்று சொன்னாராம். இதை சம்பந்தப்பட்டவர்களால் வெளியில் சொல்லவும் முடியவில்லை. சொல்லாமல் இருக்கவும் முடியவில்லை!''
''ஜெயலலிதா குரலில் பேசிக் கலக்கிய வெள்ளியங்கிரி என்பவரின் கைவரிசையாக இது இருக்கலாம் அல்லவா?''
''அதையும் நான் விசாரித்தேன். மிக மிக வறுமையில் வாடும் வெள்ளியங்கிரியிடம் இப்போது செல்போனும் இல்லை. சாப்பாட்டுக்கே வழி இல்லாமல் அவர் கஷ்டப்படுகிறார். எதுவாக இருந்தாலும் அவரே நேரடியாகத்தான் பேசுவார். இந்த மாதிரி பி.ஏ. வைத்துப் பேசும் அளவுக்கு பில்டப் இல்லை அவர். இது வரை வெள்ளியங்கிரி, யாருக்கு போன் செய்தாலும் பாராட்டி சில வார்த்தைகள் சொல்வாரே தவிர... வேறு எந்த கப்சாக்களையும் விட்டதும் இல்லை என்பதால்... இது சந்தேகமாக இருக்கிறது. பட முதலீட்டில் யார் வேண்டுமானாலும் இறங்கலாம். அதற்கு முதல்வரின் பெயரை அதுவும் ரத்த சொந்தம் என்று பூடகமாகச் சொல்லிக்கொண்டு ஏன் செய்ய வேண்டும் என்பதுதான் மர்மமாக இருக்கிறது. அம்மாவின் கோபம் புரியாமல் யாரோ விளையாடுகிறார்கள்!!'' என்று கிளம்பினார் கழுகார்!
ஜுவி
No comments:
Post a Comment