கொடுமையான, கொடூரமான வலி ஏற்படுத்துபவை சிறுநீரகத்தில் உருவாகும் கற்கள். இதை அகற்றுவதற்கான சிகிச்சை முறைகளும் வலி நிரம்பியவையாக இருந்தன. இப்போது கத்தி இன்றி ரத்தம் இன்றி சிறுநீரகக் கற்களை அகற்றும் தொழில்நுட்பம் அறிமுகமாகி இருக்கிறது. இது குறித்து செட்டிநாடு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் எம்.ஜி.சேகர் விரிவாகப் பேசுகிறார்.
''சிறுநீரகத்தில் சிறிய அளவு கல் உருவாகி இருந்தால், அதை மருந்து, மாத்திரை கொடுத்துக்
கரைத்துவிடுவார்கள். ஆனால், அது பெரிய அளவில் இருந்தால், ஓப்பன் சர்ஜரிதான் முன்பு ஒரே தீர்வாக இருந்தது. விலாப் பகுதியில் அறுத்து, விலா எலும்பை வெட்டி, சிறுநீரகத்தை அடைந்து, கல்லை வெளியே எடுத்தனர். இதனால் நோயாளிக்கு மிகப் பெரிய அவஸ்தை ஏற்பட்டதுடன், சிறுநீரகத்தின் செயல்பாடும் குறைந்தது. பின்னர் எக்ஸ்ட்ராகார்போரியல் ஷாக் வேவ் லித்தோடிரிப்ஸி எனப்படும் ஈ.எஸ்.டபிள்யூ.எல். முறை அறிமுகமானது. இது, வெளிப்புறத்தில் இருந்து லேசர் செலுத்தி கல் உடைக்கும் முறை ஆகும். இது குறைந்தது 1 முதல் 1 1/2 செ.மீ. அளவுக்கு மேல் கல் இருந்தால் மட்டுமே பயன்படும். மேலும், அந்தக் கல்லை உடைத்துக் கரைக்க, தொடர் சிகிச்சையும் எடுக்கவேண்டி இருந்தது. உடைக்கப்பட்ட கல் சிறுநீரகக் குழாய் அல்லது சிறுநீர்ப் பையில் சிக்கிக்கொள்ளும் ஆபத்தும் இருந்தது.
இதன் பிறகு சிறுநீரகக் கல்லை உடைத்து வெளியே எடுக்க வந்த சிகிச்சை பி.சி.என்.எல். இது 2.5 செ.மீ. அளவு கல்லைக்கூட உடைத்து வெளியே எடுக்கும் தொழில்நுட்பம். இதன்படி விலாப் பகுதியில் சிறிய துளை இட்டு நெப்ராஸ்கோபி கருவியை செலுத்தி கல்லை உடைத்து, உறிஞ்சி வெளியே எடுக்கப்படும். முந்தைய முறைகளைக் காட்டிலும், வெற்றிகரமானது, பாதுகாப்பானது, மேலானது என்றாலும், இந்த முறையில் ரத்தக்கசிவுக்கு வாய்ப்பு உண்டு. மேலும் சிறுநீரகத்தில் சிறிய துளை இடப்படுவதால் சிறுநீரகத் திசு சிறிது பாதிப்புக்கு உள்ளாகலாம். இந்த முறையில் மூன்று முதல் நான்கு நாட்கள் மருத்துவமனையில் தங்கவேண்டி இருந்தது. இந்தத் தொழில்நுட்பம் அறிமுகம் ஆகி பல ஆண்டுகள் ஆகிவிட்டாலும், நமக்கு இது புதிய தொழில்நுட்பம்தான். தமிழ்நாட்டில் ஒரு சில மையங்களில் மட்டும்தான் இத்தகைய சிகிச்சை அளிக்கப்படுகிறது.
சிறுநீரகத்தில் இருந்து சிறுநீரகப் பை வரை உள்ள குழாயில் கல் சிக்கி இருந்தால், அதை எடுக்கும் வகையில் யூரிட்ரோ ரினோஸ்கோபி என்ற கருவி பயன்பாட்டில் உள்ளது. பிறப்பு உறுப்பு வழியேமெல்லிய பைப் போன்ற அமைப்பை செலுத்தி, காற்று மூலம் கல் உடைத்து எடுக்கும் முறை இது. இதில் 1 செ.மீ. அளவுக்கு உள்ள கல்லைக்கூட எடுக்க முடியும். ஆனால், சிறுநீரகத்துக்கு இந்த பைப்பைக் கொண்டுசெல்ல முடியாது. இப்போது இந்த சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்பட்டு சிறுநீரகம் வரை சென்று கல் எடுக்கும் மற்றும் கல் உடைக்கும் ஆர்.ஐ.ஆர்.எஸ். எனப்படும் லேசர் தொழில்நுட்பம் வந்துள்ளது. இந்த சிகிச்சையின்படி ஓப்பன் சர்ஜரி செய்யத் தேவை இல்லை; துளையிடவும் வேண்டாம். துளிகூட ரத்தக் கசிவும் இல்லை.
மருந்து மாத்திரைக்குக் கட்டுப்படாத சிறிய கற்கள், எங்கே தங்கி உள்ளன என்பதைக் கண்டறிவது கடினமாக இருக்கும். ஆனால், இந்தப் புதிய தொழில்நுட்பத்தில் மிகச் சிறிய கல்லைக்கூட வெளியில் எடுக்க முடியும். இதற்காக ஃப்ளக்சிபில் யு.ஆர்.எஸ். என்ற பைபரால் ஆன மெல்லிய டெலஸ்கோப் பைப் பிறப்புறுப்பு வழியாக உள்ளே செலுத்தப்படுகிறது. இந்த பைப் சிறுநீர்ப் பையைத் தாண்டி சிறுநீரகம் வரை செல்லும். இதன் உள் முனையில் வெளிச்சத்துக்கு சிறிய லைட் பொருத்தப்பட்டிருக்கும். அதை வெளியே இருந்து இயக்கும்போது உள்ளே சிறுநீரகத்தில் உள்ள காட்சிகள் வெளியே திரையில் தெரியும். அதைக்கொண்டு கல் எங்கே உள்ளது என்று தெரிந்துகொள்ள முடியும். சிறிய கல்லாக இருப்பின் இந்த மெல்லிய குழாயில் ஒரு கூடை இருக்கும். அதில் வைத்து வெளியே எடுத்துவந்துவிடலாம். பெரிய கல்லாக இருந்தால், அதை லேசர் கொண்டுதான் உடைத்து வெளியே எடுக்க வேண்டும். இதற்காக அந்த குழாயில் லேசர் கதிரை வெளியிடும் சிறிய கருவி செலுத்தப்படுகிறது. உள்ளே சென்றதும் அந்தக் கல் மீது லேசர் செலுத்தப்பட்டு பொடிப்பொடியாக்கி வெளியே எடுக்கப்படும். ஓர் இருநாளில் நாளில் டிஸ்சார்ஜ் ஆகிவிடலாம். இந்த சிகிச்சைக்கான கட்டணம் கொஞ்சம் அதிகம்தான். இந்த லேசர் கொண்டு சிறுநீரகக் கல் மட்டும் அல்ல, பிராஸ்டேட் சிகிச்சையும் செய்ய முடியும்'' என்கிறார் நம்பிக்கையாக!
No comments:
Post a Comment