Saturday, October 8, 2011

எனர்ஜி பெண் நித்யா!

'திறமை இருந்தும், பொருளாதாரத் தடைகளால எனக்கான வாய்ப்பும் வெற்றியும் தள்ளிப் போயிட்டே இருந்தது. ஆனா... சோர்ந்துடாம முயற்சிகளையும், பயிற்சிகளையும் தொடர்ந்தேன். இதோ... வெளிச்சம் கிடைச்சிடுச்சு!''


கோயம்புத்தூர், ஸ்ரீராமகிருஷ்ணா இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் நான்காம் ஆண்டு படிக்கும் நித்யா, பவர் லிஃப்ட்டிங்கில் தேசிய அளவு சாம்பியன். திகைக்க வைக்கிறது இந்த இளம்பெண்ணின் தீராத எனர்ஜி!- வரும் டிசம்பர் மாதம் ஜப்பானில் நடக்க இருக்கும் சர்வதேச பளு தூக்கும் (பவர் லிஃப்ட்டிங்) போட்டியில் கலந்துகொள்ளப் போகும் மகிழ்ச்சியும், பெருமையும் பொங்குகிறது நித்யாவின் பேச்சில்!

''எங்கப்பா தேசிய அளவில் கபடி போட்டிகளில் விளையாடினவர். அதனால் நானும் விளையாட்டுத் துறையில் சாதிச்சு பெயர் வாங்கணும்னு ஆசைப்பட்டார். என்னோட பலத்தை கணிச்சு, 12-வது வயசுல பவர் லிஃப்ட்டிங் பயிற்சி எடுக்க வெச்சார். பள்ளி ஆசிரியர் சந்திரன் சார் எனக்குத் துணையா நிற்க, 'சௌந்தர்ராஜன் ஜிம்’ல் எனக்குக் கிடைச்ச கடுமையான பயிற்சிகளும் என்னைப் போட்டிகளுக்குத் தயார்படுத்துச்சு'' என்றவர்,

''2002-ல் மாவட்ட அளவிலான போட்டியில் முதல் இடம், அதே வருஷமே மாநில அளவிலான போட்டியிலயும் முதல் இடம் பிடிக்க, எல்லாரும் என்னோட வேகத்தை ஆச்சர்யமா பார்த்தாங்க. தொடர்ந்து, கர்நாடகாவில் நடந்த தேசிய அளவிலான போட்டியில் ரெண்டாவது இடமும், அடுத்த வருஷம் சட்டீஸ்கர் மாநிலத்துல நடந்த தேசிய அளவிலான போட்டியில் மூணாவது இடமும் பிடிச்சேன். என் பயிற்சிகளை இன்னும் நான் கடுமையாக்கினதுக்கு பலனா... ஜம்ஷெட்பூர்ல நடந்த தேசிய அளவிலான போட்டியில முதலிடம் கிடைச்சுது!'' எனும் நித்யாவுக்கு, அடுத்ததாக சர்வதேச போட்டிகளில் கலந்துகொள்ள பலமுறை வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஆனால், பொருளாதார பலமோ, உதவியோ இல்லாததால் தள்ளிப் போய்க் கொண்டே இருந்த வெற்றி, தற்போது கைகூடியிருக்கிறது.

''தைவான் நாட்டுல நடந்த சர்வதேசப் போட்டியில் கலந்துக்கற வாய்ப்பு கிடைச்சுது. ஆனா, அதுக்கான பயண செலவை தாங்கற அளவுக்கு எங்க மிடில் கிளாஸ் குடும்பச் சூழல் இடம் கொடுக்கல. அதனால அந்தப் போட்டியில் கலந்துக்க முடியல. நியூசிலாந்து, மங்கோலியானு அடுத்தடுத்து வந்த வாய்ப்புகளும் இதே காரணத்தால நழுவிப்போக, ரொம்ப ஏமாற்றமா போச்சு. என் அப்பாவும், என் மாஸ்டர் நாகராஜனும் நம்பிக்கை தளராம பயிற்சி கொடுத்துக்கிட்டே இருந்தாங்க. அதோட பலனா... ஜப்பான்ல நடக்கப் போற சர்வேதேச போட்டியில் கலந்துக்கற வாய்ப்பு இப்ப கிடைச்சுருக்கு. நான் படிக்கிற ஸ்ரீராமகிருஷ்ணா இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியும், லயன்ஸ் கிளப்பும் பண உதவி செய்ய முன்வந்திருக்காங்க. கண்டிப்பா மெடலோட வருவேன்!''

- நித்யாவின் கண்களில் மின்னுகிறது கண்ணீரும் கனவும்!



- அவள் விகடன்


No comments:

Post a Comment