விழாவில் அறிவாலயம் கலைஞர் அரங்கம் நிரம்பி வழிந்தும், உயிர்ப்பில்லை. நில அபகரிப்பு புகாரில் வேலூர், பாளையங்கோட்டை, திருச்சி, மதுரை என்று சிறைச்சாலைகளுக்குள் வி.ஐ.பி-க்கள் வாசம் செய்வதால்தான் இந்த கலகலப்பு மிஸ்ஸிங். விதிவிலக்கு - வீரபாண்டி ஆறுமுகம் உட்பட ஒரு சில தலைகள் மட்டுமே. முதலில் மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பாடல் ஒப்பித்தல் போட்டியில் பள்ளி அளவில் முதல் பரிசு பெற்ற எல்.கே.ஜி. மாணவன் ஆல்வின் ஆண்டோ கைதட்டல்களை அள்ளினான். ''தமிழே... நீ வளர்த்த செம்மொழியில் நானும் பேசுகிறேன்...'' என்று சொல்லி பாரதிதாசனின் பாடலைப் பாடியவன் தொடர்ந்து, ''பூட்டப்பட்ட இரும்புக்கூட்டின் கதவு திறக்கப்பட்டது. சிறுத்தையே வெளியில் வா! எலியென உன்னை இகழ்ந்தவர் நடுங்கப் புலியெனச் செயல் செய்யப் புறப்படு வெளியில்!’ என்று பாட... நடப்பு அரசியலோடு ஒத்துப்போக, கலகலத்தது அரங்கம்.
முதலில், சற்குண பாண்டியன் பேச்சை ஆரம்பித்தாலும், பொளந்து கட்டியது அடுத்து வந்த பரிதி இளம்வழுதிதான். ''சட்டசபைத் தேர்தலில் நாம் தோற்றோம் என்பதைவிட, வெற்றியைத் திருட்டுக் கொடுத்தோம். வெற்றி நகை திருடு போவதற்கு சிலர் உதவியாக இருந்தார்கள். அந்த வெற்றி எங்கேயும் போய்விடவில்லை. அடகுக்கடையில்தான் இருக்கிறது. உள்ளாட்சித் தேர்தலில் அதை மீட்டெடுத்துவிடுவோம். 20-ம் தேதி வரப் போகிறது. பெங்களூரு நீதிமன்றத்தில் ஜெயலலிதா ஆஜர் ஆவார். இந்த வழக்கு அதிகபட்சம் ஜனவரியில் முடிவுக்கு வரும். தை பிறந்தால் வழி பிறக்கும். எப்படி முன்பு ஓ.பன்னீர்செல்வத்தை முதல்வர் ஆக்கினோரோ... அதுபோல இப்போது யாராவது ஒருவர் வருவார். அதற்கு இப்போதே கட்சிக்குள் போட்டி நடக்கிறது. அடுத்த சுதந்திர தினத்தில் கோட்டையில் கொடியேற்றப் போவது கலைஞர்தான்!'' என்று ஒரே போடு போட்டார்.
இறுதியாகப் பேசிய கருணாநிதி, ''தி.மு.க-தான் ஆட்சிக்கு வரப்போகிறது என்று லட்சக்கணக்கான மக்கள் சொன்னதை நம்பிக் கெட்டவன் நான். 'தி.மு.க. தோற்றுவிட்டதா?’ என்று மக்கள் ஆச்சர்யப்படும் அளவுக்கு சரித்திரப் பிரசித்தி பெற்ற தோல்வியை சந்தித்திருக்கிறோம். அதிலும் எனக்கு மகிழ்ச்சிதான். ஏதோ தவறு செய்துவிட்டோமே என்று மக்கள் வருந்துகிறார்கள். ஜனநாயகத்தின் விளையாட்டை நாம் ஏற்றுத்தான் ஆக வேண்டும். இந்தத் தோல்வி தமிழக மக்களைத் தாண்டி ஈழத் தமிழர்கள் வரையில் பாதிப்பை உண்டாக்கி இருக்கிறது. இதற்கு விடிவு காலம் வரும். என் உயிர் தமிழ்த் தாயின் மடியில்தான் போகும். தி.மு.க. பட்ட மரமாகாது. பழுத்த மரமாகவே இருக்கும். அதை யாரும் அழிக்க முடியாது. என் உயிரைப் பணயமாகவைத்து நடக்கும் போராட்டத்தில் நாம் நிச்சயம் வெல்வோம்!'' என்றது அவரது கரகர குரல்.
ஸ்பெக்ட்ரம் வழக்கில் எப்படியும் கனிமொழிக்கு ஜாமீன் கிடைத்துவிடும் என்பதால்தான் முப்பெரும் விழாவின் தேதியை மாற்றினார் கருணாநிதி. ஆனால், அவர் நினைத்தபடி ஜாமீன் கிடைக்கவில்லை. மேலும் சி.பி.ஐ. பிடி இறுகியிருக்கிறது. உடல்நலக் குறைவால் ஸ்டாலின் வரவில்லை. அவர் வராததால் துர்க்காவும் வரவில்லை. மத்திய அமைச்சர் அழகிரியும் வரவில்லை. தயாநிதியையும் காணோம். தயாளு அம்மாள், ராஜாத்தி அம்மாள், செல்வி என முன் வரிசையை எப்போதும் பிடிக்கும் குடும்பத்தினர் யாரும் வராமல் வித்தியாசமான விழாவாக முடிந்தது முப்பெரும் விழா!
No comments:
Post a Comment