Monday, October 24, 2011

தடுமாறும் தமிழ் சேனல்கள்!


சென்னை மாநகராட்சித் தேர்தலில், நண்பகல் நேரத்தில், ஒரு வாக்குப் பதிவு மையத்தில், பணியாளர்களிடம் ஒரு கட்சியின் முகவர் சொல்லிக் கொண்டிருந்தார்... “ஸார்... அடுத்த அரை மணி நேரம் பெண்கள் வோட்டுப் போட வரமாட்டாங்க... ஏன்னா ‘சன்’ தொலைக்காட்சியில் ‘அத்திப்பூ’ சீரியல் டைம்.” சேனல்களில் ஒளிபரப்பப்படும் சீரியல்கள் மக்களின் மீது ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் பற்றி இதைவிடச் சிறப்பாகச் சொல்லிவிட முடியாது. சேனல்களில் வரும் பாப்புலர் சீரியல்கள்தான் விளம்பர வருமானத்தை அள்ளிக் கொடுக்கின்றன. இந்த வகையில் பொதிகை தொலைக்காட்சிகளின் தொடக்கக் காலங்களில் ராமாயணமும் மகாபாரதமும், ரொம்பவே கைக் கொடுத்திருக்கின்றன. முக்கியமான சேனல்களில் வரும் சீரியல் நேரத்தைக் கணக்கிட்டுத்தான் சில சின்ன சேனல்கள் தங்களின் முக்கிய நிகழ்ச்சிகளின் நேரத்தை அமைத்துக் கொள்கின்றன. “எங்கள் சேனலைப் பொறுத்தவரை சீரியல்கள் பெரிய வெற்றி பெறவில்லை. பழைய பாடல்களின் தொகுப்பாக தேனருவி என்ற நிகழ்ச்சியை ஒளிபரப்புகிறோம். அதற்குத்தான் நேயர்கள் அதிகம். இருந்தாலும் முக்கிய சேனல்கள் குவிக்கும் விளம்பர வருமானம் போல எங்களுக்கு இல்லை,” என்கிறார் வசந்த் தொலைக்காட்சியின் தலைவர் வசந்த்குமார்.


இன்று தமிழில் ஒளிபரப்பாகும் மூன்று பிரதான சேனல்களைத் தவிர, மற்ற சேனல்கள் தடுமாறத்தான் செய்கின்றன. ஆனால் புதிய சேனல்களும் வந்துகொண்டுதான் இருக்கின்றன. சுப்பிரமணிய சுவாமியின் ஊக்குவிப்பில் ‘கிருஷ்ணா’ என்ற ஆன்மிக சேனல் வருகிறது. மத்திய இணை அமைச்சர் ஜெகத்ரட்சகன் ‘தென்றல்’ என்ற தொலைக்காட்சிக்கான அனுமதியை வாங்கி வைத்திருக்கிறார். “முன்புபோல கிடையாது. இப்போது சேனல் தொடங்க வேண்டுமென்றால் 20 கோடி மூலதனம் காட்ட வேண்டும். அப்போதுதான் மத்திய அரசின் அனுமதி கிடைக்கும்,” என்கிறார் ‘வின்’ தொலைக்காட்சியின் தலைவர் தேவநாதன். இன்று நாடு முழுக்க கிட்டத்தட்ட 600 சேனல்கள் இருக்கின்றன. தொழில்நுட்ப முன்னேற்றத்தால் எல்லா சேனல்களும் டிஜிட்டல் ஒளிபரப்புதான். 90 சதவிகித சேனல்களின் பின்புலத்தில் கண்ணுக்குத் தெரிந்த-தெரியாத அரசியல்வாதிகள் இருக்கிறார்கள். பதவியில் இருக்கும்போது குவிக்கும் பணத்தை வைத்துக்கொண்டு பதவியில் இல்லாதபோதும் சேனலை ஓட்ட பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

கலைஞர் தொலைக்காட்சியின் தொடக்க நாளன்று 10 விநாடிகள் கொண்ட ஒரு ஸ்லாட் விளம்பரத்துக்கு ஒன்றரை லட்சம் வரை கொடுத்திருக்கிறார்களாம். இப்போது அதில் ஐந்து சதவிகிதத்தைக் கூட சேனலில் வசூலிக்க முடியவில்லை. அரசியல் செல்வாக்கு இருந்தால்தான் கேபிள் நடத்துபவர் முதல் பத்து இடங்களில் (prime band) இடம் ஒதுக்குவார். தே.மு.தி.க. எதிர்க்கட்சியாக வந்துவிட்ட நிலையில், கேபிளில் கேப்டன் சேனலை முதல் பத்து இடங்களுக்குள் சேர்த்துவிட்டார்கள். அதேபோல சின்ன சேனல்களை ‘வேண்டாம் போ’ என்று ஒதுக்கும் டி.டி. ஹெச். நிறுவனங்கள், கேப்டனின் சேனலை ஆரத்தி எடுத்து வரவேற்றுவிட்டன. பலத்த போட்டிகளுக்கு இடையில் நிலைநிறுத்திக்கொண்டுள்ள ‘வின்’ தொலைக்காட்சியின் தேவநாதன், “நாங்கள் தொடங்கி ஒன்பது வருடங்கள் ஆகிவிட்டன. ஆனால் மிகுந்த சிரமங்களுக்கு இடையில் வளர்ந்த நாங்கள், எட்டாம் ஆண்டின் தொடக்கத்தில்தான் நஷ்டத்தை ஒழிக்கும் நிலைக்கு உயர்ந்தோம். ஒரு சேனலின் இன்றைய மாதச் செலவு சுமார் ஒன்றரை கோடி. சில வருடங்களுக்கு முன்னர் செயற்கைக்கோள் வாடகை மாதத்துக்கு 36 லட்சம். இப்போது சேனலின் எண்ணிக்கை அதிகம் ஆனதாலும் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாகவும் 9 லட்சமாகக் குறைந்திருக்கிறது. “மெகா சீரியல்கள் எடுக்கும் அளவுக்கு வசதி இருந்தாலும், சரியான விளம்பர வருமானத்தை ஈட்டித்தர முடியாமல் போனால் நஷ்டம் வந்து சேரும். ஒளிபரப்பை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் தான் பெரிய சவால் இருக்கிறது. இப்போது அரசு கேபிள் ஆறுதலான விஷயம். எங்கள் சேனலில் வெளியாகும் செய்திகளுக்கு நேயர்கள் அதிகம். எனவே அந்த நேரத்தில் விளம்பரம் போட்டால் பார்ப்பவர்கள் வேறு சேனலுக்கு மாறிவிடப் போகிறார்கள் என்று விளம்பரம் கூடப் போடுவதில்லை,” என்கிறார் தேவநாதன்.

சின்ன சேனல்களை நடத்துபவர்களுக்கும் சில சமூக அரசியல் நோக்கங்கள் இருக்கின்றன. தவிர, சமூகத்தில் கூடுதலான மதிப்பு மற்றும் செல்வாக்குக் கிடைக்கிறது. எனவே, வரும் காலங்களில் தமிழ் சேனல்கள் பெருகுவதற்கான வாய்ப்பு அதிகமாகவே இருக்கின்றன.ஒரு கிசுகிசுவுடன் முடிப்போம்: புதிய தலைமுறை தொலைக்காட்சியை நடத்துபவர் எஸ்.ஆர்.எம். கல்வி நிலையங்களின் நிறுவனரான பச்சமுத்துவின் மகன் சத்திய நாராயணன். அரசியல் கட்சி நடத்தும் பச்ச முத்து, தேர்தல் நாளன்று வோட்டுப் போடும் காட்சியை அவர்கள் சேனலில் ஒளிப்பரப்பவில்லையாம். “நடுநிலை என்று காண்பிக்க என்னைத் தவிர்க்கிறார்கள். எனவே, என் கட்சி நலனுக்காக வேந்தர் சேனல் என்ற ஒன்றைத் தொடங்கப் போகிறேன்,” என்று படபடக்கிறாராம் பச்ச முத்து!

No comments:

Post a Comment