Tuesday, October 11, 2011

எம்.எல்.ஏ,எம்.பி. தொகுதிகளை ஒழியுங்கள்! பகுதி-5, ஓ பக்கங்கள் - ஞாநி


அரசியலில் பெரும் பணத்தின் தேவையைக் குறைக்க வேண்டுமானால் முதலில் தேர்தல் முறைகளில் சீர்திருத்தம் தேவை. தேர்தல், இரு பகுதிகள் கொண்டது. முதல் கட்டம் பிரசாரம். அடுத்து வாக்குப்பதிவு. பிரசாரத்தில் இரு நோக்கங்கள் உள்ளன. ஒன்று போட்டியிடும் வேட்பாளர் யார் என்பதை வாக்காளர்களுக்குத் தெரியப்படுத்துவது. இரண்டாவது போட்டியிடும் கட்சியின் கொள்கை, செயல்திட்டம் (அப்படி ஏதாவது இருந்தால்) அதை வாக்காளருக்குச் சொல்வது.இந்த இரண்டையும் அரசு செலவிலேயே செய்யலாம். இதை அரசு செய்யமுடியுமா என்ற கேள்வியே தேவையற்றது. போலியோ தடுப்புச் சொட்டு மருந்து பற்றியோ எய்ட்ஸ் பற்றியோ அரசு அனைவர் கவனத்தையும் ஈர்ப்பது போன்றதுதான் இதுவும். வேட்பு மனுக்கள் இறுதி செயப்பட்டவுடன் வேட்பாளர் பெயர், சின்னத்துடன் மாதிரி வாக்குச் சீட்டைத் தயாரித்து ஒவ்வொரு வீட்டுக்கும் தபால்காரர் மூலம் கொடுத்துவிடலாம். ஒரே வாரத்தில் எல்லா வீடுகளுக்கும் வேட்பாளர் பட்டியல் கிடைத்துவிடும்.


கட்சிகளின் கொள்கை, செயல்திட்டம் என்ன என்பதை விளக்க தற்போது தூர்தர்ஷன், ஆல் இந்தியா ரேடியோ இரண்டிலும் நேரம் ஒதுக்குவது போல எல்லா தனியார் தொலைக் காட்சிகளிலும், வானொலிகளிலும் அரசே ஸ்லாட் எடுத்து நேரத்தைக் கட்சிகளுக்குப் பங்கிட்டுத் தர முடியும். பத்திரிகை விளம்பரங்களையும் எல்லா கட்சிகளுக்கும் சமமான அளவில் அரசே வெளியிடலாம். வேட்பாளர் தொகுதி முழுக்கச் சென்று வாக்காளர்களைச் சந்திக்க ஆளுக்கு ஒரு வாகனத்தையும் தினசரி இத்தனை கிலோ மீட்டர் என்ற அடிப்படையில் பெட்ரோல் செலவையும் அரசே அளிக்க வேண்டும். எல்லா ஊர்களிலும் எல்லா கட்சிகளுக்குமாக ஒரே இடத்தில் பொது மேடை ஒன்றை அரசே அமைத்து ஒவ்வொரு கட்சியும் ஒரு நாள் பொதுக்கூட்டம் நடத்த இடம் தரலாம்... இதனால் கட்சிகள் பணத்தை வீணடிப்பதும், இறைப்பதும் தடுக்கப்படும். எல்லா கட்சிகளுக்கும் சமவாய்ப்பு (லெவல் ப்ளேயிங் ஃபீல்ட்) அமையும். இதற்காக அரசுக்கு ஆகக்கூடிய செலவுக்கு அரசே எல்லா பொதுமக்களிடமிருந்தும், கம்பெனிகள், தொழிலதிபர்களிடமிருந்தும் இப்போது முதல்வர் நிவாரண நிதி திரட்டுவது போல, தேர்தல் செலவு நிதி ஏற்படுத்தி வசூலித்துக் கொள்ளலாம். தனி நபர் சுயேச்சைகளின் நிலை இப்போது என்ன? நம்முடைய தேர்தல் முறை கட்சி சார்ந்த ஜனநாயக முறைதான். இதில் நியாயப்படி சுயேச்சைகளுக்கு இடமே இல்லை. கடந்த ஐம்பதாண்டுகளில் சுயேச்சைகள் எல்லாரும் டெபாசிட்டைக் காப்பாற்றிக் கொள்ளும் அளவுகூட வோட்டு வாங்கியதில்லை. ஜெயித்த சுயேச்சைகள் எல்லாம் கட்சிப் பிரமுகர்கள்தான். உட் கட்சிப் பூசலால் டிக்கட் கிடைக்காதவர் சுயேச்சையாக நின்று கட்சியை தன் பக்கம் இழுத்து ஜெயித்திருப்பார். அப்போதும் கட்சிதான் அடிப்படை. சுயேச்சைகளுக்கு நம் தேர்தல் முறையில் இடம் உள்ளாட்சியில் மட்டுமே. இதைப் பின்னர் பார்ப்போம்.

தேர்தலின் அடுத்த கட்டம் வாக்குப் பதிவு. வாக்குச் சாவடிகளில் ரவுடித்தனம் முதல், வாக்காளரை ‘குளிப்பாட்டி’ அழைத்து வருவது வரை தடுக்க வேண்டுமானால், இப்போதைய வாக்குச்சாவடி முறையை ஒழிக்க வேண்டும். ஒரு முறை ராஜாஜி சொன்னது போல வாக்காளர்கள் சாவடிக்கு வருவதற்குப் பதில், வாக்குச் சாவடி வாக்காளரைத் தேடிப் போவதுதான் தீர்வு. இதன் மூலம் ஆள் மாறாட்டம், கள்ள வோட்டு ஒழிக்கப்படும். மிக அதிகமான வாக்குப்பதிவு நடக்கும். இதற்கு வாக்குப்பதிவு தினத்தன்று ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்படும். வாக்குப் பதிவு நேரத்தின்போது யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. போலீஸ் பாதுகாப்புடன் மொபைல் வாக்குச்சாவடி ஊர்தி தெருத் தெருவாக தண்ணீர் லாரி வருவது போல வரும். தண்ணீருக்குக் குடத்துடன் வரிசையாக நிற்பது போல அந்தந்தத் தெரு வாக்காளர்கள் அங்கே வரிசையாக ஊர்திக்குள் சென்று வோட்டுப் போட்டு விட்டு வீடு திரும்பலாம். வாகனத்துக்குள் தேர்தல் அதிகாரியும் வேட்பாளர் பிரதிநிதிகளும் இருப்பார்கள். இந்த ஏற்பாட்டில் கட்சிகளுக்குச் செலவு மிச்சம். அரசுக்கு ஒவ்வோர் இடத்திலும் இப்போது வாக்குச் சாவடி அமைப்பதற்கு ஆகும் செலவைவிட அதிகச் செலவு ஆகிவிடப் போவதில்லை. வாக்கு எண்ணிக்கை மின்னணு இயந்திரம் வந்தபிறகு விரைவானதாகவும் எளிதாகவும் ஆகிவிட்டது.மேலே சொன்னதெல்லாம் நடை முறை சாத்தியமா என்று மலைக்க வேண்டாம். ரயில்வே ரிசர்வேஷனில் கம்ப்யூட்டர், தெருவுக்குத் தெரு ஜெராக்ஸ், எல்லார் கைகளிலும் செல் ஃபோன் என்பதெல்லாம் ஒரு காலத்தில் நினைத்துப் பார்த்திருக்க மாட்டோம். இன்று அவை சாத்தியமாகி விடவில்லையா? சோதனை முயற்சியாக ஒரு தேர்தலில் புதுச்சேரி போன்ற ஒரு மாநிலத்தில் செய்து பார்க்க ஆரம்பித்தால் அடுத்த பத்தாண்டுகளுக்குள் நாடு முழுக்கவும் இது சாத்தியம்.


மேலே சோன்னவை பண ஆதிக்கத்தைக் குறைக்க சிறிய முயற்சிகள். தேர்தல் முறையையே அடியோடு மாற்ற மேலும் புரட்சிகரமான சில மாற்றங்கள் தேவை. அவற்றைப் பார்ப்போம்.முதலில் தொகுதி மேம்பாட்டு நிதி என்ற பெயரில் ஒவ்வொரு எம்.எல்.ஏ.வுக் கும், எம்.பி.க்கும் தரப்படும் கோடிக்கணக்கான ரூபாய் நிதியை நிறுத்த வேண்டும். எம்.பி.களைக் குஷிப் படுத்துவதற்காக மைனாரிட்டி ஆட்சி நடத்திவந்த நரசிம்ம ராவ் அறிமுகப்படுத் திய ஊழல் திட்டம் இது. பத்தாண்டுகள் 12 ஆயிரம் கோடி செலவிட்டும் எந்த உருப்படியான விஷயமும் நடக்கவில்லை என்று ஆய்வுகள் தெரிவித்த பிறகும் அரசுகள் இதைக் கைவிடவில்லை.தொகுதி நிதியை ஒழிப்பதோடு, தொகுதி அடிப்படையில் எம்.எல்.ஏ., எம்.பி. தேர்தல் என்பதே ஒழிக்கப்பட வேண்டும். தொகுதியின் நலனைக் கவனிப்பது என்பது என்ன? குடிநீர், மின்சாரம், சாலைப் போக்குவரத்து, சுகாதாரம், சட்டம் ஒழுங்கு இவைதான் அன்றாடப் பிரச்னைகள். ஒரு தொகுதியில் ஏன் இவற்றைக் கவனிக்க வார்டு உறுப்பினர்/கவுன்சிலர், எம்.எல்.ஏ., எம்.பி. என்று மூவர் தேவை? எம்.எல்.ஏ. என்ற சொல்லின் விரிவு என்ன? மெம்பர் அஃப் லெஜிஸ்லேட்டிவ் அசெம்ப்ளி. அதாவது சட்டமியற்றும் சபை. எனவே எம்.எல்.ஏ.வின் வேலை சட்டங்களை உருவாக்குவது, நிறை வேற்றுவது, திருத்துவது, கண்காணிப்பது முதலியவைதான்.இதையேதான் இந்திய அளவில் எம்.பி.யும் செய்ய வேண்டும். எனவே நடைமுறையில் இவர்கள் தொகுதியில் தேவையே இல்லை. தொகுதியைக் கவனிப்பதோ, பணியாற்றுவதோ இவர்கள் வேலை இல்லை. அது உள்ளாட்சிகளான பஞ்சாயத்து, நகராட்சி, மாநகராட்சி உறுப்பினர்கள் வேலை. மக்கள் தொகை குறைவாக இருந்த காலத்தில், சுமார் 80 ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு வேலைகளும் ஒருவரிடமே இருந்தால் போதுமென்ற நிலை இருந்தது. இன்று அது பொருந்தாது. ஒரு எம்.எல்.ஏ., தொகுதியைச் சுற்றிவர முழுதாகப் பத்து நாள் தேவை. எம்.பி.க்கு 60 நாள் தேவை. எனவே தொகுதியைக் கவனிக்கும் வேலையை கவுன்சிலர்களும் கொள்கையை வகுப்பதை எம்.எல்.ஏ., எம்.பி.களும் செய்வதுதான் சரி.

இதை ஏற்றுக் கொண்டால் அடுத்தபடியாகக் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.கள் எண்ணிக்கையையே குறைத்துவிடலாம். ஒவ்வொரு மாநிலத்துக்கும் மொத்தமாக 100 எம்.எல்.ஏ.க் கள் போதும். மக்களவைக்கு இருநூறு எம்.பி. கள் போதும். எல்லா மாநிலங்களிலிருந்தும் சமமான எண்ணிக்கையில் மாநிலங்களவைக்கு எம்.பி.களை அனுப்பினால், மாநில சமத்துவம் வளரும். தொகுதி அடிப்படையை ஒழித்துவிட்டு எம்.எல்.ஏ., எம்.பி.க்களை எப்படித் தேர்ந்தெடுப்பது? கட்சி அடிப்படையில்தான். அதாவது வாக்குச் சீட்டில் கட்சியின் பெயரும் சின்னமும் மட்டுமே இருக்கும். உங்களுக்குப் பிடித்த கட்சிக்கு நீங்கள் வாக்களிக்கலாம். மொத்தம் பதிவான வாக்குகளில் எந்தக் கட்சிக்கு எவ்வளவு வாக்குக் கிடைத்ததோ அந்த விகிதத்துக்கு ஏற்ப எம்.எல்.ஏ. சீட் தரப்படும். பத்து சதவிகித வாக்கு என்றால் மொத்த எம்.எல்.ஏ. சீட்டுகளான 100ல் பத்து சீட். எத்தனை சீட் என்று அறிவித்த பிறகு ஒவ்வொரு கட்சியும், தான் யார்யாரை எம்.எல்.ஏ. வாக அனுப்புகிறது என்பதை அறிவிக்கும். இப்போது தனி தலித் தொகுதி, மகளிர் தொகுதி இட ஒதுக்கீடு தேவை இல்லை. அதற்குப் பதில் ஒவ்வொரு கட்சியும் தனக்குக் கிடைக்கும் சீட்டுகளில் இத்தனை சதவிகிதம், தலித்துகள், பெண்கள்... என்று ஒதுக்கீடு செய்யவேண்டும் என்று விதித்தால் போதும். இந்தத் தேர்தல் முறையில் ஒரு தலித் கட்சியோ, முற்றிலும் மகளிருக்கான கட்சியோ எளிதாக தலித், மகளிர் வாக்குகளைக் கணிசமாகப் பெற்று கணிசமான சீட்டைப் பெறும் வாய்ப்பு அதிகம்.

இந்த முறையில் பல வசதிகள் உள்ளன:

1. வோட்டுக்கும் சீட்டுக்கும் சம்பந்தம் இல்லை என்ற இப்போதைய அபத்தம் ஒழியும். படுதோல்வி பெற்ற 1996 தேர்தலில் அ.தி.மு.க.வுக்குக் கிடைத்த வோட்டு 21.9 சதவிகிதம். ஆனால் சீட்டுகள் வெறும் நான்கு தான். இதே கட்சி 2001ல் பெற்ற வோட்டு 29.9 சதவிகிதம். ஆனால், சீட்டுகள் 132.

1967 இல் காங்கிரஸ் ஆட்சியை இழந்த தேர்தலில் அதன் வோட்டு சதவிகிதம் 41.38. ஆனால் சீட்டு வெறும் 50. தி.மு.கவோ 40.77 சதவிகித வோட்டு வாங்கி 138 சீட்டுகளை அடைந்தது.

2. விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையில் ஒவ்வொரு வோட்டுக்கும் மதிப்பு வருகிறது. உலகில் பிரிட்டன், அதன் பழைய அடிமை நாடுகள், அமெரிக்கா தவிர மீதி பெரும்பாலான நாடுகளில் விகிதாசாரத் தேர்தல் முறைதான் இருக்கிறது.

3. விகிதாசார அடிப்படையில் சீட்டுகளுக்குக் கட்சி அனுப்பும் எம்.எல்.ஏ. மோசமானவராக இருந்தால் அவரைத் திரும்பப் பெறச் செய்து இன்னொருவரை நியமிக்க வைக்கும் முறையை எளிதாகக் கொண்டு வரலாம். கட்சிக்கு இந்த அதிகாரம் தரப்படுவதால், ஒவ்வொரு கட்சியின் உட்கட்சித் தேர்தலையும் தேர்தல் ஆணையமே நடத்தவேண்டும் என்ற சட்டம் கொண்டு வரலாம்.

4. எந்தக் கட்சியையும் பிடிக்கவில்லை என்று சொல்வதற்கான 49 ஓ முறையை இயந்திரத்திலேயே இணைத்தால் மக்களின் கருத்துக்கு ஏற்ற பிரதிபலிப்பை, தேர்தலில் பெற முடியும். விகிதாசார முறையில் தேர்தல் நடந்தால், ஒவ்வொரு கட்சியின் அசல் பலமும் தெரிவதால், கூட்டணிகளும் பேரங்களும் நியாயமான முறையில் மட்டுமே நடக்கும் வாய்ப்பு அதிகமாகும்.

அடுத்தபடியாக, எல்லா உள்ளாட்சித் தேர்தல்களிலும் கட்சி முறையை முற்றிலுமாக நீக்கிவிடலாம். இங்கே கட்சியைச் சேர்ந்தவரானாலும், தனி நபரானாலும் சுயேச்சையாகவே போட்டியிட வேண்டும். இந்த முறையில் உள்ளூரில் மக்களிடம் நிஜமாகவே தங்கள் சேவையின் மூலம் மதிப்பைப் பெற்றவர்கள் வெல்லும் வாய்ப்பு அதிகரிக்கும்.அடுத்த கட்டமாக எம்.பி. தேர்தலைக் கூட ஒழித்துவிடலாம். ஒவ்வொரு மாநிலத்துக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க் களிலேயிருந்து எம்.பி.களைத் தேர்வு செய்து அனுப்பினால் போதுமானது. அவர்களே மக்களவை ஆகிவிடுவார்கள். ராஜ்யசபைக்கு அறிஞர்களை மட்டும் நியமிக்கும் முறையில் ஒவ்வொரு மாநிலமும் நியமிக்கும் அறிஞர்களைக் கொண்ட சபையாக ஆக்கலாம். மேற்கண்ட சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தால், பொது வழ்க்கையில் அரசியலில் நிறைய பணம் தேவைப்படும் நிலை மாற்றப்படும். ஊழல் செய்வது பெருமளவு கட்டுப்படுத்தப்படும். மக்களின் அன்றாடப் பிரச்னைகளை உள்ளாட்சிப் பிரதிநிதிகளும் கொள்கைப் பிரச்னைகளை எம்.எல்.ஏ.க்களும் எம்.பி.களும் கவனிப்பதால், ஜனநாயகம் இன்னும் ஆழமாகும் விரிவாகும்.அடுத்தபடியாக அரசு நிர்வாக இயந்திரத்தைப் பகிரங்கமாகச் செயல்படும் முறைக்கு மாற்றுவதுதான் அன்றாட ஊழல்களை ஒழிக்கும் வழி. திட்டமிட்டால், எல்லா அரசு அலுவலகங்களின் செயல்பாடுகளையும் முற்றிலும் கணினிமயமாக்கிவிட முடியும். எந்தத் தகவலையும் யாரும் எங்கேயிருந்தும் கணினி வழியே காண முடியும் என்ற நிலை வந்தாலே பெருமளவு ஊழல்களைக் குறைக்க முடியும். அரசு விதிகளை எளிமைப்படுத்துவது, உள்ளூரில் ஒரே அரசு அலுவலகத்திலேயே குடிமக்களுக்குத் தேவையான அன்றாட விஷயங்கள் அனைத்தையும் தீர்த்து வைப்பது போன்ற சீர்திருத்தங்களும் கூடவே தேவைப்படுகின்றன.

இத்தனைக்குப் பிறகும் ஊழலை ஒழிக்க முடியவில்லையென்றால், அதற்குப் பொறுப்பு நம்முடைய பேராசை மட்டும்தான். இந்தப் பேராசை மனப்பான்மைக்குப் பொறுப்பு நம் குடும்பமும் கல்விமுறையும்தான். அவற்றில் என்னென்ன சீர்திருத்தங்கள் தேவை என்பதை இன்னொரு சமயம் பார்ப்போம்.

No comments:

Post a Comment