Monday, October 31, 2011

இந்திய "பார்முலா-1': வெட்டல் சாம்பியன்!

நொய்டா: "பார்முலா-1' கார் பந்தய அரங்கில் "ரெட் புல் ரெனால்ட்' அணி வீரர் செபாஸ்டியன் வெட்டலின் ஆதிக்கம் தொடர்கிறது. நேற்று நடந்த முதலாவது இந்திய கிராண்ட் பிரிக்ஸ் பைனலில் புயல் வேகத்தில் பறந்த இவர், சாம்பியன் கோப்பையை தட்டிச் சென்றார். "சகாரா போர்ஸ் இந்தியா' அணியின் ஏட்ரியன் சுடில் 9வது இடம் பெற்று நம்பிக்கை தந்தார். தமிழக வீரரான நரேன் கார்த்திகேயன் 17வது இடமே பெற முடிந்தது.

"பார்முலா-1' பந்தயத்தின் 17வது சுற்றின் பைனல் நேற்று டில்லி அருகே நொய்டாவில் அமைந்துள்ள "புத்தா சர்வதேச சர்கியூட்' மைதானத்தில் நடந்தது. இந்தியாவில் நடக்கும் முதலாவது "பார்முலா-1' பந்தயம் என்பதால் அதிக எதிர்பார்ப்பு காணப்பட்டது. மொத்தம் 60 சுற்றுகள் கொண்ட பைனலில், உலகின் 12 அணிகளில் இருந்து தலா 2 வீரர்கள் பங்கேற்றனர்.
முதல் சுற்றில் வில்லியம்ஸ் அணியின் ரூபன்ஸ் பேரிக்கலோ, சாபர் அணியின் கோபயாஷியின் கார்கள் மோதிக் கொள்ள ஆரம்பமே "திரில்' அனுபவத்தை கொடுத்தது. தனது காரில் வழக்கம் போல் வேகமாக பறந்த உலக சாம்பியன் வெட்டல், வெற்றியை எடுத்த எடுப்பிலேயே உறுதி செய்தார். இவரை தொடர்ந்து ஜென்சன் பட்டன், பெர்னாண்டோ அலோன்சா, மார்க் வெப்பர் ஆகியோர் வந்தனர். கடைசி கட்டத்தில் பட்டன் கடும் போட்டியை கொடுத்தார். ஆனாலும் வெட்டலை முந்த முடியவில்லை.
மாசா ஏமாற்றம்:
பந்தயத்தின் 24வது சுற்றில் பெராரி அணியின் பிலிப் மாசா மற்றும் மெக்லாரன் மெர்சிடஸ் அணியின் லீவிஸ் ஹாமில்டனின் கார்கள் மோதிக் கொள்ள, பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து மாசாவின் காருடைய "சஸ்பென்ஷன்' உடைய, போட்டியின் பாதியிலேயே பரிதாபமாக விலகினார்.
முதலிடம்:
களத்தில் நடக்கும் பிரச்னைகளை கண்டு கொள்ளாமல் தனது பணியில் கண்ணும்கருத்துமாக இருந்த ஜெர்மனியை சேர்ந்த வெட்டல் 24, முதலிடத்தில் தொடர்ந்தார். 60 சுற்றுகளை 1 மணி நேரம் 30 நிமிடம், 35.002 வினாடிகளில் கடந்த இவர் 25 புள்ளிகளை பெற்றதோடு, இந்திய கிராண்ட்பிரிக்ஸ் பட்டத்தையும் கைப்பற்றினார். மெக்லாரன் மெர்சிடஸ் அணியின் ஜென்சன் பட்டன்(1.27:967) இரண்டாவது இடம் பெற்றார். பெராரி அணியின் பெர்னாண்டோ அலோன்சா(1.28: 298) மூன்றாவது இடத்தை பிடித்தார்.
சூமாக்கர் 5வது இடம்:
மெர்சிடஸ் அணிக்காக பங்கேற்ற ஏழு முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற மைக்கேல் சூமாக்கர், ஒரு கட்டத்தில் 11வது இடத்தில் தான் வந்து கொண்டிருந்தார். பின் வேகத்தை அதிகரித்த இவர், 8வது இடத்துக்கு முந்தினார். பின் 5வது இடத்துக்கு முன்னேறி அசத்தினார்.
வெட்டல் நன்றி:
தனது வெற்றி குறித்து வெட்டல் கூறுகையில்,""முதலாவது இந்திய "பார்முலா-1'ல் கோப்பை வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. "டிராக்' அருமையாக இருந்தது. மகத்தான நாட்டில் நடந்த சிறப்பான பந்தயம் வெற்றிகரமாக நடந்துள்ளது. இதற்காக இந்தியாவுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஒவ்வொரு சுற்றும் உற்சாகமாக இருந்தது. அடுத்து நடக்க உள்ள அபுதாபி, பிரேசில் பந்தயங்களிலும் சாதிக்க காத்திருக்கிறேன்,''என்றார்.
இரண்டாவது இடம் பெற்ற ஜென்சன் பட்டன் கூறுகையில்,""சமீபத்தில் "பார்முலா-1' பந்தயத்தில் மரணம் அடைந்த மார்கோ சிமோன்செலி, டான் வெல்டன் ஆகியோருக்கு இந்த வெற்றியை அர்ப்பணிக்கிறேன். இம்முறை நல்ல துவக்கம் கிடைத்ததால், எனது வேகத்தை குறைக்காமல் காரை ஓட்ட முடிந்தது,''என்றார்.

சச்சினா...யார் அவர்?
"பார்முலா-1' போட்டியை காண வந்த சச்சினை, ஐரோப்பிய நிருபர்களுக்கு அடையாளம் தெரியவில்லையாம். ஸ்பெயின் நாட்டு பத்திரிகையாளர் ஒருவர்,""யார் இவர்? ஏன் எல்லோரும் இவர் பின் ஓடுகிறீர்கள்? பெரிய பணக்காரரா,'' என அருகில் இருந்த இந்திய நிருபரிடம் கேள்விகள் கேட்டு நச்சரித்துள்ளார். அதற்கு அவர்,""இந்திய கிரிக்கெட்டின் கடவுள். அவர் பெயர் சச்சின்,''என, பதில் அளித்துள்ளார்.
ஐரோப்பிய நாடுகளில் கால்பந்து, "பார்முலா-1' அளவுக்கு கிரிக்கெட் பிரபலம் இல்லை. அதனால் தான் சச்சினையும் அவர்களுக்கு தெரியவில்லை.
சூமாக்கருடன் சந்திப்பு:
"பார்முலா-1' பந்தயத்தை ரசித்து பார்த்த சச்சின், தனது நெருங்கிய நண்பரான "பெராரி' அணியின் சூமாக்கரை நீண்ட நாட்களுக்கு பின் சந்தித்தார். மனைவி அஞ்சலி மற்றும் குடும்பத்தாரை அவருக்கு அறிமுகம் செய்து வைத்தார். இறுதியில் செபாஸ்டியன் வெட்டல் வெற்றி பெற்றதும், கருப்பு, வெள்ளை நிற கட்டங்களுடன் கூடிய கொடியை அசைத்து வெற்றியை கொண்டாடினார் சச்சின்.
நரேன் ஆறுதல்
"பார்முலா-1'ல் இந்திய வீரராக தமிழகத்தின் நரேன் கார்த்திகேயன் மட்டும் பங்கேற்றார். ஆரம்பத்தில் கடைசி இடத்தில் வந்து கொண்டிருந்தார். பின் மாசா உள்ளிட்ட 5 வீரர்கள் பாதியில் வெளியேற, "ஹிஸ்பானியா' அணி சார்பில் கலந்து கொண்ட நரேன் 57 சுற்றுகளை முடித்தார். இவர், 17வது இடம் பெற்று ஆறுதல் தேடினார்.
"சகாரா இந்தியா' அசத்தல்
சொந்த மண்ணில் நடக்கும் "பார்முலா-1' பந்தயத்தில் "டாப்-10' இடத்தில் வர வேண்டும் என்பதே "சகாரா போர்ஸ் இந்தியா' அணியின் இலக்காக இருந்தது. இதற்கேற்ப மின்னல் வேகத்தில் பறந்த, இந்த அணியின் ஏட்ரியன் சுடில் 9வது இடம் பெற்று நம்பிக்கை காத்தார்.
"கோப்பையில் உற்சாகம்'
முதலிடம் பெற்ற உற்சாகத்தில் மிதந்தார் செபாஸ்டியன் வெட்டல். இவர், பரிசளிப்பு விழா மேடையில் "சாம்பைனை' உடைத்து தனது "மெகா' கோப்பையில் ஊற்றிக் குடித்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தந்தார்.
புதிய சாதனை
இந்திய "பார்முலா-1' கார்பந்தயத்தில் சாம்பியன் பட்டம் வென்ற "ரெட்புல் ரெனால்டு' அணியின் செபாஸ்டியன் வெட்டல், இந்த ஆண்டு தனது 11வது சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இதன்மூலம் கடந்த 2002ல், மைக்கேல் சூமாக்கர் (11 பட்டம்) படைத்த சாதனையை சமன் செய்தார்.
* அடுத்து நடக்கவுள்ள அபுதாபி, பிரேசில் "பார்முலா-1' கார்பந்தயங்களில் செபாஸ்டியன் வெட்டல் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் பட்சத்தில், கடந்த 2004ல் சூமாக்கர் (13 பட்டம்) படைத்த சாதனையை சமன் செய்யலாம்.
* நேற்று, செபாஸ்டியன் வெட்டல் 42வது சுற்றை முடித்த போது, ஒரே ஆண்டில் அதிக சுற்றுகளில் (693 சுற்று) முன்னிலை வகித்த வீரர்கள் வரிசையில், நிகல் மான்சல் (1992, 692 சுற்று) சாதனையை முறியடித்தார்.
* இவர், 49வது சுற்றை முடித்த போது, ஒரே ஆண்டில் 700 சுற்றுகளில் முன்னிலை வகித்த முதல் வீரர் என்ற புதிய வரலாறு படைத்தார். முன்னதாக கடந்த 2009ல், ஜென்சன் பட்டன் அதிகபட்சமாக 617 சுற்றுகள் முன்னிலை வகித்தார்.

No comments:

Post a Comment