விஜய் மீது திடுக் புகார்!
சுகாதாரத் துறை அமைச்சர் விஜய்-க்கு இது போதாத காலம். அதனால்தான், அவர் மீது புகார்கள் குவிகின்றன. அ.தி.மு.க-வில் உள்ள சீனியர்களுக்கு உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு அளிக்காமல், கட்சிக்குப் புதிதாக வந்தவர்களுக்கு வாய்ப்பு கொடுத்து உள்ளதாக, அமைச்சர் விஜய் மீது ஏற்கெனவே எழுந்த புகார் இன்னும் ஓயவில்லை. அதற்குள், 'அவருக்கு சொந்தமான மருத்துவமனையில் அறுவை சிகிச்சை தவறாக நடத்தப்பட்டது. இதனால் ஒரு ஏழைக் குடும்பம் பாதிக்கப்பட்டுத் தவிக்கிறது’ என்று ஒரு பூதம் கிளம்பி இருக்கிறது!
அமைச்சர் மீது புகார் கூறியுள்ள சுரேஷை சந்தித்தோம். ''காட்பாடிக்குப் பக்கத்தில் இருக்கும் தாமரைக்குளத்தில் குடியிருக்கிறோம். என் அப்பா கிருஷ்ண சாமி, தெருக்கூத்துக் கலைஞர். எனக்கு இரண்டு தம்பிகள், மூன்று தங்கைகள். வேலூர் மாவட்டத்தில் பெரும்பாலான கோயில் திருவிழாக்களில் தெருக்கூத்து நடத்தி எங்களைக் காப்பாற்றி வந்தார் அப்பா. அவரை நம்பி 20 குடும்பங்கள் இருக்கு. ஒரு கூத்து நடத்தினால்,
10,000 முதல் 15,000 வரை கிடைக்கும். மாதம் ஐந்து கூத்துகளாவது நடக்கும். இந்த நிலையில்தான், 2005-ம் ஆண்டு அவருக்கு முதுகு தண்டுவடத்தில் கடும் வலி. வேலூரில் அருண் மருத்துவமனைக்குக் கொண்டுசென்றோம். (இது, சுகாதாரத் துறை அமைச்சர் விஜய்க்கு சொந்தமானது) பரிசோதனை செய்த டாக்டர் விஜய், 'உடனடியாக ஆபரேஷன் செய்ய வேண்டும். 30,000 கட்டுங்கள்’ என்றார். பணத்தைச் செலுத்தினோம். ஆபரேஷன் முடிந்து ஒரு வாரத்துக்குப் பின்னர், வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள். ஆனாலும், தண்டுவடத்தில் வலி இன்னும் அதிகமாகிவிட்டது. இடுப்புக்கு கீழ் எந்த பாகமும் செயல்படவில்லை. சிறுநீர் இடைவிடாமல் வந்துகொண்டே இருந்தது. அப்பாவால் நடக்கக்கூட முடியவில்லை. வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் ஒரு டாக்டரைப் பார்த்தோம். 'ஆபரேஷனை மாற்றிச் செய்துவிட்டார்கள், அதனால்தான் கால் இப்படி ஆகிவிட்டது. மீண்டும் ஒரு ஆபரேஷன் செய்தால், காலை எடுக்க வேண்டும். சம்பந்தப்பட்ட டாக்டரையே பாருங்க’ என்று சொல்லிவிட்டார். டாக்டர் விஜய்யிடம் மறுபடியும் போய்க் கேட்டோம். அவரோ, 'ஆபரேஷன் செய்ததோட என் வேலை முடிந்துவிட்டது. உங்களுக்குப் பதில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. எங்கு வேண்டுமானாலும் புகார் செய்யுங்கள். எனக்கு பயம் இல்லை’னு பொறுப்பே இல்லாமல் பேசினார். அதுக்குப் பிறகுதான், 20 லட்சம் நஷ்டஈடு கேட்டு, நுகர்வோர் நீதிமன்றத்தில் 2007-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தோம். டாக்டரின் தவறான ஆபரேஷனால், எங்க குடும்பம் மட்டும் இல்லாம, எங்க அப்பாவை நம்பி இருந்த 20 குடும்பங்களும் நடுத்தெருவுல நிற்கின்றன. நாங்கள் வழக்குப் போடும்போது சாதாரண டாக்டராக இருந்த விஜய், இப்போது சுகாதாரத் துறை அமைச்சராகிவிட்டார். எங்களுக்கு நியாயம் கிடைக்குமா என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது. தவறான சிகிச்சை செய்த ஒரு டாக்டர், சுகாதாரத் துறைக்கு அமைச்சராக இருந்தால், எங்களைப்போல் எத்தனை பேருடைய வாழ்க்கை பாதிக்கப்படும்? இந்தப் பிரச்னை குறித்து, முதல்வருக்கு மனு அனுப்பி உள்ளோம். நியாயமான நடவடிக்கை எடுப்பார் என்று காத்திருக்கிறோம்!'' என்றார் தழுதழுத்த குரலில்.
இந்தக் குற்றச்சாட்டு குறித்து அமைச்சர் விஜய்யிடம் பேசினோம். ''அந்த பேஷன்ட் 2005-ல் என் மருத்துவமனைக்கு வந்தது உண்மைதான். அவருக்கு ஆபரேஷன் செய்ததும் உண்மைதான். ஆனால், அந்த ஆபரேஷனை நான் செய்யவில்லை; எங்க மருத்துவமனையில் வேலை செய்யும் டாக்டர்கள்தான் செய்தார்கள். அதை நான் கண்காணித்தேன். நாங்கள் செய்த ஆபரேஷனால் அவருக்கு கால்கள் செயலிழக்க வாய்ப்பு இல்லை. அதற்கான சர்ட்டிஃபிகேட் எல்லாம் என்னிடம் இருக்கிறது. அதை மீறி இவர் புகார் சொல்வதற்குக் காரணம், முன்னாள் அமைச்சர் துரைமுருகன்தான். மேடையில் அவரை நான் திட்டுவதைத் தாங்கிக்கொள்ள முடியாமல், தவறான ஆட்களை இப்படித் தூண்டிவிடுகிறார். நான் குற்றவாளி இல்லை என்று நிரூபிப்பேன்!'' என்று பதற்றத்துடன் பேசினார்.
யார் சொல்வது உண்மை என்று விசாரணையில் தெரிந்துவிடும்!
No comments:
Post a Comment