இந்திய அரசின் வல்லரசுக் கனவில் இன்னோர் அத்தியாயம் நனவாகிறது. கோடிக்கணக்கான ரூபாய்கள் அணு உலைகளிலும் நீர்மூழ்கிகளிலும் மூழ்கும்போது கூடவே பல கசப்பான உண்மைகளையும் சேர்த்து மூழ்கடிக்கப் பார்க்கிறது அரசு. அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலை தம் கடற்படையில் வைத்திருக்கும் உலக நாடுகள் இதுவரை ஐந்துதான். அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், பிரிட்டன், சீனா. ஆறாவதாக இந்தியாவும் இந்த அணுகுண்டர்கள் க்ளப்பில் சேர்கிறது. இந்தப் ‘பெருமை’ இப்போதைக்கு வாடகைப் பெருமைதான். ஏனென்றால் இந்தியா இந்த நீர்மூழ்கிக் கப்பலைக் கட்டவில்லை. ரஷ்யா கட்டிய நெர்ப்பா என்ற கப்பலை வாடகைக்கு வாங்கி ஐ.என்.எஸ் சக்ரா-2 என்று பெயர் மாற்றிவிட்டது. வாடகை ரொம்ப அதிகமில்லை ஜெண்ட்டில்மேன். ஐயாயிரம் கோடி ரூபாய்கள்தான். பத்து வருடத்துக்கான வாடகை. இதற்கு முன்னாலும் இந்தியா வாடகைப் பெருமையை அடைந்ததுண்டு. இதே ரஷ்யாவிடமிருந்து (அப்ப சோவியத் யூனியன்!) 1988ல் மூன்று வருடம் குத்தகையில் ஓர் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலை வாடகைக்கு எடுத்துப் பயன்படுத்தி அதற்கு ஐ.என்.எஸ். சக்ரா -1 என்று பெயர் வைத்திருந்தது. அதற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்புத் தெரிவித்தது. அதை மீறி சோவியத் யூனியன் அந்த நீர் மூழ்கியை இந்தியாவுக்குக் கொடுத்தபோது, கூடவே போட்ட ஒப்பந்தம்தான் கூடங்குளம் அணு உலை ஒப்பந்தம். எங்கக்கிட்ட அணு உலை வாங்கினா, நீர்மூழ்கியும் வாடகைக்குத் தருவேன் என்று சொல்லித்தான் அந்த பேரம் நடந்தது. நாமும் 1974ல பொக்ரான்ல அணுகுண்டு வெடிச்சதுலருந்தே சொந்தமா அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் தயாரிக்க, கல்பாக்கத்துலயும் விசாகப்பட்டினத்துலயும் மண்டையை மோதிக்கிட்டு, கோடிகோடியா கொட்டி முயற்சி பண்றோம். இன்னும் முடியலியே. அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் எப்படி இருக்கும்னு யாராவது ஒரு சேம்பிள் காண்பிச்சா நல்லாயிருக்குமேன்னு அப்போது வாடகைக்கு எடுத்துப் பார்த்தது இந்திய அரசு. இப்போது பத்து வருட வாடகைக்கு எடுத்திருக்கும் நெர்ப்பர் என்கிற ஐ.என்.எஸ் சக்ரா -2 நீர்மூழ்கிப் போர்க் கப்பலில் எந்த அணு ஆயுத ஏவுகணைகளையும் இந்தியா எடுத்துச் செல்ல முடியாது. அதற்கு அமெரிக்காவின் எதிர்ப்பும் உலக நாடுகளின் தடை ஒப்பந்தமும் காரணம். அப்துல் கலாம் தயாரித்துக் கொடுத்திருக்கும் மீதி அக்கினிச் சிறகுகளையெல்லாம் இதில் எடுத்துச் செல்லலாம். நெர்ப்பாவுடைய சுவாரசியமான வரலாற்றைப் பார்க்கலாம்.
இந்த நீர் மூழ்கியை 1991ல் ரஷ்யாவின் அமுர் கப்பல் துறையில் கட்ட ஆரம்பித்தார்கள். 1995 வரையில் வேலை நடந்தது. அந்தக் கப்பல் துறை அதுவரை வருடத்துக்கு ஒரு நீர்மூழ்கிக் கப்பல் கட்டுவது என்கிற வேகத்தில் இயங்கி வந்தது. சோவியத் யூனியன் உடைந்து ரஷ்யா திவால் நிலையை அடைந்ததால், பணம் இல்லாமல் எல்லாம் முடங்கிவிட்டன. அடுத்த 10 வருடங்களுக்கு இங்கே பெரிய வேலை எதுவும் நடக்கவில்லை. நெர்ப்பா அரைகுறையாகக் கட்டின நிலைமையில் கிடந்தது. அதற்குத் திரும்ப மறுவாழ்வு கிடைத்தது 2004ல் இந்தியா ரஷ்யாவுடன் ஒப்பந்தம் போட்டபோதுதான். இந்தியாவிலிருந்து அட்வான்ஸ் பணம் வந்ததும் மறுபடி கப்பலைக் கட்ட ஆரம்பித்தார்கள். இதற்குள் கப்பல்துறையில் இருந்த பழைய அனுபவம் வாய்ந்த மூத்த தொழிலாளர்கள் பலரும் வேறு வேலை தேடிப் போய்விட்டார்கள். மீதி கப்பலைக் கட்டி முடித்தவர்கள் புது ஆட்கள்தான். இந்தத் துறையில் கடைசியாகக் கட்டிய நீர்மூழ்கிக் கப்பல் நெர்ப்பாதான்.கப்பலை முதல் வெள்ளோட்டம் பார்க்கும்போதே ஒழுக ஆரம்பித்தது! துருப்பிடிக்காமல் தடுக்கும் பெயிண்ட்டின் தரம் சரியில்லை என்று கருதப்பட்டது. பின்னர் அது சரி செய்யப்பட்டது. கட்டும் பணி பாதியில் நிறுத்தி வைத்திருந்ததால், உபயோகிக்காமல் பல பாகங்கள் பலவீனமாகிவிட்டன என்றும் சிலர் கருதினார்கள்.ஒருவழியாகக் கட்டி முடித்த பிறகு 2008ல் நெர்ப்பாவில் ஒரு பெரிய விபத்து ஏற்பட்டது.நீர்மூழ்கிக் கப்பல் என்பதில் விபத்து ஏற்பட்டு, கதவுகள் அடைபட்டால், ஜலசமாதி தான். ஜன்னல் வழியே தப்பித்துவரும் சமாசாரம் எதுவும் கிடையாது. எழுபதுகளில் இந்தியன் எக்ஸ்பிரஸ் நிருபராக இருந்தபோது இந்தியக் கடற்படையின் ஒரு நீர்மூழ்கிக் கப்பலில் பயணம் செய்யும் வாய்ப்புக் கிடைத்தது. கடினமான அனுபவம்தான். நெர்ப்பாவில் தீ விபத்து ஏற்பட்டது. நீர் மூழ்கிக் கப்பல்களில் தீவிபத்துகள் ஏற்படுவது சகஜம். எனவே தீயணைப்புக்கான வழி முறைகள் முக்கியமானவை. தீ ஏற்பட்டதும், அலார்ம் பெல் ஒலித்து ஆட்டொமேடிக்காக நீர்மூழ்கிக் கப்பலில் பல்வேறு அறைகளின் கனமான இரும்புக் கதவுகளும் தானே பூட்டிக் கொண்டுவிடும். ஆக்ஸிஜன் இல்லாமல் தீ எரியாது. பரவாது என்பதால், ஒவ்வோர் அறையிலும் இருக்கும் ஆக்ஸிஜனை உறிஞ்சி எடுத்துவிடும் சாதனம் இயங்க ஆரம்பித்து விடும். ஆக்ஸிஜனை உறிஞ்சிவிட்டு, தீயை அணைப்பதற்கான ஃப்ரியான் வாயுவைச் செலுத்தும். இது விஷ வாயு. அலார்ம் மணி ஒலித்ததுமே நீர்மூழ்கிக் கப்பலில் இருப்போர் எல்லோரும் அவரவருக்கென்று தரப்பட்டிருக்கும் ஆக்ஸிஜன் முகமூடிகளை முகத்தில் மாட்டிக் கொண்டுவிட வேண்டும். இல்லாவிட்டால், சுவாசிக்க ஆக்ஸிஜனும் இல்லாமல் விஷ வாயுவைச் சுவாசித்து மூச்சுத் திணறிச் சாவார்கள். நவம்பர் 2008ல் நெர்ப்பாவில் நடந்த விபத்தின்போது கப்பல் கடலில் சோதனை ஓட்டத்தில் இருந்தது. தீ விபத்து அலாரம் ஒலித்து சாதனங்கள் தானே இயங்கத் தொடங்கியதும் பலரும் ஆக்ஸிஜன் மாஸ்க் அணியமுடியவில்லை. கப்பலில் மொத்தம் 208 பேர் இருந்தார்கள். 20 பேர் இறந்தனர். கொடுமை என்னவென்றால் தீவிபத்தே நடக்கவில்லை. ஆனால் தீயணைப்பு அலாரம் ஒலித்து, தானியங்கி சாதனம் வேலை செய்ய ஆரம்பித்துவிட்டது. இது சாதனக் கோளாறா, அல்லது யாரேனும் ஊழியர்களின் தவறுதலா என்று விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. கேப்டன் லாரெண்ட்டொவ், இன்ஜினீயர் குரோபோவ் இருவரின் அலட்சியத்தால் விபத்து நடந்தது என்ற குற்றச்சாட்டை நீதி மன்ற ஜூரிகள் நிராகரித்துவிட்டார்கள். இதை அரசு எதிர்த்து முறையீடு செய்துள்ளது. பாதி கட்டிய நிலையில் பத்து வருடங்கள் கப்பலைத் துருப்பிடிக்க விட்டது, அனுபவ மற்ற ஊழியர்களைக் கொண்டு கப்பலைக் கட்டியது, ரஷ்யாவின் அணுசக்தித் துறையான ரோசாட்டமில் இருக்கும் ஊழல்கள் எல்லாம்தான் விபத்துக்குக் காரணம். அதை மறைக்க இந்த இருவர் மீது வழக்குப் போடப்பட்டிருக்கிறது என்று ரஷ்யாவின் அணு எதிர்ப்பு இயக்கங்கள் சொல்கின்றன. (கூடங்குளம் உலையைக் கட்டியிருக்கும் ரோசாட்டத்தின் ஊழல்கள் பற்றி, கல்கி இதழின் ஓ பக்கங்களில் முன்பே எழுதியிருக்கிறேன்).
இந்த விபத்துக்குள்ளான நெர்ப்பா கப்பலைத்தான் ஐயாயிரம் கோடி ரூபாய் வாடகையில் இப்போது இந்திய அரசு இங்கே கொண்டு வருகிறது. தரை, வானம், கடல் மூன்று வழிகளிலும் அணு ஆயுதங்களை வீசுவதற்கான திறமையை அடைவதுதான் இந்திய அரசின் நோக்கம். இப்போது தரை, வான் வழியே வீசுவதற்கான திறன் இருக்கிறது. கடல் வழியே சென்று அணு ஆயுதத் தாக்குதல் நடத்த நீர்மூழ்கிக் கப்பல் தேவைப்படுகிறது. ரஷ்யாவிடம் வாடகைக்கு எடுக்கும் கப்பல் அணுசக்தியில் இயங்கும் என்பதால் அடிக்கடி கரைக்கு வந்து சார்ஜ் செய்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் இதில் அணு ஆயுதம் எடுத்துச் செல்ல முடியாது என்ற தடை இருக்கிறது. அப்படியானால் அணு ஆயுதமும் எடுத்துச் செல்லக்கூடிய அணுசக்தியிலும் இயங்கக்கூடிய நம்முடைய சுதேசி நீர்மூழ்கிக் கப்பல் எப்போது வரும்? முப்பதாயிரம் கோடி ரூபாய்களைக் கொட்டியிருக்கிறோம். முப்பது வருடமாக முயற்சித்திருக்கிறோம். ஒருவழியாக இந்த வருடம் கடலுக்கு அனுப்பி சோதனை வெள்ளோட்டம் செய்து பார்த்துவிடும் என்று சொல்லப்படுகிறது. ஐ.என்.எஸ்.அரிஹாந்த் என்று பெயர் சூட்டப்பட்டிருக்கும் இந்த நீர்மூழ்கிக் கப்பலை பிரதமர் மன்மோகன்சிங்கின் மனைவி 2009ல் விசாகப்பட்டினம் துறை முகத்தில் முறைப்படி தொடங்கி வைத்தார். (நீர்மூழ்கிக் கப்பல்களை, பெண்கள்தான் தொடங்கிவைக்கவேண்டும் என்பது ஒரு விசித்திரமான மரபு.)இந்தக் கப்பலைப் பற்றிய ஒரு செய்தியைப் பார்க்கலாம். சுமார் ஒன்பது மாதங்களுக்கு முன்பு மே 2011ல், விசாகப்பட்டினத்தில் கப்பல்துறைக்குள் இந்த நீர் மூழ்கிக் கப்பலைக் கொண்டு செல்ல முயற்சித்த போது ஏற்பட்ட விபத்தில் நான்கு பேர் பலியானார்கள். கப்பலைச் சூழ்ந்து நின்று அதைக் கரைசேர்க்கப் பயன்படுத்தப்படும் ஒரு பெரிய இரும்புக் கூண்டு போன்ற அமைப்புக்கு கய்சான் என்று பெயர். இதைக் கொண்டு அரிஹாந்த்தைக் கரை சேர்த்தபோது, கய்சான் நொறுங்கிவிழுந்து கமாண்டர் அஸ்வினி குமார், கமாண்டர் ரன்பிர் ரஞ்சன், மாலுமிகள் மது பாபு, ராஜேஷ் ஆகியோர் படுகாயமடைந்து இறந்தனர். மிகப் பெரிய சாதனைகளை நோக்கிச் செல்லும்போது சின்ன விபத்துகளைக் கண்டு துவண்டுவிடக் கூடாது என்பதுதான் லேட்டஸ்ட் அப்துல் கலாம் பொன்மொழி. (கூடங்குளம் பாதுகாப்பானது என்ற அவர் அறிக்கையில் உதிர்த்த இன்னொரு பொன்மொழி: விபத்துகளிலிருந்து நாம் கற்றுக் கொள்கிறோம்.) அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களில் அணு ஆயுதங்களை எடுத்துச் செல்லும் வல்லமையினால் நாம் சாதிக்கப் போகும் சாதனை என்ன? ஆயிரம் கிலோ அணு ஆயுதத்தைச் சுமந்துகொண்டு 700 கிலோமீட்டர் தூரம் வரை சென்று தாக்கும் சகரிகா ஏவுகணைகளை இந்த அரிஹந்த் நீர்மூழ்கியிலிருந்து நீருக்கடியிலேயே வீசலாம். அடுத்து மூவாயிரம் கிலோமீட்டர் தூரம் செல்லக்கூடிய ஏவுகணையை நீருக்கடியிலிருந்தே வீசுவதற்கான சோதனைகள் நடந்துவருகின்றன. இந்தியப் பெருங்கடலிலும் அரபிக் கடலிலும் இந்த நீர்மூழ்கிகள் வலம் வந்தால் பாகிஸ்தானும் வங்கதேசமும் இந்தியாவிடம் பயப்பட்டுத்தான் ஆக வேண்டும்.
ஆனால் ஸ்ரீலங்கா? நிச்சயம் பயப்படப் போவதில்லை. ஓர் அணு உலையும் கிடையாது. ஓர் அணு ஆயுதமும் கிடையாது. இந்தியாவிலிருந்து வெறும் முப்பது கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் நாடு இதுவரை எழுநூற்றுக்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களைக் கொன்று குவித்திருக்கிறது. நெருப்புக் கோழி தலையை மண்ணில் புதைத்துக் கொள்வது போல, இந்தியா தலையைத் தண்ணீருக்குள் புதைத்து வைத்துக் கொண்டிருக்கிறது என்பது அதற்கு நன்றாகவே தெரியும். நமக்கு பாகிஸ்தான்தானே எதிரி. ஸ்ரீலங்கா நண்பன். அப்படித்தானே பாடப் புத்தகங்களில் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள்?
இ.வா.பூச்செண்டு!
தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வு விடைத்தாள்களை தேர்வெழுதி யோர் பார்க்கவும் நேர்காணல் வீடியோ பதிவு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்திருப்பதற்காக புதிய தலைவர் நட்ராஜுக்கும் செயலர் உதய சந்திரனுக்கும் இந்த வாரப் பூச்செண்டு.
இ.வா. கேள்வி
கூடங்குளம் அணு உலை எதிர்ப்புக் குழுவினர் பல மாதங்களாக முதலமைச்சர் ஜெயலலிதாவைச் சந்திக்க நேரம் கேட்டும் ஒதுக்காத நிலையில், அணு உலை ஆதரவுப் பிரசாரத்தில் ஈடுபடுத்தப்பட்டிருக்கும் டாக்டர் சாந்தாவை மட்டும் முதலமைச்சர் சந்திக்க நேரம் ஒதுக்கியதன் மர்மம் என்ன? மத்திய அரசின் வற்புறுத்தலா?
இ.வா.கண்டனம்
ஓர் இலக்கிய விழாவில் பேசவருவதற்குக்கூட எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு மறைமுகத் தடைகள் விதித்திருக்கும் இந்திய அரசுக்கு இந்த வாரக் கண்டனம்.
No comments:
Post a Comment