தேர்தலில் சமாஜ்வாதி கட்சிக்குக் கிடைத்திருக்கும் அமோக வெற்றிக்கு வித்திட்டவர் முலாயம் சிங் யாதவின் மகன் 38 வயது அகிலேஷ் யாதவ்தான். ஆனால், கடந்த செப்டம்பர் மாதம் அவர் தமது தேர்தல் வியூகத்தின் ஓர் அங்கமாக ‘கிரந்தி யாத்ரா’ புறப்பட்டபோது, அந்த யாத்திரையின் கிளைமாக்ஸ் உ.பி. முதலமைச்சர் நாற்காலி என்பதை யாரும் யூகிக்கவில்லை. ஆங்கிலம், ஹை டெக் இவற்றை எல்லாம் பிடிவாதமாக ஏற்றுக் கொள்ள மறுத்து, அரசியல் நடத்தியவர் முலாயம். ஆனால் அவரது மகன் அகிலேஷ் பயன்படுத்துவது ஐ பேடும், பிளாக்பெர்ரியும் தான். இருந்த போதிலும், உ.பி. யின் சாமானிய மக்களோடு தம்மை வெகு சுலபமாக ஐக்கியப் படுத்திக் கொள்ளும் புத்திசாலித்தனம் அவரது பிளஸ் பாயின்ட்.சமாஜ்வாதி கட்சி, குண்டர்களின் கட்சி என்ற இமேஜ் வரும்படியாக முலாயம் சிங்கின் அரசியல் நடவடிக்கைகள் இருந்தாலும், தம் மகனை வளர்ப்பதில் அவர் காட்டிய அக்கறை அபாரமானது. அவரது செல்வாக்குக்கு தில்லியில் தம் மகனைப் படிக்க வைத்திருக்கலாம். ஆனால், ஹிந்தியோடு நேரடி தொடர்பு ஏதுமில்லாத மைசூருக்கு இன்ஜினீயரிங் படிக்க அனுப்பி வைத்தார். ஒரு மிடில்கிளாஸ் நபர்தான் அங்கே அகிலேஷின் லோக்கல் கார்டியன். ஹாஸ்டலில் தங்கிப் படித்த அகிலேஷுக்கு அளவான பாக்கெட் மணிதான் தரப்பட்டது. குடும்பத்தினரும், நண்பர்களும் அகிலேஷை ‘திப்பு’ என்று தான் செல்லமாகக் கூப்பிடுவார்கள். அந்தத் திப்பு இன்று உத்தரப் பிரதேசத்தின் சுல்தான் ஆகிவிட்டார்.
2009 நாடாளுமன்றத் தேர்தலின்போது, அகிலேஷின் மனைவி டிம்பிளை, காங்கிரஸ் வேட்பாளரான நடிகர் ராஜ்பாபர் தோற்கடித்தபோது, அந்தத் தோல்வியை அகிலேஷ் ரொம்ப பர்சனலாக எடுத்துக் கொண்டு, ராகுல் தனிப்பட்ட முறையில் அவமானப்படுத்த வேண்டும் என்று திட்டமிட்டு, ராஜ்பாபரை நிறுத்தி, டிம்பிளைத் தோற்கடித்ததாகக் கூறினார். அப்போதே தம் நெருங்கிய நண்பர்களிடம், ‘உ.பி.யில் இனி ராகுலுக்கும், தனக்கும்தான் அரசியல்’ என்று சொன்னார். இதை காங்கிரஸ்காரர்களும், உ.பி. அரசியல் நோக்கர்களும் பெரியதாய் எடுத்துக்கொள்ளவில்லை. இன்று ராகுல், அகிலேஷ் மோதலில், முதல் ரவுண்டில் வெற்றி அகிலேஷுக்கு.அகிலேஷ் எம்.பி.யாக இருந்தாலும், நாடாளுமன்றத்திலும் சரி, உ.பி. அரசியலிலும் சரி, அவரை முலாயம் சிங்கின் மகனாகவே அனைவரும் பார்த்தார்கள். இந்தமுறை பரந்துபட்ட உ.பி. மாநிலம் முழுவதும் கடுமையாகப் பிரசாரம் செய்ய முலாயமின் உடல்நிலை அனுமதிக்காது என்ற நிலையில், தன் அப்பாவின் நிழலிலிருந்து வெளியில் வந்து, தானே முன்னின்று பிரசாரத்தை மேற்கொண்டார். சின்ன கிச்சன், டி.வி., ஒரு டாய்லெட், எட்டு இருக்கைகள் கொண்ட பஸ்சை வடிவமைத்து ‘கிரந்தி யாத்திரை’ புறப்பட்டு விட்டார். உ.பி.யின் குறுக்கும், நெடுக்குமாக மொத்தம் எட்டாயிரம் கிலோமீட்டர் பயணம். இன்னொரு பக்கம் கட்சியின் இளைஞர் பிரிவுகளான லோஹியா வாஹினி, முலாயம் இளைஞர் படை போன்றவற்றைச் சீரமைத்து, புத்துணர்ச்சியூட்டி, தேர்தல் களப்பணியில் ஈடுபடுத்தினார். அதற்காகவே, ‘கிரந்தி யாத்திரை’ யின் இடையில் 250 கி.மீ. தூரம் மோட்டார் சைக்கிள் பயணம் மேற்கொண்டார். கட்சியின் இணையதளத்தை உருவாக்கி, படித்த இளைய தலைமுறையினரோடு நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார். கட்சிக்கான தேர்தல் விளம்பரங்களை வடிவமைப்பதிலும் முக்கியப் பங்கு இவருக்கு உண்டு. விளம்பரத்தில், சமாஜ்வாதி கட்சியின் சின்னமான சைக்கிள், பகுஜன் சமாஜ் கட்சியின் சின்னமான யானையை ஓவர் டேக் பண்ணுவதுபோல ஒரு கிண்டல் இடம் பெற்றது. ‘கிரந்தி யாத்திரை’யின் போது ஒரு பத்திரிகையாளர் ராகுலின் பிரசாரம் பற்றிக் கேட்டபோது, ‘அவர் என்னைவிட 3500 கி.மீ. பின்தங்கி இருக்கிறார்’ என்று சொன்னதை அனைவரும் ரசித்தார்கள்.
என்னதான் கட்சியை வெற்றிப் பாதையில் வழிநடத்தியவர் அகிலேஷ் என்றாலும், அவரை முதலமைச்சர் ஆக்குவதற்கு கட்சியிலும், புதிய எம்.எல்.ஏ. க்கள் மத்தியிலும் ஏராளமான ஆதரவு இருந்தாலும், இந்த முடிவை சில மூத்த தலைவர்களால் அவ்வளவு சீக்கிரம் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை.அவர்களுள் முக்கியமானவர்கள் கட்சியின் முஸ்லிம் முகம் என குறிப்பிடப்படும் ராம்பூர் எம்.எல்.ஏ. முகமது அஸம்கான் மற்றும் முலாயமின் தம்பி சிவபால் சிங் யாதவ் இருவரும்தான். இவர்கள் அகிலேஷ் முதலமைச்சராகக் கூடாது என்று நேரடியாகச் சொல்லாமல், முலாயம்தான் முதல்வராக வேண்டும் என்று சொன்னார்கள். இதை இன்னும் சில மூத்த தலைவர்களும் ஆதரித்தார்கள். கட்சி ஆரம்பித்த காலத்திலிருந்து முலாயம் சிங் யாதவுடன் இருந்து வரும் அந்த மூத்த தலைகள், அகிலேஷின் கீழ் அமைச்சர்களாகப் பணியாற்ற ஈகோ பார்த்ததுதான் இதற்குக் காரணமாம். முலாயம் சிங் லக்னௌவில் விக்ரமாதித்யா ரோடில் உள்ள தம் வீட்டுக்கு அவர்களை அழைத்து நள்ளிரவு வரை பேசி, கன்வின்ஸ் செய்த பிறகு, நிலைமை சுமுகமானது. 38 வயதில் அரசியல் ரீதியாக இந்தியாவின் மிக முக்கியமான உத்தரப் பிரதேசத்தின் முதலமைச்சராகி இருக்கிறார் சோஷலிசக் கொள்கையில் மிகுந்த பிடிப்பு கொண்ட அகிலேஷ் யாதவ். அவரை நம்பிக்கை யோடு அந்தப் பதவியில் அமர்த்திய மக்கள், அவரிடம் நிறைய எதிர்பார்க்கிறார்கள். நிறைவேற்றுவாரா?
மூன்று சவால்கள்
அகிலேஷ் யாதவின் ‘கிரந்தி யாத்ரா’வின்போது கூடவே பயணம் செய்து அகிலேஷைப் பேட்டி கண்டவர் ‘ஹிந்து’ நாளிதழின் துணை ஆசிரியர் வித்யா சுப்ரமணியம். அகிலேஷ் பற்றி கல்கிக்கு அளித்த பிரத்யேக பேட்டியின் முக்கிய பகுதிகள் :
அகிலேஷ் பற்றிய உங்கள் கருத்து?
“அகிலேஷ் ரொம்ப எளிமையான மனிதர். அவரது அப்பாவின் தலைமுறையைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதிகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டு வித்தியாசமாக இருக்கிறார். அனாவசியமான பந்தா இல்லை; தெளிவாக திட்டமிட்டு, வியூகங்கள் வகுப்பதில் வல்லவராக இருக்கிறார். கட்சிக்காரர்கள் அவர் காலில் விழுவதை அவர் அனுமதிப்பதில்லை; ‘மிக நல்ல முறையில் வளர்க்கப்பட்ட பிள்ளையாக இருக்கிறாரே’ என்ற எண்ணம்தான், அவருடைய நடவடிக்கைகளைக் கவனித்த போது எனக்கு ஏற்பட்ட எண்ணம்.”
முதலமைச்சர் பதவியை முலாயம் தன் மகனுக்குக் கொடுத்ததன் பின்னணி என்ன?
“அவருக்கு வயதாகிவிட்டது; சமாஜ்வாதி கட்சிக்கு இப்படி ஒரு மாபெரும் வெற்றியைத் தேடிக் கொடுத்ததில் அகிலேஷின் பங்கு மிக முக்கியமானது. கட்சியில் உள்ள இளைஞர்களிடம் அகிலேஷுக்கு நல்ல செல்வாக்கு உள்ளது. அகிலேஷை முதலமைச்சராக்குவது கட்சிக்கு நல்ல எதிர்காலத்தைக் கொடுக்கும் என முலாயம் நினைக்கிறார்.”
ராகுல்-அகிலேஷ் ஒப்பிடுங்கள்...
“அகிலேஷ் உள்ளூர் தலைவர். ஆனால், ராகுல் ஒரு தேசியத் தலைவர். ராகுலும் கஷ்டப்பட்டுத்தான் பிரசாரம் செய்தார். சாமானிய மக்களுக்கு ராகுலை மிகவும் பிடிக்கிறது. அவரைப் பாராட்டுகிறார்கள். ஆனால், ராகுலின் செல்வாக்கு காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு வோட்டாக மாறுவதில்தான் சிக்கல்.”
முதலமைச்சர் அகிலேஷின் முன் உள்ள மூன்று முக்கியமான சவால்கள் என்னென்ன?
“சட்டம் ஒழுங்குதான் இப்போது முதல் பிரச்னை. விவசாயிகளின் பிரச்னை அடுத்து முக்கியமானது. சமாஜ்வாதி கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்ததில் முஸ்லிம்களின் பங்கு முக்கியமானது. எனவே, முஸ்லிம் மக்களின் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. அவற்றைப் பூர்த்தி செய்வது மூன்றாவது சவால்.”
No comments:
Post a Comment