நான்கு முனைப் போட்டி நடக்கும் சங்கரன்கோவில் தனித்தொகுதியில், எப்படியாவது வெற்றி அடைந்தே தீரவேண்டும் என்ற முனைப்பில் வரலாறு காணாத அளவில் முஸ்தீபுகளைச் செய்து வருகிறது ஆளும்கட்சி. தொகுதியைக் கைப்பற்றி அ.தி.மு.க-வின் வெற்றிக் கொண்டாட்டத்துக்கு செக் வைக்கும் கோதாவில் தி.மு.க-வும் ம.தி.மு.க-வும் வரிந்து கட்டிக்கொண்டு வேலை பார்க்கின்றன. சட்டசபையில் தங்களுக்கு இடப்பட்ட சவாலைச் சந்தித்து, பலத்தை நிரூபித்துக் காட்டியே தீரவேண்டிய கட்டாயத்தில் தே.மு.தி.க-வும் துடிக்கிறது. கடைசிக்கட்ட நிலவரத்தை எடை போட்டோம்.
உஷாரான தி.மு.க.!
இந்த இடைத்தேர்தலில் ஆளும் கட்சியை வீழ்த்திக் காட்டினால் பொதுத்தேர்தல், உள்ளாட்சித் தேர்தல்களில் ஏற்பட்ட தோல்விகளால் துவண்டு போயிருக்கும் தனது கட்சித் தொண்டர்களை உற்சாகப்படுத்த முடியும். வழக்கு, கைது போன்ற நடவடிக்கையால் பயந்து போயிருக்கும் கட்சி நிர்வாகிகளிடம் மீண்டும் எழுச்சி ஏற்படும் என்று தி.மு.க. மேலிடம் நம்புகிறது.
அதனால்தான் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில்கூட எதிரும் புதிருமாக முட்டிக்கொண்டு இருந்த அழகிரியும், ஸ்டாலினும் ஈகோவை மறந்து ஒன்றாக இணைந்து தேர்தல் பணி செய்து வருகின்றனர். தி.மு.க. வேட்பாளர் ஜவஹர் சூரியகுமாருக்கு ஆதரவாக முன் னாள் அமைச்சர்கள், இந்நாள் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் தொகுதி முழுவதும் வலம் வருகின்றனர்.
கட்சி நிர்வாகிகளை ஒருங்கிணைக்கும் கடமை அழகிரி வசம் இருக் கிறது. அண்ணனுடன் இணைந்து பணியாற்றும் ஸ்டாலின், தொண்டர்களை உற்சாகப்படுத்த தொகுதி முழுவதும் வலம் வருகிறார். தேர்தல் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டவர்கள் தீவிரமாக அவர்களுடைய கடமையைச் செய்கிறார்களா என்பதையும், செலவுகளை முழுமையாகச் செய்கிறார்களா என்பதையும் அழகிரி கண்காணித்து வருகிறார். கட்சி சார்பில் இரண்டு 'சி’ வந்திருப்பதாக பேசிக்கொள்ளும் உடன்பிறப்புகள், எந்த நேரமும் பட்டுவாடா நடக்கலாம் என்ற எண்ணத்தில் பரபரப்பாக பணியாற்றி வருகிறார்கள். இது, வாக்காளர்கள் கைக்குச் சென்று சேர்ந்துவிட்டால், 'நிச்சயம் வெற்றி நமக்குத்தான்’ என்று கணக்குப் போடுகிறது தி.மு.க. வட்டாரம்.
பொதுக்கூட்டத்தில் கருணாநிதியின்பேச்சும் வாக்காளர்களைக் கவரும் வண்ணம் அமைந்து விட்டதால், தி.மு.க-வினர் உற்சாகம் அடைந்துள்ளார்கள். ஆனால், தி.மு.க. வேட்பாளர் மீது சொல்லப்பட்ட புகார் பரவலாக வாக்காளர்களால் பேசப்படுகிறது.
சவாலில் சிக்கிய தே.மு.தி.க.!
எப்படியாவது கணிசமான வாக்குகளைப் பெற்று மானத்தைக் காத்துக்கொள்ள வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக தே.மு.தி.க. இயங்கி வருகிறது. ஒரு வார காலம் தொகுதியில் தங்கி இருந்து, விஜயகாந்தும் பிரேமலதாவும் பிரசாரம் செய்தது தொண்டர்களை உசுப்பேற்றி உள்ளது. 'தாங்களும் கரன்சியைக் காட்ட முடியும்’ என்ற அளவுக்கு தே.மு.தி.க. இறங்கி இருப்பதை அந்தக் கட்சி நிர்வாகிகளே ஆச்சர்யத்துடன் பார்த்து வியக்கின்றனர்.
ஆனால், 'வேட்பாளரைக் கேப்டன் அடித்து விட்டார்’, 'வாக்காளர்களை அவமதித்து விட்டார்’ என்பது போன்ற வதந்திகள் தொகுதி முழுவதும் அவ்வப்போது கிளம்பி தே.மு.தி.க-வை பஞ்சர் பார்க்கிறது. இது உண்மையா பொய்யா என்றுகூட தெரியாமல் தொண்டர்கள் விழிக்கிறார்கள். வேட் பாளர் முத்துக்குமார் தொகுதிவாசிகளுக்கு அறிமுகம் இல்லாதவராக இருப்பது, முரசுக்கு பலவீனமாக உள்ளது.
விஜயகாந்தை விட பிரேமலதாவின் பிரசாரம் மக்களிடம் நன்றாகவே எடு படுகிறது. ஆளும் கட்சியையும் தி.மு.க-வையும் அவர் சாடும் வேகம் பொதுமக்களிடம் ஆர்ப்பரிப்பை ஏற்படுத்துகிறது. அவரும் குக்கிராமம்கூட விடாமல் சென்று, வாக் காளர்களை சந்திக்கிறார். 'எப்படியாவது டெபாசிட் வாங்க வேண்டும்’ என்ற ஆவலில் இந்தக் கட்சியினர் பதறிப்பதறி வேலை பார்ப்பது, ஒரு வகையில் பரிதாபமாகத்தான் தெரிகிறது.
உரிமைப் போரில் ம.தி.மு.க.!
ம.தி.மு.க-வுக்கு இருக்கும் பலமே வைகோவின் சூறாவளி பிரசாரம்தான். அனை த்து கட்சிகளுக்கும் முன்பாகவே பிரசாரத்தைத் தொடங்கி விட்டதால், தொகுதிவாசிகளிடம் பம்பரம் நன்றாகவே அறிமுகம் ஆகியுள்ளது. வேட்பாளர் சதன் திருமலைக்குமார் தொகுதி மக்களுக்கு நல்ல வகையில் அறிமுகம் ஆனவர். உறவினரைப் போல அனை வரிடமும் உரிமையுடன் பேசி வாக்கு சேகரிக்கிறார்.
'சட்டமன்றத்தில் மக்களின் குரலை எதிரொலிக்க எங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்’ என்று வைகோ உருக்கம் காட்டுவதை தொகுதிவாசிகள் உன்னிப்பாகக் கவனிப்பது இந்தக் கட்சிக்கு சாதகமாக அமையலாம். தமிழருவி மணியன், தி.க.சிவசங்கரன், தொ.பரமசிவன் போன்ற நடுநிலையாளர்கள் ம.தி.மு.க-வை ஆதரிப்பது கட்சிக்கு கூடுதல் தெம்பைக் கொடுத்துள்ளது. நாஞ்சில் சம்பத், மல்லை சத்யா போன்ற நட்சத்திரப் பேச்சாளர்கள் ஒருபுறம் அதிரடியாகப் பேசி வாக்காளர்களைக் கவர்ந்து வருகிறார்கள். பெரும்பான்மையான தலித், தேவர் சமூகத்தினரின் வாக்குகளைக் கவரும் வகையில் திட்டம் போட்டு ம.தி.மு.க. பிரசாரம் இருக்கிறது. குறிப்பாக, மேலநீலிதநல்லூர் ஒன்றியத்தில் கணிசமான வாக்குகள் கிடைக்கும் என்பது வைகோவின் கணிப்பு. பரமக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் மூலமாக ஆளும்கட்சி மீது கோபமாக இருக்கும் தலித் வாக்காளர்கள் ம.தி.மு.க.வுக்கு வாக்களிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.
வைகோவின் சொந்த ஊரான கலிங்கப்பட்டி அமைந்துள்ள குருவிக்குளம் ஒன்றியத்தில் ம.தி.மு.க-வுக்கு செல்வாக்கு அதிகம் என்பதை அனைத்துக் கட்சிகளும் புரிந்திருப்பதால் இந்த ஊரையே எல்லாக் கட்சிகளும் சுற்றிச் சுற்றி வந்தன.
நடிகர்கள் பட்டாளம், பணம், ஆட்பலம் போன்றவை ம.தி.மு.க-வுக்கு மைனஸ். ஆனாலும் இணைய தள நண்பர்கள் அமைப்பு, பரமக்குடி கலவரத்தில் பாதிக்கப்பட்டு வைகோவால் சிகிச்சை கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்ட ஜெயபிரசாத் போன்றோர் தாமாகவே முன்வந்து பிரசாரம் செய்வது பம்பரத்துக்கு பலம் சேர்க்கிறது. எப்படியாவது ஒரே ஒரு எம்.எல்.ஏ. பதவியையாவது பிடித்து விடவேண்டும் என்று உயிரைக் கொடுத்து ம.தி.மு.க-வினர் உழைப்பதை மக்கள் பார்த்துக் கொண்டேதான் இருக்கிறார்கள்.
அசுர பலத்துடன் அ.தி.மு.க.!
ஆளும்கட்சி வேட்பாளர் முத்துச்செல்விக்காக தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளையும் சேர்ந்தஅ.தி.மு.க. நிர்வாகிகள் இங்கே முகாமிட்டு வாக்கு வேட்டையில் ஈடுபடுகிறார்கள். கை, காலில் விழாத குறையாக அமைச்சர்கள் பிரசாரம் செய்வதை வாக்காளர்கள் ரசித்துப் பார்க்கிறார்கள்.
தேர்தல் கமிஷனின் கடுமையான கெடுபிடிகளை மீறியும் கரன்சி தண்ணீராகப் பாய்கிறது. பூத் கமிட்டி உறுப்பினர்கள் வீடு வீடாகச் சென்று டோக்கன் கொடுத்து பணப்பட்டுவாடா செய்வதாக எதிர்க்கட்சிகள் பரபரப்பாக புகார்களை தெரிவித்த போதிலும், ஏனோ அதிரடி நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை.
ஜெயலலிதாவின் மின்னல் வேகப் பிரசாரம், தொகுதியில் அ.தி.மு.க-வுக்கு எதிராக இருந்த சூட்டைத் தணித்து விட்டது. மின்தட்டுப்பாட்டைப் போக்க உறு தியான நடவடிக்கை எடுப்பதாக அவர் கொடுத்த வாக்குறுதி மக்களிடம் இருந்த கோபத்தைப் போக்கி இருக்கிறது. தேர்தலுக்கு முன்பே, நலத்திட்டங்கள் இந்த தொகுதியில் போய்ச் சேர்ந்து விட்டதை தங் களுக்குச் சாதகமானதாகச் சொல்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்.
இறுதிக் கட்டத்தை எட்டிவிட்ட தேர்தல் களத்தில் வெற்றியை மையப்புள்ளியாக வைத்து அரசியல் குதிரைகள் ஓடிக்கொண்டு இருக்கின்றன. எந்தக் குதிரை மீது 'பணம்’ கட்டப் போகிறார்களோ, அது வெற்றிக்கோட்டைத் தொடப் போகிறது. விடை தெரியும் நேரம் நெருங்கிவிட்டது.
No comments:
Post a Comment