Thursday, March 15, 2012

அதிபர் பதவியையே ஏற்க மறுத்த அறிவியல் விஞ்ஞானி...



1945 ஆம் ஆண்டு 6 ஆம் தேதி உலக வரலாற்றில் ஒரு கருப்பு தினம்.அன்று அமெரிக்க போர்விமானம் ஒன்று ஜப்பானில் அணுகுண்டு வீச....சில நொடிகளிலே சின்னா பின்னாமானது ஹிரோஷிமா.அடுத்த முன்றே நாட்களில் இன்னொரு அணுகுண்டைத் தாங்கி சுக்கல் சுக்கலாக கிழிந்து போனது நாகாசாயி.அங்கு வாழ்ந்த அத்தனை உயிர்களும் கரிக்கட்டைகளாகக் கருகி பொட்டல் சுடுகாடானது அந்த இரண்டு நகரங்களும்.ஆயிரமாயிரம் அப்பாவி மக்கள் அநியாயமாக பலியான அந்தச் செய்தி கேட்டு நாள் முழுவதும் தன் கைகளில் முகத்தைப் புதைத்துக்கொண்டு விம்மி..விம்மி.. அழுதது ஒரு உள்ளம். காரணம்...அந்த ஜீவன் இவ்வுலகிற்கு கண்டுபிடித்துச்சொன்ன சார்பியல் கோட்பாடு தான் அணுகுண்டு உற்பத்தியாவதற்கு அடிப்படையாக அமைந்தது.அறிவியல் கண்டுபிடிப்புகள் எல்லாமே நன்மைக்காக பயன்பட வேண்டும் என்று நம்பிய அவர்தான்....இருபதாம் நூற்றாண்டின் தன்னிகரற்ற விஞ்ஞானி திரு ஆல்பர்ட் ஐன்ஸ்டின்.1879 ஆம் ஆண்டு இதே நாளில் (மார்ச்-14) ஜெர்மனியில் ஒரு யுதக் குடும்பத்தில் பிறந்தார் ஐன்ஸ்டின்.

இவர் பிறக்கும் போதே மேதை இல்லை.மூன்று வயதுவரை பேச்சே வரவில்லை.பள்ளியிலும் சராசரி மாணவன்தான்.இவருக்கு அறிவியலின் மீது ஆர்வம் வந்தது நான்கு வயதில்தான்.ஒரு முறை இவர் தந்தை 'காம்பஸ்' என்ற காந்த திசைக்காட்டியை இவருக்குப் பரிசாகத்தர அதிலுள்ள காந்தம் தான் அறிவியல் உலகத்திற்கு நுழைவதற்கான அனுமதிச்சீட்டாக இவருக்கு அமைந்தது.கணிதத்தில் மிகக் கடினமான பாடமான 'கால்குலஸ்'-பாடத்தை சொந்தமாகவே கற்றுக்கொண்ட இவரின் சந்தேகங்களுக்கு பதிலளிக்க முடியாமல் ஆசிரியர்களே திணறியதாக ஒரு குறிப்பு சொல்கிறது.இசையின் மீதும் அதிக ஈடுபாடு கொண்ட ஐன்ஸ்டின் ஒரு வயலின் இசைக் கலைஞராகவும் இருந்தார்.

அவருக்கு பதினைந்து வயதாக இருந்தபோது இத்தாலிக்கு குடியேறியது ஐன்ஸ்டின் குடும்பம்.அங்கு அவரின் தந்தை வர்த்தகத்தில் நொடிந்து போகவே, இவர்கள் குடும்பம் சுவிட்சலாந்துக்கு குடிபெயர்த்து.அங்கு புகழ் பெற்ற 'சுவிஸ்பெடரல் பாலிடெக்னிக்கின்' நுழைவுத்தேர்வில் தோல்வியடைந்த அவரை அடுத்த ஆண்டே சேர்த்துக்கொண்டது.அதிலிருந்து தேர்ச்சி பெற்றவுடன் 'சுவிஸ் குடியுரிமை' பெற்றார்.அவருக்கு கிடைத்த முதல் வேலையே விஞ்ஞானிகளின் கண்டுபிடுப்புகளை பதிவுசெய்து ஆராய்வது. அது தான் அவரை சொந்தமாக பல ஆராய்ச்சிகளை செய்யத்தூண்டியது.அதன் பிறகுதான் ஆய்வுக்கட்டுரைகளை எழுதத்தொடங்கினார்.1905 ஆம் ஆண்டு ஜுரிச்(ZURICH) பல்கலைக்கழகம் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியது.

கண்ணுக்குப் புலப்படாத அணுவைப் பற்றியும் பறந்து விரிந்துக்கிடக்கும் ஆகாயத்தைப் பற்றியும் ஆராய்ந்த ஐன்ஸ்டீன் ' Theory of Relativity' என்றக் கோட்பாட்டை வெளியிட்டார்.அதுதான் விஞ்ஞான உலகத்துக்கே அடிப்பட மந்திரமாக விளங்கும் 'சார்பியல் கோட்பாடு'.அந்தக் கோட்பாடு மூலம் அவர் வகுத்துத் தந்த புகழ்பெற்ற கணித இயற்பியல் வாய்ப்பாடுதான் E=mc2.இந்தக் கண்டுபிடிப்பை உலகுக்கு அவர் தெரியப்படுத்தியபோது அவரின் வயது 26 தான்.1926ம் ஆண்டு இவருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசை வழங்க விரும்பியது நோபல் குழு.ஆனால் சார்பியல் கோட்பாடு தொடர்பாக அப்போது விஞ்ஞானிகளுக்கு இடையே கருத்து வேறுபாடு நிலவியதால் இவரின் மற்றொரு கண்டுபிடிப்பான Photoelectric Effect -க்காக நோபல் பரிசை வழங்கியது.

முதலாம் உலகப்போரில் ஜெர்மனி கலந்து கொண்டதுக்காக வெளிப்படையாக தன் கண்டனத்தைத் தெரிவித்தார்ஐன்ஸ்டீன்.பிறகு ஜெர்மனியில் ஹிட்லரின் ஆட்சி வந்தபோது அவர் யூதர்களுக்கு எதிராக செயல்படக்கூடும் என உணர்ந்த ஐன்ஸ்டீன் அங்கிருந்து அமெரிக்காவுக்கு குடி பெயர்ந்தார்.1939 ஆம் வருடம் வேறு சில இயற்பியல் வல்லுனர்களுடன் இணைந்து அப்போதைய அமெரிக்க அதிபர் ரோஸ்வேல்ட்(Franklin D. Roosevelt) க்கு ஒரு கடிதம் எழுதினார்.அப்போது ஹிட்லர் ஆட்சியில் இருந்த ஜெர்மனிக்கு அணுகுண்டு தயாரிக்கும் வல்லமை இருப்பதாகவும் வெகு விரைவிலே அவர்கள் இதை செய்யக்கூடும் என எச்சரிக்கை செய்திருந்தார். ஆனால் 'கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதை' யாய் இதைக் கேள்விப்பட்ட அமெரிக்கா,ஜெர்மனியின் அணுகுண்டு தயாரிப்பை தடுத்து நிறுத்தாமல் அதுவாகவே சொந்தமாக அணுகுண்டு தயாரிக்கும் முயற்சியில் இறங்கியது.இதன் விளைவுதான் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு உலக வரலாற்றின் கருப்புதினமான அன்று விஞ்ஞான உலகுக்கு கரும்புள்ளியாக அமைத்த 'ஹிரோஷிமா- நாகாசாயி' சம்பவம் நடந்தது. ஐன்ஸ்டீன் கண்டுபிடித்துச் சொன்ன E=mc2 என்ற மந்திரம் தான் அனுகுண்டின் அடிப்படைத்தத்துவம்.அந்தச் சம்பவம் இறப்பு வரை ஐன்ஸ்டீனை உறுத்திக் கொண்டே இருந்திருக்கும்.

சிதைந்து போன ஜப்பான்

ஆனால் அந்த ஒரு சம்பவத்தைத் தவிர்த்து ஐன்ஸ்டீனின் கோட்பாடால் பல நன்மைகளைப் பெற்றிருக்கிறது இந்த உலகம்.உண்மையில்....சர் ஐசக் நியூட்டனின் கண்டுபிடிப்புகள் பைபிளின் பழைய ஏற்பாடு என்று வைத்துக் கொண்டால்...ஐன்ஸ்டீனின் 'சார்பியல் கோட்பாடு' பைபிளின் புதிய ஏற்பாடு மாதிரி என்ற ஒரு ஒப்பீடு கூட இருக்கிறது.

தங்கள் இனத்தவர் என்று பெருமைப்பட்டு தம் நாட்டிற்கே அதிபர் ஆகும் படி ஐன்ஸ்டீனுக்கு அழைப்பு விடுத்ததுஇஸ்ரேல்.ஆனால் நான் அரசியலுக்கு லாயக்கு இல்லாதவன் என்று அந்த வாய்ப்பை புறந்தள்ளிவிட்டார். அரசியலை விட 'அறிவி'யலே மேல் என்று இருந்துவிட்டார் போல.....

தான் படிக்கும் போது காதல் திருமணம் செய்து கொண்ட ஐன்ஸ்டீன் இரண்டு குழந்தைகளுக்கு தந்தையானார்.பின் மணமுறிவு ஏற்பட சிலகாலம் கழித்து தன் உறவுப் பெண்ணை மணந்து கொண்டார்.அவர் சில காலம் கழித்து இறந்து விட பிறகு சுமார் இருபது வருடங்கள் தனியாகவே வாழ்ந்தார்.அணுகுண்டு தயாரிப்பதற்கு இவரின் சார்பியல் கோட்பாடுதான் மூல காரணம் என்றாலும் யுத்தங்களை அறவே வெறுத்தார் ஐன்ஸ்டீன்.தனது இறுதி நாட்களில் உலக அமைதிக்காக பாடுபட்ட ஐன்ஸ்டீன் 1955 ஆம் ஆண்டு ஏப்ரல் 18 ஆம் தேதி தனது 76 வது வயதில் காலமானார்.

நவீன அறிவியல்,ஐன்ஸ்டீனுக்கு மிகப்பெரிய நன்றி கடன் பட்டிருக்கிறது. உலகத்தின் ஒட்டுமொத்த மின்சாரத்தேவையையும் பூர்த்திசெய்யும் அணு மின்சாரம் இவரின் சார்பியல் கோட்பாடு மூலமே கிடைக்கப்பெற்றது.அன்று அவர் போட்ட விதைதான் இன்று நவீன உலகமாக விருட்சிக ஆலமரமாய் வளர்ந்து நிற்கிறது. விஞ்ஞான உலகமே ஐன்ஸ்டீனை கடவுளாக பார்க்கும் அளவுக்கு சாதித்திருக்கிறார் என்றால் அதற்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படுகிறது.ஓன்று... ஆழமான சிந்தனை.. மற்றொன்று அறியப் படாதவற்றைப்பற்றிய அளவிட முடியாத தாகம்.

1 comment:

  1. உங்கள் உலகம் எங்கிருக்கின்றது?

    //உலகத்தின் ஒட்டுமொத்த மின்சாரத்தேவையையும் பூர்த்திசெய்யும் அணு மின்சாரம்//

    தயவு செய்து படிக்கவும்.
    http://www.world-nuclear.org/info/inf01.html

    நன்றி
    அருள்

    ReplyDelete