Thursday, March 8, 2012

மீண்டும் அதிமுகவுக்கு திரும்புகிறாரா ஈரோடு முத்துச்சாமி?


முத்துசாமி லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட்டாக வந்துள்ளார். அ.தி.மு.க. கூடாரத்தையே காலி செய்து நம் கட்சிக்குக் கொண்டு வந்திருக்கிறார்’ - முன்னாள் அமைச்சர் முத்துசாமி தி.மு.க-வில் இணைந்தபோது மு.க.ஸ்டாலின் கூறிய வார்த்தைகள் இவை. ஆனால் தற்போது தி.மு.க-வில் இணைந்த முத்துசாமியின் ஆதரவாளர்கள் 80 சதவீதம் பேர் மீண்டும் அ.தி.மு.க-வுக்கே ரிடர்ன்.

ஏனாம்?

முத்துசாமியின் ஆதரவாளர்களிடம் பேசினோம். ''அண்ணன் தி.மு.க-வில் இணைந்தபோது முன்னாள் எம்.எல்.ஏ-க்கள், நகர, ஒன்றிய, கட்சி நிர்வாகிகள் என்று சுமார் 10,000 பேர் இணைந்தார்கள். அப்போது என்.கே.பி.பி.ராஜா கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டு இருந்தார். அதனால் மாவட்டப் பொறுப்பாளர்களாக ராஜாவின் தந்தை பெரியசாமியும், சச்சிதானந்தமும் இருந்தனர். அண்ணனுக்கு மாவட்டச் செயலாளர் அல்லது கட்சியில் உயர்ந்த பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்து காத்திருந்தோம்.

ஆனால் நாங்கள் கட்சியில் இணைந்த சில நாட்களிலேயே ராஜா மீண்டும் கட்சியில் சேர்த்துக்கொள்ளப்பட்டு மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டார். ராஜாவால் நாங்கள் ஓரங்கட்டப்பட்டோம். எந்த ஒரு நிகழ்ச்சிகளிலும் எங்களுக்கு உரிய மதிப்பு கொடுக்கப்படவில்லை. ஆனாலும் அண்ணன் முத்துசாமி, தலைமைக்குக் கட்டுப்பட்டு, விசுவாசமாக இருந்தார். இந்த நிலையில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் ராஜாவுக்குக் கிடைக்க இருந்த ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி அண்ணனுக்குத் தரப்பட்டது. இதனால் கோபம் அடைந்த ராஜாவின் ஆதரவாளர்கள், உள்ளடி வேலைசெய்து அண்ணனைத் தோற்கடித்து விட்டார்கள். ராஜாவின் துரோகத்தைத் தாங்க முடியாமல் அண்ணன் சென்னைக்குச் சென்றுவிட்டார். அண்ணனுக்கே இந்த நிலைமையா என்று எண்ணிய பலர் மீண்டும் அ.தி.மு.க-வுக்குச் சென்றுவிட்டார்கள்.

மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து அதில் ஒரு மாவட்டச் செயலாளராக அண்ணனை நியமிக்க தலைமை முடிவு எடுத்துள்ளதாகத் தெரிகிறது. அப்படி நடந்தால்தான் நாங்கள் தி.மு.க-வில் இருப்போம். இல்லையென்றால் எல்லோரும் ஆளும் கட்சிக்குப் போய்விடுவோம். முத்துச்சாமியும் கட்சி மாறிவிடுவார்'' என்று சொன்னார்கள்.

ராஜாவின் செயல்பாடுகள் குறித்துப் பேசும் தி.மு.க-வினர், ''முத்துச்சாமியின் தோல்விக்கும் ராஜாவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. மேலும் இப்போது ராஜாவின் செயல்பாடுகள் மாறி இருக்கின்றன. கட்சியை வலிமைப்படுத்த ஸ்டாலின் எடுத்துவரும் முயற்சிகளுக்குத் தீவிரமாக ஆதரவு தருகிறார். அதனால் அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைத்துச் செயல்பட்டு வருகிறார். முன்னாள் மேயர் குமார் முருகேஷ், பவானி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. என்று அனைத்து எதிர் தரப்பினரையும் அரவணைத்துச் செல்கிறார். முத்துசாமிக்கும் நல்ல எதிர்காலம் இருக்கிறது'' என்று சொன்னார்கள்.

சென்னையில் இருந்த முத்துசாமியிடம் கேட்டபோது, ''என்னுடன் கட்சியில் இணைந்தவர்கள் சிலர் பிரிந்து சென்றது உண்மைதான். ஆனால் பெரும்பாலானோர் இப்போதும் தி.மு.க-வில்தான் இருக்கின்றனர். விரைவில் நானும் ஈரோடு வந்து தீவிர அரசியலில் இறங்குவேன்'' என்றார்.

No comments:

Post a Comment