Thursday, March 8, 2012

கச்சத்தீவில் இந்திய,இலங்கை மீனவர்களின் கண்ணீர்க் கதையை கேட்ட டக்ளஸ் தேவானந்தா.


மிழக மீனவர்களின் அத்தனைத் துயரங்​களுக்கும் காரணம் என்று சுட்டிக் காட்டப்படும் கச்சத் தீவில் கடந்த வாரம் புனித அந்தோணியார் கோயில் திருவிழா நடந்தது. இந்த விழாவின்போது, டக்ளஸ் தேவானந்தா முன்னிலையில் நடந்த இரண்டு நாட்டு மீனவர் பிரதிநிதிகள் கூட்டம் கண்ணீரும் கம்பலையுமாக முடிந்திருக்கிறது.

முதலில், டக்ளஸ் தேவானந்தா பேசினார். ''இந்தியத் தமிழ்நாட்டுக் கடல் தொழிலாளர்களும், இலங்கை வட பகுதிக் கடல் தொழிலாளர்களும் கலந்து உரையாடுவதன் ஊடாகத்தான் கடலில் ஏற்படும் பிரச்னைகளுக்குத் தீர்வு காண முடியும். சார்க் மாநாட்டில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கும், இலங்கை அதி பர் ராஜபக்ஷேவும் இதையேதான் பேசி உள்ளனர். அந்த அடிப்​படையில்தான் இந்தச் சந்திப்பு நடக்கிறது. நான் இலங்கை அமைச்சராக இருந்தாலும், இலங்கைத் தமிழ் மக்களின் பிரதிநிதியாக இருந்தாலும் இரு நாட்டு மீனவர் விஷயத்தில் நடுநிலையாகத்தான் செயல்படுவேன். சிறந்த ஆரம்பம் நல்ல முடிவுக்கு வழிவகுக்கும். எனவே, இந்தப் பேச்சுவார்த்தை, விட்டுக்​கொடுப்பு, எதிர்பார்ப்பு போன்றவற்றை அடிப்படை​யாகக் கொண்டு அமைய வேண்டும்'' என்று தொடங்கி வைத்தார்.

தமிழக மீனவர் தரப்பில் பேசிய தங்கச்சி​மடம் பஞ்சாயத்துத் தலைவர் ஞானசீலன், ''இருநாட்டு மீனவர்​களுக்கும் கடலைவிட்டால் வாழ, வேறுவழி தெரியாது. எனவேதான், பல்வேறு இன்னல்களுக்கு இடையே மீன்பிடித்து வருகிறோம். சோறு போடும் மீன்பிடித் தொழிலை 99 சதவிகிதம் மீனவர்கள் தவறாகப் பயன்படுத்த மாட்டார்கள். இந்த நிலையில் குற்றச் செயலில் ஈடுபடாத ஐந்து மீனவர்கள் மீது, போதைப் பொருள் கடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டு உள்ளது. அந்த மீனவர்​களை மீட்டுத்தர நடவடிக்​கை எடுப்பதுடன்,வங்கக் கடலில் இரண்டு நாட்டு மீனவர்களும் மீன்பிடிக்​கும் வகையில் வழி காண வேண்டும்'' என்றார்.

இலங்கை மீனவர் தரப்பில் இருந்து பேசிய வடமராட்சி சமாஜத் தலைவர் அருள்தாஸ், ''இந்திய மீனவர்கள் எங்கட கடல் பகுதியில் தொழில் செய்வதைத் தடுக்கவில்லை. ஆனா, அவர்கள் பயன்படுத்தும் மீன்பிடி முறைகளை எதிர்க்கிறோம். நீங்கள் பயன்படுத்தும் ரோலர்கள்தான் (இழுவைப் படகு) பிரச்னை. எங்கடக் கரைப் பகுதி வரை வந்து மீன் பிடிக்கிறீர்கள். எங்கட பகுதியில நில(கடல்)வளம் அழிந்து வருது. அதனாலேதான் எங்கட பகுதியில் ரோலர் மீன் பிடிப்புக்கு அரசாங்கம் தடை விதிச்சிருக்கு. அப்படியும் ஒவ்வொரு நாளும் மீன் குறைஞ்சுகொண்டேதான் போகிறது. ஊர்ப்பட்ட ரோலர்களில் வாறீங்க. அதனால, எங்கட தொழில் அநியாயமா பாதிக்கப்படுது. இதற்கு யார் பதில் சொல்லப்போறீங்க?'' என்று கேட்டார்.

இதற்குப் பதில் அளித்த ராமேஸ்வரம் மீனவர் சங்க நிர்வாகி சேசு, ''இந்தியாவில் ரோலர் மீன் பிடிப்புக்குத் தடை கிடையாது. தடை வந்தால்தான், அதை நிறுத்த முடியும். இதில் நாட்டுப்படகு மீனவர்களுக்கும் எங்களுக்கும் பிரச்னை வந்தது. அதைத் தொடர்ந்து வாரத்தில் மூன்று நாட்கள் மட்டும் நாங்கள் தொழிலுக்குப் போறோம். வருஷத்தில் 70 தடவை மட்டுமே மீன் பிடிக்கிறோம். எங்களால் முடிந்த அளவுகட்டுப்​பாட்டுடன் நடந்து கொள்கிறோம்'' என்றார்.

இலங்கை காரைநகர் ராஜசந்திரன் பேசுகையில், ''பிரச்னையின் பெரிய விடயமே ரோலர் மீன்பிடிப்புதான். அதனால், எங்கள் கடல் வளம் அழிவது தொடர்பாகக் கலந்து பேசுகிறோம். ஆனாலும் நீங்கள் தொழிலைக் குறைப்பதாக இல்லை. நிறுத்திக்கொள்வோம் என்றுகூடச் சொல்லவில்லை. ரோலர் படகுக்குத் தடை இல்லை என்று சொல்​கிறீர்கள். 30 ஆண்டுகளுக்குப் பிறகு நாங்கள் இப்போதுதான் மீன்பிடிக்க வருகிறோம். கடன்பெற்று வலை வாங்கி, கூடுதல் தொகைக்கு மண்ணெண்ணெய் வாங்கி தொழில் செய்கிறோம். எங்கள் கரைப் பகுதிக்கு வந்து மீன் பிடிக்கிறீர்கள். எங்கள் வலைகளை அறுத்துச் செல்கிறீர்கள். இத னால், நாங்கள் வாங்கிய கடனை அடைக்க முடியவில்லை. மறுநாளே சொசைட்டி ஆள் போலீஸ்காரருடன் வந்துவிடு​கிறார். எங்கள் நிலைமையைப் புரிந்து கொள்ளுங்கள். உங்களுக்கு தொழில் வாய்ப்பு குறைந்ததற்குக் கார​ணம், நீங்களே உங்கள் கடல் வளத்தை அழித்துக்கொண்டதுதான். உங்களுடன் எங்களுக்கு நேரடி மோதல் ஏதும் இல்லை. உங்களைவிட பாவப்பட்ட எங்களை நிம்மதியாத் தொழில் செய்ய விடுங்கோ'' என்று கலங்கிய கண்களுடன் பேச, இலங்கை மீனவர்கள் தரப்பில் டென்ஷன் எகிறியது.

நிலைமை மோசமாவதைக் கவனித்த அமைச்சர் டக்ளஸ், ''இந்த மட்டத்தில் பேச்சை நிறுத்திக்கொள்வோம். மேற்​கொண்டு இரு அரசுகளின் உதவியையும் இதில் கோருவோம்'' என்று சொல்லி கூட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

நம்மிடம் பேசிய யாழ் மாவட்ட சம்மேளனத் தலைவர் தவரெத்னம், ''பரிதாபகரமான நிலையில் எங்கள் மீனவர்​களின் தொழிற்பாடுகள் உள்ளன. இதற்குக் காரணமாக உங்கள் மீனவர்கள் மீது நாங்கள் தாக்குதலில் ஈடுபட்டது இல்லை. 30 வருடமாக நாங்கள் பட்ட வேதனை இப்போதுதான் மாறுகிறது. இந்நிலையில், இங்கு எதுவும் சொல்ல விரும்பவில்லை. உண்மையில் இந்திய மீனவர்களை நாங்​கள் எப்போதும் தாக்கியதே இல்லை. பிரச்னைக்குத் தீர்வு காண, கடல்வளம் பாதிக்காத வகையில் இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார். நமது மீனவர்களைப் போன்றே இலங்கை மீனவர்களுக்கும் கடலே பிரச்னையாக இருக்கிறது. இருதரப்பு வேதனைகளும் தீர்வது எப்போதோ?

No comments:

Post a Comment