Monday, March 19, 2012

அருள் மழை --49


காஞ்சிமடத்தில் பெரியவரின் மீது பக்தியும் பாசமும் கொண்ட அம்மையார் ஒருவர் இருந்தார். அவர் தான் எசையனூர் பாட்டி. இவ்வூர் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளது. அவரது பெயர் கோகிலாம்பாள். இளமையிலேயே கணவர் மற்றும் குழந்தைகளை இழந்துவிட்டதால், காஞ்சிமடத்தில் தொண்டு செய்வதை தன் வாழ்நாள் லட்சியமாக ஏற்றுக்கொண்டு அங்கேயே ஐக்கியமாகி விட்டார்.

எசையனூர் பாட்டிக்கு மடத்தில் தனி மதிப்பு உண்டு. மடத்து சிப்பந்திகளையும் அரட்டி உருட்டி வேலை வாங்குவார். அதேநேரம், அன்பாகவும் நடந்து கொள்வார். அவருடைய அணுகுமுறையில் வேலை செய்யாதவனும் செய்யத் தொடங்கிவிடுவான்.

“ஏண்டா ராமமூர்த்தி! இன்னிக்கு பெரியவா பிøக்ஷயை சரியா பண்ணினாரா? ஏன் தான் ஏகாதசி, துவாதசி, பிரதோஷம் எல்லாம் சேர்ந்தாப்பில வரதோ? தெரியலையே! தசமி வந்தாலே இப்படி நாலு நாள் பட்டினியா காயிறாரே! உடம்பு என்னாகும்?” என்று கவலை கொள்வார் பாட்டி.

“”வேலூர் மாமா! நான் சொல்றதைக் கேளுங்கோ! நீங்க சொன்னாத் தான் பெரியவா கேட்பா! உடம்புக்கு முடியாத நேரத்தில வெந்நீர் ஸ்நானம் செய்யச் சொல்லுங்கோ!” என்பார்.

“”ஏண்டா! விஸ்வநாதா! பெரியவாளைத் தூங்கவிடாம பேச்சுக் கொடுத்துண்டே இருக்கே!” என்று அதட்டுவார். இப்படி நாள் முழுவதும் எசையனூர் பாட்டியின் அக்கறையுணர்வு அவ்வப்போது வெளிப்பட்டுக் கொண்டே இருக்கும். திடீரென்று பெரியவரைத் தூக்கிச் செல்லும் சவாரிக்காரர்களிடம் போய், “”நீங்கள் எல்லாரும் புண்ணிய ஆத்மாக்கள். நன்னா இருங்கோ! இதில் இருக்கும் பட்சணங்களை எடுத்து பகிர்ந்து சாப்பிடுங்கோ!” என்று அன்போடு உபசரிப்பார்.

காலப்போக்கில், பாட்டி தள்ளாமையில் தவித்துவந்தார். அடிக்கடி பெரியவரிடம் பிரார்த்தனை செய்து கொள்வார். “”பொன்னோ பொருளோ தேவையில்லை. வாழ்க்கையில் என்னால் முடிந்த சேவைகளைச் செய்தேன். இப்போ நிம்மதியான முடிவை மட்டும் உங்களிடம் வேண்டறேன்,” என்று பாட்டி வருந்தினார்.

பெரியவரும் பாட்டியின் உடல்நலனை அவ்வப்போது சிஷ்யர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்வார்.

ஒருநாள் பெரியவர் திடீரென்று தன் மடத்து தொண்டர் ஒருவரை அழைத்தார்.
“”எசையனூர் பாட்டிக்கு இந்த துளசி தீர்த்த பிரசாதத்தைக் கொடு, ” என்று கட்டளையிட்டார். அதுவே பாட்டியின் கடைசி உணவாக இருந்தது.

சிறிது நேரத்தில் எசையனூர் பாட்டி இறைவனடி சேர்ந்துவிட்டார். எந்தவித மரண அவஸ்தையோ, நோயோ இல்லாமல் பாட்டி மறைந்தது ஆச்சரியமாக இருந்தது. மறைவுச் செய்தி கேட்ட பெரியவர் மூன்று தினங்கள் மவுனவிரதம் இருந்தார். பாட்டி கேட்டபடியே, நிம்மதியான இறுதி முடிவைத் தந்தது பெரியவரின் ஆசி என்பதை மடத்து தொண்டர்கள் அனைவரும் உணர்ந்தனர்

No comments:

Post a Comment