கடலோரம் அமைக்கப்பட்டிருக்கும் கல்பாக்கம் அணு உலைகளுக்கு சுமார் நூறு கிலோமீட்டர் தொலைவில் கடலுக்கடியில் உறங்கும் எரிமலை இருப்பது பற்றிய தகவல்கள் இப்போது வெளியாகி இருக்கின்றன. வழக்கம்போல இந்திய அணு சக்தித் துறைக்கு இதைப் பற்றி எதுவும் தெரியாது என்பதும் அக்கறையில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.சுமார் 25 வருடங்களாக அணு உலை ஆபத்துகள் பற்றி ஆய்வும் பிரசாரமும் செய்துவரும் மருத்துவர்கள் சதுரங்கப்பட்டினம் வி.புகழேந்தி, கோவை ரா.ரமேஷ் இருவரும் இது தொடர்பாக ஆய்வு செய்து திரட்டியிருக்கும் பல அரிய தகவல்களை ‘பூவுலகின் நண்பர்கள் சூழல் பாதுகாப்பு அமைப்பு’ இப்போது நூலாக வெளியிட்டிருக்கிறது.பத்து மாதங்களுக்கு முன்னால் மே 2011ல் சர்வதேச அணுசக்திக் கழகம் உலக அளவில் எரிமலைகளும் அவற்றால் அணு உலைகளுக்கு ஏற்படக்கூடிய ஆபத்துகளைப் பற்றியும் ஒரு நூலை வெளியிட்டிருக்கிறது. அதில் கல்பாக்கம் அருகே இருக்கும் எரிமலை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் கல்பாக்கத்துக்கு என்ன ஆபத்து நேரலாம், எப்படி பாதுகாத்துக் கொள்ளலாம் என்பதை நிலவியல், காலவியல், கடலியல் அடிப்படைகளில் ஆராயும்படி சர்வதேச அணுசக்திக் கழகம் அறிவுறுத்துகிறது. ஆனால் அவை எதையும் இந்திய அணுசக்தித் துறை மேற்கொண்டதாகத் தெரியவில்லை. புகழேந்தியும் ரமேஷும் மூன்று அடிப்படைகளிலும் நடந்துள்ள பல்வேறு தனி ஆய்வுகளைத் திரட்டி அவற்றின் அடிப்படையில் சில எச்சரிக்கைகளை முன்வைத்திருக்கிறார்கள்.
கல்பாக்கம் அருகே இருக்கும் கடல் எரிமலை பற்றி இந்திய அணுசக்தித் துறைக்குத்தான் தெரியவில்லையே ஒழிய உலகின் மாபெரும் விஞ்ஞானிகள், ஆவாளர்கள் எல்லாருக்கும் தெரிந்திருக்கிறது. கடைசியாக 1757ஆம் ஆண்டு ஜனவரி 20 அன்று இந்த எரிமலை வெடித்திருக்கிறது. அந்த நிகழ்வு பற்றி உலகின் பரிணாமக் கொள்கையை வகுத்த அறிஞர் சார்லஸ் டார்வின் முதல் எரிமலை வெடிப்பை கடலில் நேரில் பார்த்த மாலுமிகள் சிலர் வரை எழுதிய பதிவுகளையெல்லாம் புகழேந்தியும் ரமேஷும் தேடி எடுத்துத் தொகுத்துள்ளனர்.அதுமட்டுமல்ல கல்பாக்கத்தை ஒட்டிய கடற்பகுதியில் நிலவியல் அமைப்பு, ஏற்பட்ட பூகம்பங்கள், சுனாமிகள், அவை பற்றி நடந்த ஆவுகள் எல்லாவற்றையும் தங்கள் நூலில் விவரமாக அலசியிருக்கின்றனர். இந்த அலசலில் தெரியவரும் முக்கியமான விவரங்கள் மூன்று.
1. கல்பாக்கம் முதல் வேதாரண்யம் வரையிலான நிலப்பிளவு பகுதியின் காந்த மண்டலம் குறைந்து காணப்படுவதற்குக் காரணம் கடல்தரையிலிருந்து பிதுங்கி எழுந்திருக்கக்கூடிய அமைப்புதான். இதுதான் எரிமலைப் பகுதி. இதில் ஏற்படும் மாற்றங்கள் கல்பாக்கம் அணு உலையின் கீழாக செல்லும் நிலப்பிளவுடன் நேரடியாக சம்பந்தப்பட்டிருக்கின்றன. இதைப்பற்றி இந்திய அணுசக்தித் துறை இதுவரை எந்த அக்கறையும் காட்டவில்லை.
2. கல்பாக்கம் பகுதி சுனாமிகள், பூகம்பங்கள் பற்றிய அணு சக்தித் துறையின் ஆவுகளும் மிகுந்த குறைபாடுகளுடனே இருக்கின்றன. சுனாமி 2004ல் வந்தபோது அங்கே சீஸ்மோகிராஃப் வேலை செயவே இல்லை. 24 மணி நேர எமர்ஜன்சிக் கட்டுப்பாட்டு அறை இயங்காமல் பூட்டியே கிடந்தது.
3. கல்பாக்கம் அருகே கடலில் இருக்கும் பாலாற்றுப் பள்ளம் சுனாமி அலை வேகத்தை அதிகரிக்கக்கூடியது. இங்கிருந்து சுனாமி, உலையை அடைய பத்து நிமிடம் போதுமானது.
கூடங்குளம் பகுதியிலும் நிலவியல், கடல்சார்ந்த சுனாமி பூகம்ப ஆவுகள் அணுசக்தி துறையால் முறையாகச் செய்யப்படவில்லை. அங்கே பழைய எரிமலைக் குழம்புகள் இளகிய நிலையில் பாறைகளாக உள்ளது பற்றிய ஆவை அணுசக்தித் துறை பொருட்படுத்தவே இல்லை. 2004ல் சுனாமி வரும் வரை, அந்தப் பகுதியில் சுனாமி வரவே வராது என்றுதான் அணுசக்தித் துறை சொல்லிக் கொண்டிருந்தது. வந்தபிறகு இனிமேல் 9 மீட்டருக்கு மேல் அலை வராது என்று சொல்லிக் கொண்டிருக்கிறது.செர்னோபில், புகொஷிமா விபத்துகள் சுற்றிலும் 10 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பை முழுமையாக சிதைத்தவை. கல்பாக்கத்திலிருந்து அதே சுற்றளவில் இருப்பவை சென்னை நகரம், மணலி, புழலேரி, திருப்போரூர், செம்பரம்பாக்கம், தரமணி, கோயம்பேடு, எழும்பூர், கோவளம், மகாபலிபுரம், அம்பத்தூர், ஸ்ரீபெரும்புதூர், சென்னை துறைமுகம், சென்னை விமான நிலையம், காஞ்சிபுரம், செங்கற்பட்டு, திருக்கழுக்குன்றம், மதுராந்தகம், மேல்மருவத்தூர், திண்டிவனம் விழுப்புரம், பாண்டிச்சேரி ஆகியவை மட்டுமல்ல. தமிழ்நாட்டில் 75 சதவிகித தொழிற்சாலைகள் இங்கேதான் இருக்கின்றன. செர்னொபிலை விட 50 மடங்கு அதிக மக்கள் இங்கே வசிக்கிறார்கள்.தென்மாவட்டங்களைக் காப்பாற்றுவதற்காக கூடங்குளத்தைத் தொடங்காதே என்று சொல்வது மட்டும் போதாது. வட தமிழகத்தைக் காப்பாற்றுவதற்காக கல்பாக்கத்தை மூடு என்றும் இனி அழுத்திச் சொல்ல வேண்டும் என்ற அவசரத்தை உணர்த்துகிறது புகழேந்தி- ரமேஷின் அற்புதமான ஆய்வு நூல். இந்த வாரப் பூச்செண்டு இவர்களுக்கே.
No comments:
Post a Comment