’காதலிலும் போரிலும் எந்த தர்ம நியாயத்திற்கும் இடமில்லை’ என்று ஒரு பழமொழி உண்டு. அந்த வரிசையில் தேர்தலையும் சேர்த்துக் கொள்ளவேண்டிய நிலையில்தான் நமது நாடு இருக்கிறது. தேர்தல் ஆணையம் விழிப்புணர்வோடு செயலாற்றினால் எந்த தவறுகளுக்கும் இடமிருக்காது என்பது பொதுவான நம்பிக்கை. சென்னை சட்டமன்ற பொதுத்தேர்தலில், ‘திருமங்கலம் ஃபார்முலா’ மூலம் தமிழகத்தில் மீண்டும் தன் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள முடியும் என்று கருணாநிதி திடமாக இருந்தார்.
ஆனால் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமாரின் கடுமையான கண்காணிப்பால் பெருமளவில் முறைகேடுகள் தவிர்க்கப்பட்டதன் விளைவே கலைஞர் ஆட்சியை இழந்ததும் ஜெயலலிதா ஆட்சி நாற்காலியில் வந்து அமர்ந்ததும் ஆகும். அதனால் தேர்தல் ஆணையம் மீது தமிழக மக்களுக்கு மரியாதை பன்மடங்கு கூடியது.
அதேபோல் தமிழகத்தில் நீண்டகாலம் ஒரு மரபு நிலைத்திருக்கிறது. இடைத்தேர்தல்களில் முதலமைச்சர் சென்று தேர்தல் பணியில் ஈடுபடுவதில்லை என்பதுதான் அந்த நல்ல மரபு. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இடைத்தேர்தல்கள் நடந்தபோது முதலமைச்சர் சென்று வாக்கு சேகரித்ததில்லை. அந்த மரபு திராவிடக் கட்சிகளின் ஆட்சி வந்தபிறகு மாறிவிட்டது.
2001-ல் இருந்து 2006 வரை அ.தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது நடைபெற்ற இடைத்தேர்தல்களில் அனைத்து அமைச்சர்களும் தொகுதியில் களமிறங்கி தேர்தல் வேலைகளில் இறங்கி செயல்பட்டனர். அப்போது ஜனநாயக நெறிமுறைகளை ஜெயலலிதா குழிதோண்டிப் புதைத்துவிட்டதாக கருணாநிதி கண்டனக் குரல் கொடுத்தார். ஆனால் அதே கருணாநிதி, 2006 முதல் 2011 வரையில் நடைபெற்ற தனது ஆட்சியில் 11 இடைத்தேர்தல்களைச் சந்திக்க நேர்ந்தது. அந்த 11 இடைத்தேர்தல்களிலும் கலைஞர் தனது ஆட்சி அதிகாரத்தையும் தனது கட்சிக்காரர்கள் குவிந்திருக்கும் பணத்தையும் அமைச்சர் பெருமக்களின் வீதி உலாவையும் மையப்படுத்தியே வெற்றிகளைக் குவித்தார்.
ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் ஓரளவாவது இருந்த ஜனநாயக மரபுகள் கருணாநிதியின் ஆட்சியில் முழுவதுமாக கல்லறைக்கு அனுப்பப்பட்டன. ஒரு தொகுதியின் வாக்காளர் பட்டியலை வைத்துக்கொண்டு, கட்சிபேதமில்லாமல் வீடுவீடாகச் சென்று, ஆயிரக்கணக்கில் பணத்தை அள்ளியிறைத்து, நிர்வாக எந்திரங்களை முற்றிலும் தவறாகப் பயன்படுத்தி, கருணாநிதியின் திருமகன் திருமங்கலம் இடைத்தேர்தலில் பெற்ற வெற்றிதான் ஒரு புதிய பாணியையே தமிழக அரசியலில் தொடங்கி வைத்தது.
இலவசங்களும் தேர்தல் நேரத்தில் பட்டுவாடா செய்யப்படும் கறுப்புப் பணமும் பிரியாணி பொட்டலங்களும் மதுபான புட்டிகளும் தமிழக வாக்காளர்களை எளிதில் விலைக்கு வாங்குவதற்குப் போதுமானவை என்கிற அரசியல் சூத்திரத்தை அரங்கேற்றிய குற்றவாளியான கருணாநிதிக்கு, ஜெயலலிதாவைக் குறைகூற எந்த தார்மீகத் தகுதியும் கிடையாது. கருணாநிதி ஆட்சியில் இடைத்தேர்தல்களில், ‘கோடிக்கணக்கான பணம் கொட்டப்பட்டது. அனைத்து அமைச்சர்களும் முற்றுகையிட்டனர். நிர்வாக எந்திரம் தவறாகப் பயன்பட்டது. தேர்தல் விதிமுறைகள் திட்டமிட்டு மீறப்பட்டன’ என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சி வரிசையில் இருந்தபோது ஜெயலலிதா தெரிவித்தார். இதனால்தான் பென்னாகரம் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. ‘டெபாசிட்’ இழக்கும் அதிர்ச்சிமிக்க அனுபவத்தைக்கூட அடைந்தது.
கருணாநிதி ‘பாம்பின் கால் பாம்பறியும்’ என்ற பழமொழிக்கு உட்பட்டவர். முள்ளை முள்ளால் எடுப்பதும் வைரத்தை வைரத்தால் அறுப்பதும் ஊழலை ஊழலால் ஒழிப்பதும் பொதுவாழ்வில் அவர் நிகழ்த்திக் காட்டிய சாதனைகள் என்பதை சாதாரண மனிதனும் அறிவான். அவரது பணப்பெட்டிகளான எ.வ.வேலுவும் நேருவும் பொன்முடியும் துரைமுருகனின் மேற்பார்வையில் களமிறங்கி, அஞ்சாநெஞ்சரின் ஆசீர்வாதத்துடன், தளபதியின் வியூகங்களோடு அ.தி.மு.க.வை களத்தில் சந்தித்தனர்.
ஒருபக்கம் வெள்ளம், மறுபக்கம் நெருப்பு, இடையினில் மக்கள் என்பதுபோல்... ஒருபுறம்அதிகாரத்திலிருக்கும் அ.தி.மு.க., மறுபுறம் கோடிக்கணக்கில் பணம் குவித்து வைத்திருக்கும் தி.மு.க., என்ற இரண்டு சக்திகளுக்கு இடையே வைகோ தன் நேர்மையையும் தமிழினம் சார்ந்த போர்க்குணத்தையும் அர்ப்பணிப்புடன் பணியாற்றக்கூடிய அருந்தொண்டர்களையும் மாற்று அரசியலுக்கு சங்கரன்கோவில் மக்கள் அடித்தளத்தை அமைத்துக்கொடுப்பார்கள் என்று ஆழ்ந்த நம்பிக்கையையும் துணையாகக் கொண்டு களத்தில் இறங்கினார்.
வைகோவின் வாக்குகளைப் பிரிக்கவேண்டும் என்கிற ஒரே நோக்கத்தில் களமிறக்கப்பட்டவர் விஜயகாந்த். அவரும் அவரது மனைவியும் ஒரு வாரம் தொகுதி முழுவதும் சுற்றிச் சுழன்றார்கள். அதன் விளைவு தே.மு.தி.க. ‘டெபாசிட்’ இழந்தது மட்டுமின்றி, ம.தி.மு.க. ‘டெபாசிட்’ இழப்பதற்கும் விஜயகாந்த் அடித்தளமிட்டார். விஜயகாந்த் வீணாக களத்தில் நின்றிருக்காவிட்டால், ம.தி.மு.க. முப்பதாயிரம் வாக்குகளுக்கு மேல் பெற்றிருக்கக் கூடும். தி.மு.க. ‘டெபாசிட்’ இழந்தும், ம.தி.மு.க. ‘டெபாசிட்’ இழக்காமலும் ஒரு புதிய திருப்பம் உருவாகி இருக்கும். தி.மு.க. மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டிருக்கும். வைகோ முன்னிறுத்தப்பட, களம் கனிந்திருக்கும். இந்த நல்ல ஆரோக்கிய அரசியல் சூழல் கெட்டுப்போக காரணமாக நின்றவர் விஜயகாந்த்.
சங்கரன்கோவில் இடைத்தேர்தல் நமக்கு வழங்கியிருக்கும் செய்தி ஒன்றுதான். இலவசங்கள் என்று தற்காலிக சந்தோஷங்களுக்கு நிரந்தர சுகங்களை விற்றுவிடும் மனோபாவம் நம் வாக்காளர்களிடம் இருந்து இன்னும் விடைபெறவில்லை. தமிழரைப் பற்றியிருக்கும் இந்த மலினமான நோய் விலகாதவரை, மாற்று அரசியலுக்கான களம் அமைவது கடினம்.
நன்றி : தமிழருவி மணியன் (குமுதம் ரிப்போர்ட்டர்)
No comments:
Post a Comment