Obey என்ற வார்த்தையிலிருந்தே obedience வந்திருப்பதாக எவரும் புரிந்துகொள்ள முடியும். லாடினிலிருந்து வந்த அந்த (ஒபீடியன்ஸ் என்ற) வார்த்தைக்கு ‘கவனமாகக் கேட்டுக்கொள்வது’ என்றே மூலத்தில் அர்த்தம் என்றும் சொல்கிறார்கள்.சுச்ரூஷை’ என்று ஒன்று நாம் சொல்கிறோம். குரு சுச்ரூஷையையே சிஷ்யனுக்குத் தலையான கடமையாகச் சொல்கிறோம். அதற்கும் நேர் அர்த்தம் ‘கேட்டுக் கொள்கிறது’தான்.ஆக, கீழ்ப்படிதல் என்பதற்கு இங்கிலீஷ் வார்த்தையான ஒபீடியன்ஸ், பணிவிடை என்பதற்கு நம் தேசத்து வார்த்தையான சுச்ரூஷை ஆகிய இரண்டும் ‘கேட்டுக் கொள்வது’ என்ற ஒரே அர்த்தத்தின் அடியாகத்தான் இருக்கிறது. கீழ்ப்படிவதும் பணிவிடையும் ஒன்றையொன்று இட்டு நிரப்பிக் கொள்கிற விஷயங்கள். இரண்டிற்கும் இரண்டு வேறே பாஷைகளில் ஒரே அர்த்தம். ஏன் அப்படி இருக்கணுமென்றால்...‘கேட்டுக் கொள்வது’ என்றால், என்ன கேட்டுக் கொள்கிறோமோ அந்தப்படியே செய்ய வேண்டும் என்பதுதான் உள்ளர்த்தம். ‘சொன்னதைக் கேளு!’, ‘சொன்னபடி கேக்கறதில்லே’ என்றெல்லாம் சொல்லும்போது அதுதானே அர்த்தம்? 'Hear'-கும் அந்த அர்த்தமுண்டு. பெரியவர்கள் சொன்னபடி நடப்பதுதான் நிஜமான சுச்ரூஷையும் ஒபீடியன்ஸும். அதனால்தான் அப்படி வார்த்தைகள் ஏற்பட்டிருக்கின்றன.ரொம்பப் பொருத்தமாக ஒன்று தோன்றுகிறது. ஒபீடியன்ஸைக் கீழ்ப்படிதல் என்று சொல்கிறோம். உடம்பு பூராவையும் வாஸ்தவமாகவே கீழே பூமியிலே படியவிட்டுக் கிடப்பதுதான் ஸாஷ்டாங்க நமஸ்காரமாக இருக்கிறது!
- ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்
No comments:
Post a Comment