Saturday, March 17, 2012

மீண்டும் பரபரப்பை ஏற்படுத்திய நித்தியானந்தா வழக்கு.

நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது நித்தி யானந்தா வீடியோ விவகாரம்.

கடந்த சில தினங்களுக்கு முன், நித்தி யானந்தா ஆசிரமம் சார்பில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பான புகார் ஒன்று கொடுக்கப்பட்டது. 'நித்தியானந்தா தொடர்பான ஆபாச வீடியோ காட்சிகளை வெளியிடாமல் இருக்க 60 கோடி ரூபாய் கேட்டு நித்தியானந்தா மிரட்டப் பட்டார். அடுத்து, சீடர்களை மிரட்டி 42 லட்சத்தைப் பறித்துக் கொண்டனர். மிரட்டல் விடுத்த லெனின் கருப்பன், சக்சேனா, ஐயப்பன் உள்ளிட்ட ஒன்பது பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று அந்த மனுவில் கூறி இருந்தனர்.

Nithyanandha

இந்த வழக்கில் சக்சேனா, ஐயப்பன் ஆகியோர் ஏற்கெனவே கைதாகி ஜாமீனில் வந்துவிட்டாலும், லெனின் கருப்பன் மட்டும் தலைமறைவு வாழ்க்கை நடத்தியபடி உச்ச நீதிமன்றம் வரை சென்று முன் ஜாமீனுக்குப் போராடிக் கொண்டு இருந்தார். அவரது ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்யவே, வேறு வழி இல்லாமல் கடந்த 14-ம் தேதி சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் சரண்டர் ஆகியுள்ளார். லெனின் கருப்பன் கக்கப்போகும் உண்மைகளால், நித்தி யானந்தா வீடியோ விவகாரத்தில் திடீர் திருப்பங்களும், அதிரடிக் கைதுகளும் அரங்கேறலாம் என்று காவல்துறை வட்டாரத்தில் பலத்த கிசுகிசுப்பு கிளம்பியுள்ளது.

சரண்டருக்காக தனது வழக்கறிஞர் சுமதியுடன் சி.பி.சி.ஐ.டி. அலுவலகம் வந்த லெனின் கருப்பனை சந்தித்துப் பேசினோம்.

''நித்தியானந்தாவும் ரஞ்சிதாவும் இருக்கும் சி.டி. உண்மையானது. அதில் எந்தச் சந்தேகமும் தேவை இல்லை. நித்தியானந்தாவே தனது தவறை என்னிடம் ஏற்கனவே ஒப்புக் கொண்டுள்ளார். அதற்கான ஆடியோ ஆதாரம் என்னிடம் உள்ளது. நான் யாரையும் மிரட்டிப் பணம் பறிக்க நினைக்கவில்லை. அந்த வீடியோ வெளியான பிறகு, நித்தியானந்தாவின் தூண்டுதலால் என்மீது 12 பொய் வழக்குகள் போடப்பட்டன. பல்வேறு மட்டங்களில் இருந்தும் மிரட்டல்கள் வந்தன. நித்தியானந்தாவால் எனக்கும் எனது சகோதரர் உயிருக்கும் ஆபத்து இருந்தது. அதனால்தான் சிலகாலம் தலைமறைவாக இருந்தேன். இப்போதும் சரண்டர் ஆவதற்கு முன், எனக்கும், எனது சகோதரருக்கும் தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதியிடம் மனு கொடுத்துவிட்டே வந்தேன்.

கர்நாடக அரசு அதிகாரிகள் அந்த வீடியோ உண்மையானதுதான் என்று ஒப்புக் கொண்டார்கள். டெல்லி மற்றும் ஹைதராபாத் தடய அறிவியல் சோதனைகளும் இதை உறுதிப்படுத்தி உள்ளன. எந்தச் சூழலில் அது எடுக்கப்பட்டது என்பது குறித்து என்னிடம் அப்போதே விரிவான வாக்குமூலம் வாங்கி விட்டார்கள். இப்போது, சி.பி.சி.ஐ.டி. போலீஸ் நடத்தும் விசாரனையில் இவை அனைத்தையும் வரிவிடாமல் கூறப்போகிறேன். தமிழக அரசுக்கும், போலீஸுக்கும் முழுஒத்துழைப்பு கொடுத்து, சட்டப்படி இந்த வழக்கை எதிர்கொள்வேன்'' என்று சொல்லிவிட்டுப் போனார் கூலாக.

லெனின் கருப்பன் சரண்டரான மறுநாளே, பத்திரிகையாளர் சந்திப்புக்கு திடீர் அழைப்பு விடுத்தார் நித்தியானந்தா.

''உலகின் தலைசிறந்த 100 ஆன்மிகவாதிகளில் ஒருவராக 'மைண்ட் பாடி ஸ்பிரிட்' என்ற புகழ்பெற்ற ஆன்மீக இதழ் என்னை அங்கீகரித்து இருக்கிறது என்பதை பெருமிதத்துடன் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்'' என்று பேச்சைத் தொடங்கியவர்,

''என்னை களங்கப்படுத்திய அந்த வீடியோ உண்மை அல்ல என்று அமெரிக்காவைச் சேர்ந்த புகழ்பெற்ற நான்கு நிபுணர்கள் சான்றறிக்கை. கொடுத்து உள்ளனர். இந்த நிபுணர்கள் அமெரிக்க உளவு நிறுவனமான எஃப்.பி.ஐ-யின் தரத்தில் சோதனை முறைகளைக் கையா ண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வீடியோவில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு, படங்கள் பெருமளவு வெட்டியும், ஒட்டியும் தொடர் படங்களாக வெளியிட்டு உள்ளனர். ஒருவர் மேல் ஒருவர் இருப்பது போன்று தோற்றமளிக்க வேண்டும் என்பதற்காக படங்கள் ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கப்பட்டு உள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. என்னிடம் இருந்து பணத்தையும், நிலத்தையும் அபகரிக்க மிரட்டிப் பார்த்தனர். பணியவில்லை என்றதும், என் புகழைக் கெடுக்க சதி செய்தனர். எனது சீடர் தர்மானந்தாவை ஒரு நாள் முழுவதும் சிறைப்பிடித்து ஐயப்பன் கொடுமைப்படுத்தினார். அடி வாங்கிய தழும்பு அவரது நெத்தியில் இன்றும் உள்ளது. 10 லட்சம் கொடுத்த பிறகே அவரால் வெளியே வர முடிந்தது. 42 லட்சத்தை எங்கள் சீடர் களிடம் இருந்து மிரட்டிப் பறித்துக் கொண்டனர். 200 கோடியில் ஆரம்பித்து 60 கோடி வரை பேரம் பேசினர். லெனின் கருப்பன் மிரட்டவில்லை என்று கூறுவது சுத்தப்பொய். மிரட்டிப் பணம் பறித்தது உண்மைதான் என்று, சக்சேனாவும், ஐயப்பனும் சி.பி.சி.ஐ.டி அதிகாரிகளிடம் வாக்குமூலம் கொடுத்து உள்ளனர். லெனின் கருப்பன் இதற்கு உடந்தை'' என்றார் சீறலாக.

ஒரிஜினல் யார்? டூப்ளிகேட் யார்? சி.பி.சி.ஐ.டி-யாவது வெளிக்கொண்டு வருமா சி.டி. உண்மைகளை?!

No comments:

Post a Comment