தமிழகத்தில் சமீப காலமாக வங்கிகளின் வாராக் கடன் அதிகமாகிக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக, கல்விக் கடனும், குறு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட கடன்களும் வாராக் கடனாக மாறி வருகிறது. இந்நிலையில், இனி யார் கடன் கேட்டு வந்தாலும் அவர்களின் பின்னணியை முழுமையாக விசாரித்தபிறகே, கடன் தருவது என்கிற முடிவுக்கு வங்கிகள் வந்துள்ளன.
இந்த இக்கட்டான நிலையில் நீங்கள் கடன் கேட்டு விண்ணப்பித்தால், உங்கள் கடன் மனு தள்ளுபடி ஆவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. உங்கள் கடன் மனுவை வங்கிகள் தள்ளுபடி செய்யாமல் இருக்க, உங்களுக்கு கட்டாயம் கடன் கிடைக்க நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்:
1. இதற்கு முன் வங்கி கிரெடிட் கார்டு அல்லது வேறு ஏதாவது கடனுக்கான மாதத் தவணையை சரியான தேதியில் கட்டாமல் அபராதத்துடன் கட்டியிருந்தால், உங்கள் கடன் மனு தள்ளுபடி ஆவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. இதற்கு நியாயமான காரணத்தை எடுத்துச் சொன்னால், உங்களுக்கு நிச்சயம் கடன் கிடைக்கும்.
2. உங்கள் வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச தொகை, சரிவர பராமரிக்கப்படவில்லை என்று தெரியவந்தால், காசோலை கொடுத்து பணம் இல்லாமல் திரும்பி இருந்தால் உங்களுக்கு கடன் கிடைக்காமல் போக வாய்ப்புண்டு. இங்கேயும் நியாயமான காரணம் இருந்தால் எடுத்துச் சொல்லி, கடன் பெறுவதற்கான தகுதியை வளர்த்துக் கொள்ளுங்கள்.
3. எந்த வங்கியில் கடன் வாங்கியிருந்தாலும், எந்த கிரெடிட் கார்டு கடன் இருந்தாலும் அவற்றை நீங்கள் சரியாகத் திரும்ப கட்டாத பட்சத்தில் உங்கள் பெயர் சிபிலில் இடம் பெற்றுவிடும். சிபிலில் உங்கள் பெயர் வந்து விட்டால், உங்கள் கடன் மனு நூறு சதவிகிதம் தள்ளுபடி ஆகும். முதலில் அந்த கடனை கட்டி, சிபிலில் இருந்து வெளியே வந்தால் மட்டுமே மீண்டும் உங்களுக்கு கடன் கிடைக்க வாய்ப்புண்டு.
4. கடந்த மூன்றாண்டு களில் நீங்கள் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யவில்லை எனில், உங்கள் கடன் மனு நிராகரிக் கப்படும். எனவே, வரித் தாக்கல் செய்துவிட்டு, வங்கி வாசலை மிதிப்பதே சரி.
5. ஒருவருடைய சம்பாத்தியத்தில் 40 சதவிகிதம் மாதத் தவணை கட்டும் அளவுக்கு மட்டுமே கடன் கிடைக்கும். நீங்கள் ஏற்கெனவே வேறு சில கடன் வாங்கியிருந்து, அதற்கு மாதத் தவணையாகப் பெரும் பணம் செலுத்தும் பட்சத்தில் உங்களுக்கு கடன் கிடைக்காது. எனவே, மற்ற கடன்களை முதலில் அடைத்துவிட்டு, புதிய கடனை கேட்டால் நிச்சயம் கிடைக்கும்.
6. அதிக தொகை கடனாக கிடைக்க வேண்டும் என்பதற்காக, மனைவி அல்லது மகன்/மகளை இணை விண்ணப்பத்தாரராக (சிஷீணீஜீஜீவீறீநீணீஸீt) காட்டுகிறார்கள் பலர். இவர்களில் யாரேனும் ஒருவர், வாங்கிய கடனை சரியாக திரும்பக் கட்டவில்லை என்கிற விவரம் சிபில் அறிக்கை மூலம் தெரிய வந்தால், உங்கள் கடன் மனு தள்ளுபடியாகும். எனவே, உங்கள் இணை விண்ணப்பத்தாரர் ஏற்கெனவே வாங்கிய கடனை சரியாகத் திரும்ப கட்டியிருக்கிறாரா என்று பாருங்கள்.
7. இணை விண்ணப் பத்தாரர் சகோதரர், சகோதரி, நண்பராக இருந்தாலும் உங்கள் கடன் மனு தள்ளுபடியாக வாய்ப்பிருக் கிறது. மனைவி, கணவர், பெற்றோரை மட்டுமே இணை விண்ணப்பத்தாரராக வங்கிகள் ஏற்றுக் கொள்ளும்.
8. ஒருவர் ஒரு வேலைக்குச் சேர்ந்து மிகச் சில ஆண்டுகளே ஆகியிருந்தாலும் கடன் மனு தள்ளுபடி ஆவதற்கு வாய்ப்புள்ளது. பணி நிரந்தரமாகி மூன்றாண்டுகள் கடந்திருந்தால் மட்டுமே கடன் கிடைக்கும்.
9. நண்பர்கள் அல்லது உறவினர்கள் என யாராவது வாங்கிய கடனுக்கு நீங்கள் கேரண்டர் கையெழுத்து போட்டு, அவர் அந்த கடனை சரியாக கட்டவில்லை எனில், உங்களுக்கு கடன் கிடைக்காது. நீங்கள் கேரண்டர் கையெழுத்து போட்டவர் கடனைத் திரும்பக் கட்டினால் மட்டுமே உங்களுக்கு கடன் கிடைக்கும்.
10. ஏற்கெனவே கடன் வாங்கி சரியாக திரும்பக் கட்டாமல் போன ஒருவரின் வீட்டு முகவரியும், உங்கள் வீட்டு முகவரியும் ஒன்றாக இருந்தால் உங்களுக்கு கடன் கிடைக்காமல் போக வாய்ப்புண்டு. இப்படி ஒரு குழப்பம் நடந்திருப்பது உங்களுக்குத் தெரிந்தால், அதை ஆதாரத்தோடு எடுத்துச் சொல்லுங்கள். அப்போதுதான் உங்களுக்கு கடன் கிடைக்கும்.
No comments:
Post a Comment