பி.எம்.மல்லிகார்ஜுனையா...
அரசியல் எல்லைகளைக் கடந்து, இந்தியாவே உன்னிப்பாகக் கவனித்துவரும், முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் நீதிபதி!
14 ஆண்டுகளாக ஆஜராகாமல் இருந்த ஜெயலலிதாவை கோர்ட் படி ஏறவைத்தது, சசிகலாவை வளைத்து வளைத்துக் கேள்வி கேட்பது எனப் பரபரப்பின் மையமாக இருக்கிறார். இவருடைய முன்கதைச் சுருக்கம் என்ன?
கர்நாடக மாநிலம், பெல்லாரி மாவட்டத்தில் உள்ள ஹார்ப்பனகள்ளி என்ற, செல்போன் சிக்னல்எட்டாத ஒரு குக்கிராமத்தைச் சேர்ந்தவர். 1952-ம் ஆண்டு ஆகஸ்ட் 4-ம் தேதி ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்த மல்லிகார்ஜுனையா, அரசுப் பள்ளியில்தான் பள்ளிக் கல்வியை முடித்தார். தலைமுறையிலேயே முதல் நபராக கல்லூரியில் காலடி எடுத்துவைத்தார். பெல்காம் சட்டக் கல்லூரியில் படித்த மல்லிகார்ஜுனையா, நான்கு ஆண்டுகள் பெல்காம் மாவட்டக் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணிபுரிந்தார். அதன்பிறகு, அப்பாவின் ஆசைக்காக, தனக்குப் பிடித்த வழக்கறிஞர் பணியை விடுத்து, நீதிபதி பதவிக்கானத் தேர்வு எழுதி... முதல் முயற்சியிலேயே தேர்ச்சி அடைந்தார்.
இப்போதும் பெங்களூருவில் சொந்த வீடு இல்லாததால், கோரமங்களாவில் உள்ள 'ஏசியா கேம் வில்லேஜ்’ எனும் நீதிபதிகளுக்கான குடியிருப்பில் குடும்பத்துடன் வசிக்கிறார். பெங்களூரு தனியார் கல்லூரியில் பி.பி.எம். இரண்டாம் ஆண்டு படிக்கிறார் இவரது ஒரே மகன். பலத்த நச்சரிப்புக்குப் பிறகு, மகனுக்குத் தவணை முறையில் ஸ்ப்ளெண்டர் பைக் வாங்கிக் கொடுத்தார். இவருக்குச் சொந்தமாக கார் கிடையாது.
லிங்காயத்து சமூகத்தைச் சேர்ந்தவர். அதனால் லிங்காயத்து மடாதிபதிகள் மீது பக்தியும் அன்பும் உண்டு. ஆனால், கடந்த 2009-ல் ஒரு மடாதிபதி நீதித்துறையில் மூக்கை நுழைக்கவே, மடங்களுக்குச் செல்வதை முழுமையாக நிறுத்தி விட்டார் என்று இவரை அறிந்தவர்கள் சொல்கிறார்கள்.
பெல்காம் மாவட்ட மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நான்கு ஆண்டுகள் நீதிபதியாகப் பணியாற்றிய பிறகு, பெல்காம் மாவட்ட முன்சீப் நீதிமன்றத்தில் 10 ஆண்டுகள் சிவில் நீதிபதியாகப் பணிபுரிந்தார். அதன்பிறகு, பெங்களூரு மாவட்ட மாஜிஸ்திரேட் கோர்ட்டுக்கு மாற்றப்பட்டார்.
ஒரு கட்டத்தில் எஸ்.எம்.கிருஷ்ணா, தேவகவுடா போன்ற அதிகாரப் புள்ளிகளை அதிரவைக்கும் அளவுக்கு சட்டத்தைச் சுழற்றியதால் பரபரப்பாகப் பேசப்பட்டார். பிறகு, கர்நாடகத்தில் உயர்ந்த பதவியாகக் கருதப்படும் லோக் ஆயுக்தா நீதிமன்ற நீதிபதியாக 2006-ல் நியமிக்கப்பட்டார்.
ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கு, பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்ட 2004-ம் ஆண்டு, இதன் நீதிபதியாக இருந்தவர் பச்சேபுரா. அவர் லண்டன் ஓட்டல் வழக்கையும் சொத்துக் குவிப்பு வழக்கையும் ஒரே வழக்காக அறிவித்ததில், சர்ச்சை உருவானது. இதனால், நீதிபதி பச்சேபுராவுக்கு மாற்றாக, நீதிபதி மனோலி நியமிக்கப்பட்டார். அடுத்த இரண்டு ஆண்டுகளில் அவரும் ஓய்வு பெற்றுவிடவே, மல்லிகார்ஜுனையா நியமிக்கப்பட்டார். இவர் விசாரிக்கும் முதல் கிரிமினல் வழக்கு என்பதால், ரொம்பவே மெனக்கெட்டு கேஸ் ஸ்டடி செய்து, நீண்ட ஆராய்ச்சிக்குப் பிறகே கேள்விகளைத் தயார் செய்தார்.
''எப்போதுமே தனிமை விரும்பியான மல்லிகார்ஜுனையா, ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கின் நீதிபதியாக நியமிக்கப்பட்டதில் இருந்து, தன்னைச் சுற்றிய பாதுகாப்பு வளையத்தை மேலும் அதிகரித்துக்கொண்டார். முன்பு, தினமும் காலையும் மாலையும் தன்னுடைய அபார்ட்மென்ட் பார்க்கில் வாக்கிங் போவார். அதை நிறுத்திவிட்டு, இப்போது வீட்டுக்குள்ளே யோகா மட்டும் செய்கிறார். சுற்றுலா, ஷாப்பிங் போவதையும் மூன்று ஆண்டுகளாகவே நிறுத்தி விட்டார். தவிர்க்க முடியாத சொந்தக்காரர்கள், நண்பர்களுடைய இல்ல விழாக்களுக்குப் போனால், அதிகபட்சம் அரை மணி நேரத்துக்கு மேல் இருக்க மாட்டார்.
இவர், மற்ற நீதிபதிகளின் கேபினுக்குள் நுழைவது இல்லை. அதேபோல், அவர்களையும் தன்னுடைய கேபினுக்குள் அனுமதிப்பது இல்லை.'' என்று பெங்களூரு வழக்கறிஞர்கள் சொல்கிறார்கள்.
நீதிபதி மல்லிகார்ஜுனையா வரும் ஆகஸ்ட் 4-ம் தேதியுடன் ஓய்வு பெற இருக்கிறார். அதற்குள் ஜெயலலிதா வழக்கை முடிக்கத்தான் அவசரப்படுகிறார் என்று ஒரு பேச்சு கிளம்பியது. அப்போது அவர், 'நான் இருக்கும் வரை என்ன செய்ய முடியுமோ, அதை மிகவும் சரியாகச் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். வீண் அவசரம் நீதித்துறையில் இருக்கவே கூடாது’ என்று, உறுதியாகச் சொன்னாராம். அதனால், குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஒத்துழைத்தால் மட் டுமே, இந்த வழக்கு ஆகஸ்ட் மாதத்துக்குள் முடிய வாய்ப்பு உள்ளது. இல்லை என்றால், அடுத்த நீதிபதி வந்த பிறகே தீர்ப்பு கிடைக்கும் என்றும் சொல்லப்படுகிறது.
''இந்த வழக்கு முக்கியக் கட்டத்தை எட்டிவிட்டதால், மல்லிகார்ஜுனையாவுக்கு நீட்டிப்பு கொடுக்க முடியுமே?'' என்று அவர்களிடமே கேட்டோம்.
''அதற்கு வாய்ப்பு குறைவாகத்தான் இருக்கிறது. முதலில், மல்லிகார்ஜுனையா விருப்பம் தெரிவிக்க வேண்டும். அடுத்து, ஜெயலலிதா தரப்பும், கர்நாடக அரசுத் தரப்பும் சம்மதிக்க வேண்டும். இவை எல்லாம் நடக்குமா?'' என்று பதில் கேள்வி கேட்கிறார்கள்.
No comments:
Post a Comment