சிறைக் கம்பிகளுக்குள் சிக்கிக்கிடக்கும் சசிகலா கோஷ்டியின் முக்கியப் புள்ளிகள், மகா கொந்தளிப்பில் இருக்கிறார்கள். 'எப்போது ஜாமீன் கிடைக்கும்?' என்பதுதான் அவர்களின் ஒரே கேள்வி.
கோவை சிறையில் ராவணன், புழல் சிறையில் மிடாஸ் மோகன், திருச்சி சிறையில் எம்.நடராஜன், திவாகரன். இவர்களை அடுத்து இப்போது, தஞ்சாவூர் மகாதேவன் போலீஸாரால் தீவிரமாகத் தேடப்பட்டு வருகிறார்.
பெங்களூரு செக்!
இந்த நிலையில், பெங்களூரு கோர்ட்டில் சசிகலாவிடம் நடந்துவரும் விசாரணைப் படலம், கிட்டத்தட்ட முக்கால்வாசியைத் தொட்டுவிட்டது. அடுத்து சுதாகரன், இளவரசி ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும். விசாரணைப் போக்கைப் பார்த்தால், மூவரிடமும் விசாரணை முடிவதற்கு ஆகஸ்ட் மாதம் வரை ஆகலாம். மூவரின் விசாரணையும் முடியும்வரை எந்தக் கார ணம் கொண்டும் சசிகலா கோஷ்டியினர் வெளியே வந்து விடக் கூடாது என்பதில் மேலிடம் உறுதியாக இருக்கிறதாம். அதனால், ஒரு வழக்கில் ஜாமீன் கிடைக்கும் சூழல் ஏற்பட்டாலே, அதற்குள் அடுத்த வழக்கைப் போட்டு முடக்கி வருகிறார்கள்.
இதுபற்றி, பெங்களூரூவில் உள்ள போலீஸ் அதிகாரியிடம் கேட்டபோது, ''ஒரே கோணத்தில் வழக்கு விசாரணை செல்லவேண்டும் என்று ஜெயலலிதா நினைக்கிறார். ஆனால் சசிகலா குடும்பத்தினர், இந்த வழக்கு முடிவதற்குள்ளாகவே அரசியலில் தங்களை நிலைநிறுத்திக்கொள்ளப் பார்க்கிறார்கள். ஆள்ஆளுக்கு எதையாவது சொல்லி சசிகலாவைக் குழப்பிவிடக்கூடாது என்பதற்காகத்தான் சிறையில் வைத்திருக்கிறோம். ஜெய லலிதா வழக்கு நல்லபடியாக(?) முடிந்ததும், உள்ளே இருப்பவர்கள் வெளியே வரலாம். அதுவரை ஜெயில்வாசம்தான்'' என்கிறார்.
விளார் டீம்!
நடராஜன், திவாகரன், ராவணன் ஆகியோரை எந்தக் காரணம்கொண்டும் வெளியேவிடக் கூடாது என்பதில் போலீஸ் உறுதியாக இருப்பதுபோலவே, இவர்கள் மூவரையும் விரைவில் வெளியே எடுக்க வேண்டும் என்றும் ஒரு குரூப் தீவிரமாக இயங்கி வருகிறது. இதற்காக உழைக்கும் மூவர்களின் விசுவாசிகளும், 'விளார் டீம்' என்ற பெயரில் ஒன்று சேர்ந்து இருக்கிறார்கள். கட்சியிலும் அரசாங்கத்திலும் பொறுப்பில் இருக்கும் முக்கியப் புள்ளிகள் யாரையும் இந்த விளார் டீம் நேரில் சந்திப்பது இல்லை. ஏனென்றால், சி.ஐ.டி. போலீஸார், கண்களில் சிக்கிவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார்கள்.
அதனால், மிகவும் சாதாரணமான மனிதர்களை முன்னிறுத்தி, இவர்கள் பின்னே இருந்து இயக்குகிறார்கள். சட்ட ஆலோசனை, நிதி உதவி, கைதுக்கு முன்னே துப்புக் கொடுத்து பதுங்கச் செய்வது, சிறையில் தேவையான வசதிகளைச் செய்து தருவது போன்றவற்றைத் திறம்படச் செய்து கொடுக்கிறார்கள். இந்த விளார் டீமில் இருக்கும் முக்கியமான மும்மூர்த்திகள் பற்றிய விவரம் இப்போது மேலிடத்தின் பார்வைக்கு அனுப்பப்பட்டு உள்ளதாம். மேலிடத்தில் சம்மதம் கிடைத்தால், உடனே அவர்கள் மீதும் அதிரடி நடவடிக்கை எடுக்கப்படலாம் என்பதுதான் இன்றைய நிலைமை.
யார் அந்த மும்மூர்த்திகள்?
தஞ்சாவூரில் உள்ள பிரபல எதிர்க்கட்சிப் பிரமுகரின் பணக்கார உறவினர், திருச்சியைச் சேர்ந்த பிரபல கான்ட்ராக்டர், புதுக்கோட்டையைச் சேர்ந்த பிரபல கான்ட்ராக்டர் மூவரும்தான் சசிகலா கோஷ்டியின் முக்கியப் புள்ளிகளை வெளியே கொண்டுவருவோம் என்று சபதம் போட்டுச்செயல்பட்டு வருகிறார்களாம். இவர் களுக்கு, வெளிநாடு ஒன்றில் பெரிய பதவியில் இருக்கும் பிரபலத்தின் உறவினர் ஒருவர் மறை முகமாக ஆலோசனை வழங்குகிறாராம். இதை எல்லாம் நடைமுறையில் செயல்படுத்த மக்கள் தொடர்புத் துறையில் நல்ல அனுபவம் உள்ள சிலர் நியமிக்கப்பட்டு இருக்கிறார்களாம். இந்த ஒட்டுமொத்த டீமும் திருச்சி ஜங்ஷன் அருகில் உள்ள பிரபல ஒட்டலில் அடிக்கடி சந்தித்துப் பேசு கிறது.
பொய் வழக்கு இல்லையா?
நடராஜன், ராவணன், திவாகரன் ஆகியோர் மீது அடுத்தடுத்து வழக்குகள் ஏன் போடப்படுகின்றன என்று திருச்சியில் உள்ள போலீஸ் உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது,
''நாங்க ஏன் அவங்க மேல் நிலஅபகரிப்பு மாதிரியான கேஸ் போடப்போகிறோம். நிஜமாகவே, அவர்கள் போட்ட ஆட்டத்தால் பாதிக்கப்பட்டு இதுவரை பயந்து கிடந்தவர்கள், பவர் போய்விட்டது தெரிந்ததும் வண்டி வண்டியாக எங்களைத் தேடிவந்து புகார் களைத் தருகிறார்கள். எம்.நடராஜன் மீது 10 வருடங்களுக்கு முன், டாலர் தொடர்புடைய சர்ச்சையில் பெயர் அடிப்பட்டதாம். இப்போது அதுபற்றி போலீஸில் தகவல் சொல்கிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இதுமாதிரி பண மோசடி, பதவி வாங்கித் தருவதாக ஏமாற்றியது, பணம் வாங்கிக்கொண்டு சிபாரிசு செய்தது என்று ரகம் ரகமாய் புகார்கள் குவிகின்றன. அதனால்தான் நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம்'' என்று சொன்னார்.
இவரைப் போலவே, தென் சென்னை போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, ''மிடாஸ் மோகனை 50 லட்ச ரூபாய் மோசடிப் புகாரில் கைது செய்தோம். இதைக் கேள்விப்பட்டு அடையார் ஏரியாவில் இருந்து ஏகப்பட்ட போன்கள் வருகின்றன. உதாரணத்துக்கு, பரமேஸ்வரி நகர்வாசிகள் பலரும் சோகத்துடன் சொன்ன ஒரு விஷயத்தைக் கேளுங்கள். மோகன் வீட்டுக்கு அருகே இன்னொருவருக்குச் சொந்தமான நிலம் இருந்ததாம். 'அங்கே பில்டிங் ஏறினால், உனக்கு இறங்கு முகம் ஆரம்பித்துவிடும்' என்று யாரோ ஒரு ஜோதிடர் சொல்லி விட்டாராம். அதனால், அந்த இடத்துக்காரரிடம் விற்கச் சொல்லி கேட்டு இருக்கிறார் மோகன். அவர் தரவில்லை. ஆனால் அந்த இடத்தை மோகனுக்குத் தராமல் சாய்பாபா பக்தர் ஒருவரிடம் விற்று விட்டாராம். இடத்தை வாங்கிய பக்தரும் அப்பாவித்தனமாக, அந்த காலி இடத்தில் வீடு கட்டத் தொடங்கினாராம். இதைப் பார்த்து டென்ஷனான மோகன், தொடர்ந்து ஏகப்பட்ட டார்ச்சர்களைக் கொடுக்கவே, 'விட்டால் போதும்’ என்ற நிலையில் இடத்தை எழுதிக் கொடுத்துவிட்டு, பணத்தை வாங்கிக்கொண்டு ஓடிவிட்டாராம். இப்போது, அந்த காலி நிலத்தை, தனது கார் பார்க்கிங் ஏரியாவாக வைத்திருக்கிறார் மோகன். அந்த சாய்பாபா பக்தர் யாரென்று இதுவரை எங் களுக்குத் தெரியவில்லை. இப்படிப் பாதிக்கப்பட்ட நபர்கள் தேடிவந்து தகவல்கள் தரும்போது, சம்பந்தப்பட்டவர்கள் மீது நாங்கள் நடவடிக்கை எடுக்காமல் இருக்க முடியுமா?'' என்று கேட்கிறார்கள்.
அதுசரி, ஜெயிலில் எப்படி இருக்கிறார்கள்?
திருச்சி ஜெயிலில் கொடுக்கப்படும் உணவை சந்தோஷமாகச் சாப்பிடுகிறார் நடராஜன். நாகர்கோவிலைச் சேர்ந்த ஒரு கைதி தானாக முன்வந்து நடராஜனிடம் அன்பாகப் பழகி வருகிறாராம். ஆனால், இதே ஜெயிலில் இன்னொரு பிளாக்கில் இருக்கும் திவாகரன், தனக்கு உடல்நிலை சரியில்லை என்று, உணவில் நிறையவே கட்டுப்பாட்டுடன் இருக்கிறார். இருவரையுமே மருத்துவர் அடிக்கடி சோதனை செய்கிறார். ராவணன் தனது ஒரே மகனை நினைத்து நினைத்து, அடிக்கடி சோகத்தில் உட்கார்ந்து விடுகிறாராம். நீரிழிவு, ரத்தக் கொதிப்பு போன்ற நோய்களுக்கு ஆகாத உணவுகளை அறவே எடுத்துக்கொள்வது இல்லை. பத்திரிகைச் செய்திகளை அறிந்துகொள்வதில் அதிக ஆர்வம் காட்டுகிறாராம். கோவை சிறையில் அளிக்கப்படும் யோகா வகுப்புகளைக் கூர்ந்து கவனிக்கிறாராம்.
யார் இந்த மிடாஸ் மோகன்?
மிடாஸ் என்கிற வார்த்தையை அடித்து விட்டு சீக்ரெட் என்று எழுதலாம். அந்த அளவுக்கு மர்மம் நிறைந்தவர் மோகன். அ.தி.மு.க-வின் முக்கிய நிர்வாகிகளும் சாலிக்கிராமம், வடபழனி ஏரியாக்களில் மோகன் பெயரைப் பயன்படுத்தி நிறைய ரியல் எஸ்டேட் பிசினஸ்கள், கட்டப் பஞ்சாயத்துக்கள் நடத்தியது பற்றி போலீஸுக்குப் புகார்கள் குவிந்த வண்ணம் இருக்கிறதாம்.
''எந்த விழாவுக்குப் போனாலும் சரி, எந்த ஒரு பொது இடமாக இருந்தாலும் கேமராவுக்கு முன் தன் முகத்தைக் காட்டாமல் நழுவி விடுவார் மோகன். அவர் இப்போது கைதானபோதுகூட, போலீஸில் தனக்கு இருந்த செல்வாக்கைப் பயன்படுத்தி யாரும் புகைப்படம் எடுக்காதபடி பார்த்துக்கொண்டார். அந்த அளவுக்கு இமேஜ் டேமேஜ் ஆகக்கூடாது என்பதில் உஷார் பார்ட்டி'' என்கிறார்கள் அவருக்கு வேண்டப்பட்டவர்கள். சென்னையை அடுத்த மாதவரம் பூர்வீகம் என்றாலும், அடையார் மோகன் என்றுதான் முதலில் தன்னை பிறரிடம் அறிமுகப்படுத்திக்கொள்வார். சசிகலா தொடர்பில் உள்ள மிடாஸ் மதுபான ஆலையின் முக்கியப் பொறுப்பில் ஒரு சமயம் இருந்ததால், தனது பெயருடன் 'மிடாஸ்' என்பதைச் சேர்த்துக்கொண்டார். ஒரு கட்டத்துக்குப் பிறகு, பதவியில் இருந்து ஒதுங்கி, திரைமறைவில் தனது ஜம்பத்தைத் தொடர்ந்தார். மதுபானங்களைத் தயாரிக்கும் கம்பெனியின் உரிமையாளர்களுக்கு மோகனை நன்றாகவே தெரியும். இவர் ஓ.கே. சொன்னால்தான் காரியங்கள் நடக்கும். திருமழிசை, அம்பத்தூர், பல்லாவரம் ஆகிய இடங்களில் உள்ள டாஸ்மாக் குடோன்களில் இருந்து கடைகளுக்கு சரக்குகளை சப்ளை செய்யும் வாகனங்கள் இப்போதுவரை மோகனின் கண்அசைவில்தான் நடக்கிறதாம். அதேபோல, மின்வாரியத்தின் முக்கிய டெண்டர் விஷயங்களையும் இவர்தான் கவனித்துக்கொண்டார்.
பவர் சென்டர் ஆனது எப்படி?
1990-வாக்கில் போக்குவரத்துத் துறையில் ஜூனியர் அசிஸ்டென்ட் ஆக இருந்தவர் மோகன். இவருடன் அதே துறையில் வேலைபார்த்த தேசபந்து என்பவர் அ.தி.மு.க. மந்திரிகள் சிலரிடம் பி.ஏ.-வாக இருந்தவர். தேசபந்து மூலம் மன்னார்குடி திவாகரன், டி.டி.வி. தினகரன் ஆகியோரிடம் மோகன் அறிமுகமாகி, சசிகலாவின் நம்பிக்கைக்கு பாத்திரமானார். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களின் கட்சி நிர்வாகிகளை நியமனம் செய்யத் தொடங்கினார். உள்ளாட்சி மற்றும் சட்டசபைத் தேர்தல்களில் இவர் சொல்பவருக்கே ஸீட் கிடைத்தது. தாம்பரத்தில் ஒரு குவாரியை தனது பினாமி ஒருவருக்கு வாங்கிக்கொடுத்த விவகாரத்தில், ஆட்சி மேலிடத்துக்குத் தகவல் தெரிந்து முதல் குட்டு விழுந்தது. மன்னார்குடியில் திவாகரனுடன் கூட்டாகச் சேர்ந்து புதிய நகர் ஒன்றை உருவாக்கிய விவகாரமும் இப்போது போலீஸ் விசாரணைக்குள் வந்து விட்டது.
இன்னும் என்ன என்ன மர்மங்கள் வெளிவரப்போகின்றனவோ?
No comments:
Post a Comment