Friday, March 23, 2012

அருள் மழை ----------- 50


‘சௌந்தர்ய லஹரி’யின் முதல் ஸ்லோகத்திலேயே அம்பாளுடைய அபாரமான சக்தியை ஆச்சர்யாள் சொல்கிறார். (சிவ:சக்த்யா யுக்தோ) “சக்தியாகிற அம்மா! பரமேஸ்வரான சிவனும் உன்னுடன் சேர்ந்திருந்தால் தான் கார்யம் செய்வதற்கு திறமை உள்ளவராவார். உன்னோடு சேர்ந்திராவிட்டால் அவரால் துளி அசைவதற்கு கூட முடியாது. அதற்கான சாமர்த்தியம், சக்தி அவருக்கு கிடையாது” என்கிறார், தன்னை தவிர வேறு எதுவும் இல்லாததால், எதையுமே தெரிந்து கொள்ள முடியாமல் இருப்பது ப்ரஹ்மம்.

இருந்தாலும் லோகத்தில் இத்தனை தினுசான அறிவுகள் வந்து விட்டன. ப்ரஹ்மம் எங்குமாக எல்லாமாக இருப்பதால் அது அசைவதற்கு இடம் ஏது? ஆனாலும், பிரம்மாண்டம் முழுக்க, உலகம், நக்ஷத்திரங்களிளிருந்து தொடங்கி அணுவுக்குள் இருக்கிற electron வரையில் எல்லாம் எப்போது பார்த்தாலும் அசைந்து கொண்டே இருக்கின்றன. நம் மனசோ கேட்கவே வேண்டாம் – எப்போது பார்த்தாலும் அசைவுதான்! இத்தனை அறிவுகளும், அசைவுகளும், எப்படியோ பிரம்மத்தில் வந்து விட்ட மாதிரி இருக்கின்றன!

அதுதான் மாயா காரியம்; அல்லது பிரம்ம சக்தியின் பிரபாவம்! பிரம்மத்தை சிவன் என்றும், சக்தியை அம்பாள் என்றும் சொல்கிறபோது, இதையே ஆச்சர்யாள், “அம்மா! நீதான் சிவனையும் ஆட்டி வைக்கிறாய், அசைய வைக்கிறாய்!” என்கிறார். இறுதியில் இல்லாமல் போகிற லோகம் அவளால்தான் வந்தது. யாமா – ஏது இல்லையோ, அதுவே – மாயா. நமக்கு மாயையை போக்குகிறவளும் அவள்தான்.

நாம் பார்க்கிற ரூபமெல்லாம் அவள் செய்ததுதான்.விசேஷமாகச் சில ரூபங்களில் த்யானித்தால் நம் மனசு லயிக்கிறது.எல்லா ரூபத்திற்கும் இடம் தருகிற அகண்ட அரூப ஆகாசமாக இருக்கிரவளே பிராண சக்தியாக, மூச்சு காற்றாய் இருக்கிறாள். அக்னி, ஜலம், பூமி, எல்லாம் அவள் வடிவம்தான்.இதையெல்லாம் அனுபவிக்கிற நம் மனசும் அவள்தான்.

‘மனஸ்த்வம்’ என்கிற ஸ்லோகத்தில் ஆச்சர்யாள் இதையெல்லாம் சொல்கிறார். வடக்கே ஹிமாச்சலத்தில் பர்வத ராஜகுமாரியாகப் பிறந்தவள் தென்கோடியில் கண்யகுமரியாக நிற்கிறாள். மலையாளத்தில் பகவதியாகவும், கர்நாடகத்தில் சாமுண்டேஸ்வரியாகவும், தமிழ் நாட்டில் தொண்டை மண்டலத்தில் காமாட்சியாகவும், சோழ தேசத்தில் அகிலாண்டேஸ்வரியாகவும், பாண்டிய நாட்டில் மீனாட்சியாகவும், ஆந்திர தேசத்தில் ஞானாம்பாளாகவும், மகாராஷ்டிரத்தில் துளஜா பவானியாகவும், குஜாராத்தில் அம்பாஜியாகவும், பஞ்சாபில் ஜ்வாலாமுகியாகவும், காஷ்மீரத்தில் க்ஷீர பவானியாகவும், உத்திர பிரதேசதத்தில் விந்த்யவாசினியாகவும், வங்காளத்தில் காளியாகவும், அஸ்ஸாமில் காமாக்யாவாகவும் – இப்படி தேசம் முழுவதும் பல ரூபங்களில் கோயில் கொண்டு எப்போதும் அனுக்கிரகம் பண்ணி வருகிறவள் அவளே!

No comments:

Post a Comment