Thursday, March 15, 2012

முதல் உலகக்கோப்பையை வென்று சாதனை படைத்த நம் இந்தியப் பெண்கள்..

இந்த.. கிரிக்கெட் உலகக் கோப்பை எப்போது நடந்தது என்று வினா எழுப்பவரா நீங்கள்?. மன்னிக்கவும்..இது கிரிக்கெட் பற்றிய செய்தி அல்ல....கங்காரு தேசத்தில் நொண்டியடித்த நம் சண்டிக்குதிரைகள் பற்றி எதுவும் எழுதத் தேவை இல்லை. நான் சொல்லப்போவது நம் மண்ணும் அதன் வீரமும் சார்ந்த விசயம்.முறத்தை வைத்து புலியை விரட்டியது பழைய கதை என்று இனி யாரும் சொல்ல முடியாது.நம் பெண்களின் வீரத்தை அவ்வளவு குறைவாக மதிப்பிட முடியாது என்பதை நாலு சுவற்றுக்குள் நடந்த சம்பவங்கள் நமக்கு நினைவு கூர்ந்தாலும், நம் நாட்டிற்கு பெருமை சேர்த்த ஒரு சாதனை வெற்றியை நினைத்து நாம் எல்லோரும் சந்தோசப்பட வேண்டும். சமீபத்தில் நடந்த முதலாம் பெண்கள் கபடி உலகக் கோப்பையை நம் இந்திய அணி வென்றிருக்கிறது.



நம் தேசிய விளையாட்டான ஹாக்கியில் பல நேரங்களில் நம் அணி மண்ணைக் கவ்வினாலும் கபடி விளையாட்டில் நம் இந்தியா ஒரு அசைக்க முடியாத சாம்பியன் என்பது உங்களுக்கு தெரியுமா?.நம் கபடி அணியின் சாதனைப் பட்டியலை இங்கு(கபடி.... கபடி..... கண்டுபிடி.. ) தொகுத்து வழங்கியுள்ளேன்.அதைப் படித்து நம் காலரை தூக்கி விட்டுக்கொள்வோம்.(கிரிக்கெட் தோல்வியால் துவண்டு போயுள்ளவர்கள் இதைப்படித்து ஆறுதல் தேடிக் கொள்ளலாம்).

பீகார் தலைநகர் பாட்னாவில்,முதலாம் பெண்கள் கபடி உலகக் கோப்பை போட்டி நடந்தது.இதில் இந்தியா,ஜப்பான்,இலங்கை,இரான்,பங்களாதேஷ், பாகிஸ்தான்,மலேசியா,தாய்லாந்து உள்ளிட்ட பலநாடுகள் கலந்து கொண்டன. இதில் அரை இறுதிப்போட்டிக்கு இந்தியா,ஜப்பான்,இரான், தாய்லாந்து ஆகிய நாடுகள் தகுதிப் பெற்றது.இதில் இந்தியா,ஜப்பானை 60 -21 என்ற புள்ளி வித்தியாசத்தில் இலகுவாக வெற்றி கொண்டு இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

கடந்த 05 -03 -2012 அன்று பாட்னாவில் இதன் இறுதிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவிற்கு ஈரான் கடும் போட்டியைக் கொடுத்தாலும்,ஆட்டம் முழுவதும் இந்தியாவின் கையே ஓங்கியிருந்தது.இடைவேளையின் போது19-11 என்று முன்னிலை பெற்ற இந்தியா,இறுதியாக 25-19 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் ஈரானை வென்று முதல் பெண்கள் கபடி உலகக் கோப்பையை தட்டிச்சென்றுள்ளது.இந்த வெற்றிக்கு வித்திட்ட இந்திய அணியின் கேப்டன் மமதாபூஜாரி-யையும் நம் இந்தியப் பெண்கள் கபடி அணியையும் வாழ்த்துவோம்.

No comments:

Post a Comment