Friday, March 2, 2012

எனது இந்தியா! ( உப்புக் கடத்தல் ) - எஸ். ராமகிருஷ்ணன்....

சுங்கத் தடுப்பு வேலி எனப் பெயரிட்டப்பட்ட இந்த நீண்ட வேலி இந்தியாவை இரண்டாகப் பிரிக்கத் தொடங்கியது. இதனால், உப்பு, சர்க்கரை, தானியங்கள், எண்ணெய் என எந்தப் பொருளைக் கொண்டுசென்றாலும், அது அரசின் கண்காணிப்பு வளையத்துக்குள் இருந்தது. இந்தச் சாவடிகளில் வரிவசூல் செய்யப்பட்டது. அதை மீறுபவர்களை, கடத்தலில் ஈடுபட்டவர்கள் என்று குற்றம்சாட்டி சிறையில் அடைத்தது அரசு.இந்தச் சூழ்நிலையில் 1867-ல் சுங்கத்துறையின் ஆணையராகப் பொறுப்பு ஏற்றார் ஆலன் ஆக்டோ​வியன் ஹியூம். இவர்தான், பின்னாளில் காங்கிரஸ் இயக்கம் உருவாகக் காரணமாக இருந்தவர். சுங்கத் தடுப்பு வேலி உருவாக்குவதற்கும் பராமரிப்புக்கும் எவ்வளவு செலவாகிறது என்று, ஹியூம் ஆராய்ந்தார். வருமானத்தில் பாதி, பராமரிப்புக்கு செலவிடப்படுகிறது என்பதைக் கண்டு பிடித்தார்.தடுப்புச் சுவருக்குப் பதில் உயரமாக வளரும் முட்கள் கொண்ட இலந்தைச் செடிகளை நட உத்தரவிட்டார். எட்டு அடி உயரமும் நான்கு அடி அடர்த்தியுமாக இந்தச் செடிகள் வளர்க்கப்பட்டன. இலந்தை விளையாத இடங்களில் கடுமையான முட்செடிகள் வளர்க்கப் பட்டன. அதுவும் விளையாத இடங்களில் காட்டு முட்களால் பெரியவேலி அமைக்கப்பட்டது. விஷம் உள்ள பாம்புகளும் தேள்களும் நிரம்பிய அந்த வேலியைக் கடந்து செல்வது கடினம்.
ஒரு மைலுக்கு ஒரு காவல் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டது. முள் வேலியை இரவு பகலாக 14,000 வீரர்கள் கண்காணித்தனர். தடுப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளதை உள்ளுர்வாசிகள் எதிர்க்கக் கூடாது என்பதற்காக, ஆளுக்கு ஒரு கிலோ உப்பு இலவசமாகக் கொண்டுபோக அனுமதி அளிக்கப்பட்டது. 1,727 சோதனைச் சாவடிகள், 136 உயர் அதிகாரிகள், 2,499 உதவி அதிகாரிகள், 11,288 காவல் வீரர்கள்கொண்ட இந்த மாபெரும் முள் வேலியின் வழியாக 1869-70ம் ஆண்டில் கிடைத்த உப்பு வரி 12 லட்ச ரூபாய். இத்துடன் ஒரு மில்லியன் பணம் சர்க்கரை மற்றும் இதர பொருட்களின் வரியாக வசூலிக்கப்பட்டது.தடுப்பு வேலிக் காவல் பணிக்கு வேலைக்கு வர நிறையப் பேர் தயங்கினர். நாடோடி மக்களுடன் சண்டையிட வேண்டும் என்ற பயம் இருந்தது. அதற்காகவே, மற்ற எந்த வேலையைவிடவும் இரண்டு மடங்கு சம்பளம், சோதனைச் சாவடிக் காவல் பணிக்கு வழங்கப்பட்டது. அதாவது, ஒரு ஆளின் மாதச் சம்பளம் 5 ரூபாய். அது ஒரு விவசாயி ஆறு மாத காலம் ஈட்டும் வருவாயைவிடவும் அதிகம். ஒரு அதிகாரியின் கண்காணிப்பில் 10 முதல் 40 சுங்கச் சாவடிகள் இருந்தன.அதிகாரிகள் தங்குவதற்கு, சுங்கச் சாவடி அருகிலேயே கூடாரங்கள் அமைக்கப்பட்டன. இவ்வளவு கடுமையான முள்வேலியைத் தாண்டியும் பஞ்சார் இன மக்கள் உப்பைக் கடத்தினார்கள். உப்பைக் கடத்தும் ஒரு குழு, வேலியின் ஒரு பக்கம் நின்று அதை வானில் தூக்கி வீசி எறிவார்கள். மற்றொரு குழு மறு பக்கம் அதைச் சேகரித்துக்கொள்வார்கள். இதுபோல, தேனீக்களை மொத்தமாக ஒரு குடுவையில் பிடித்து வந்து சோதனைச் சாவடியில் திறந்து விட்டு, அந்தச் சூழலை பயன்படுத்தி உப்பைக் கடத்துவதும் வழக்கம். சில அதிகாரிகள் பணம் வாங்கிக்கொண்டு அனுமதி அளித்துள்ளனர். முள்வேலியின் வழியே லஞ்சமும், அதிகாரத் துஷ்பிரயோகமும், வன்முறையும் அதிகரிக்கத் தொடங்கியது.பீகாரில் அமைக்கப்பட்ட முள்வேலியைக் கடந்து உப்பைக் கடத்த முயன்ற 112 பேர் கொண்ட ஒரு குழுவை, காவலர்கள் தடுத்து நிறுத்தியபோது, அவர்கள் ஆயுதங்களால் தாக்கி காவலர்களைக் கொன்றுவிட்டு உப்பைக் கடத்திய சம்பவம் நடந்திருக்கிறது.நாடோடி மக்களைப் பகைத்துக்கொள்ள முடியாது என்று, 800-க்கும் மேற்பட்ட காவல் வீரர்கள் வேலையில் இருந்து விலகினர். 115 காவல் வீரர்கள் சண்டையில் இறந்து போயினர். 276 பேர் உப்பு கடத்த உதவினார்கள் என பணிநீக்கம் செய்யப்பட்டனர். 30 பேர் வேலையை விட்டு ஓடிப்போயினர். 23 பேரை லாயக்கு அற்றவர்கள் என்று கம்பெனியே விலக்கியது. சோதனைச் சாவடிகளில் உப்புக் கடத்தியவர்கள் என்று 1873-ல் பிடிபட்டவர்கள் எண்ணிக்கை 3,271. அதுவே 1877-ம் ஆண்டில் 6,077.
காவலர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை கூட விடுமுறை கிடையாது. தொடர்ச்சியாக இரண்டு பகல் - ஓர் இரவு என ஒருவர் வேலை செய்ய வேண்டும் என்பதே நடைமுறை. இப்படி ஒரு பட்டாளமே சேர்ந்துகொண்டு ஒடுக்கும் அளவுக்கு உப்பில் இருந்து வருவாய் கிடைத்தது.நிலத்துக்கு வரி விதிப்பதன் மூலம், இந்திய நிலப்பிரபுகள் பாதிக்கப்பட்டார்கள். அவர்களின் எதிர்ப்புக் குரல் லண்டன் வரை ஓங்கி ஒலித்தது. ஆனால், உப்புக்கு வரி விதிப்பதை எதிர்த்த சாமான்ய மக்களின் குரல் இங்கிலாந்தை எட்டவே இல்லை. மாறாக, அடுத்தடுத்து வந்த கவர்னர்கள் உப்பு மூலம் வருமானத்தைப் பெருக்குவது எப்படி என்பதிலேயே கவனமாக இருந்தனர். கடத்தி வந்து பிடிபட்ட உப்பை, சோதனைச் சாவடி ஊழியர்கள் தாங்களாகவே குறைந்த விலைக்கு விற்கத் தொடங்கியதுடன், தங்களுக்குள் ஓர் உடன்பாடு செய்துகொண்டு கையூட்டு பெறுவதை வழக்கம் ஆக்கினர். இதனால், இந்த முள் வேலியின் இறுக்கம் தளர ஆரம்பித்தது. அது போலவே, முள் வேலியின் பராமரிப்புச் செலவு அதிகமாகி வருகிறது, ஆட்குறைப்பு செய்ய வேண்டும் என்று கம்பெனி அறிவுறுத்திய காரணத்தால், 4,000 ஊழியர்கள் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.1872-ல் பதவிக்கு வந்த மாயோ பிரபு, உப்பு வணிகம் குறித்து அன்றைய உள்நாட்டுப் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திப் பொதுத் தீர்வு காண முடியும் என்று அறிவித்தார். அதன் பிறகு, பதவிக்கு வந்த நார்த் புருக் பிரபு, 'இந்த முள் வேலியால் நிறையப் பொருள் இழப்பு ஏற்படுகிறது. ஆகவே, உப்பு மீதான வரியை நீக்கிவிடலாம்" என்ற தீர்மானத்தை முன்மொழிந்தார்.1876-ல் உருவான வங்காளப் பஞ்ச காலத்தில்கூட உப்பு மீதான வரி முழுமையாக ரத்து செய்யப்படவில்லை. அதோடு, வங்காளத்துக்கு தேவையான உணவுப் பொருட்களைக் கொண்டுசெல்வதற்கு இந்த முள் வேலி தடையாக இருக்கிறது என்ற குரல்கள் ஒலிக்கத் தொடங்கின. அப்படியும்கூட, உப்பு மூலம் கிடைக்கும் வருமானத்தை இழக்க பிரிட்டிஷ் அரசு விரும்பவில்லை.லிட்டன் பிரபு முயற்சியால் உப்புக்கு விலை நிர்ணயிக்கப்பட்டதுடன், அதற்கான வரியும் ஒழுங்கு செய்யப்பட்டது. 1880-ல்தான், சோதனைச் சாவடிகள் மூடப்பட்டன. 1882-ல் ரிப்பன் பிரபு இந்தியா முழுவதும் ஒரு மூட்டை இரண்டு ரூபாய் என விலை நிர்ணயம் செய்து உத்தரவு பிறப்பித்தார். ஆனாலும், இந்திய எல்லைப் பகுதிகளில் உப்புக்கு வரி விதிக்கப்பட்டே வந்தது.இந்த உப்பு வரியால் ஏற்பட்ட விளைவுகள் பற்றி, பிரேம்சந்த் ஒரு கதை எழுதி இருக்கிறார். 'நமக் கா தாரோகா' என்ற அந்தக் கதையில் பணக்கார உப்பு வியாபாரியின் வண்டிகளை சோதனைச் சாவடியில் பறிமுதல் செய்யும் உப்பு இன்ஸ்பெக்டர், எப்படி வேலையில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்டு அதே முதலாளியின் கீழே ஊழியராக வேலைக்குப் போகிறார் என்பது விவரிக்கப்பட்டு இருக்கிறது.உப்பு எளிய மக்களின் அன்றாடத் தேவை. அன்றாட உணவுப் பொருட்கள் உள்ளுரில் மக்களுக்கு எளிதாகக் கிடைத்துவிடும். ஆனால், உப்பு வெளியில் இருந்துதான் வாங்கப்பட வேண்டும். அதற்கு உப்பு வியாபாரிகள் மட்டுமே ஒரே வழி. அந்த வழியை ஏகபோகமாக்கி காலனிய அரசு பணம் சம்பாதிக்கத் தொடங்கியதும், சாதாரண மக்கள் பாதிக்கப்பட்டனர். உப்பு இல்லாமல் உணவே இல்லை என்ற காரணத்தால், உப்பைப் பெறுவதற்காக அவர்கள் அதிக விலை கொடுக்க முன்வந்தனர். மக்களின் அடிப்படைத் தேவையைக் காட்டி ஏமாற்றிப் பணம் சம்பாதித்தது பிரிட்டிஷ் அரசு.
உப்பு மீதான தடை இல்லாத வணிகத்துக்கு மாற்றாக, 1930-ம் ஆண்டு பிப்ரவரி மாதம், இந்தியர்​களால் தயாரிக்கப்படும் உப்புக்கு ஆங்கிலேய அரசு மீண்டும் வரி விதித்தது. உப்பை அரசாங்க நிறுவனத்திடம் மட்டுமே விற்க வேண்டும் என்று உப்பு காய்ச்சுபவர்களை ஒடுக்கியது.அதை விலக்கிக்கொள்ளுமாறு காந்திஜி பிரிட்டிஷ் அரசுக்கு ஒரு கோரிக்கை விடுத்தார். அது நிராகரிக்க ப்பட்டது. உப்பின் வரலாற்றை அறிந்திருந்த காந்தி, அது எளிய மக்களின் ஆதாரப் பிரச்னை. அதை உடனே தீர்த்து வைக்க வேண்டும் என்று சத்தியா க்கிரக முறையில் எதிர்க்க முடிவெடுத்தார். மார்ச் 12, 1930 அன்று 78 சத்தியாக்கிரகிகளுடன் அகம​தாபாத்தில் இருந்து குஜராத் கடலோரத்தில் இருந்த தண்டி நோக்கி, 240 மைல் நடைப் பயணத்தைத் தொடங்கினார். அப்போது, காந்தியின் வயது 61.24 நாட்கள் நடைப்பயணத்தின் முடிவில், தண்டி கடற்கரையில் கடல்நீரைக் காய்ச்சி உப்பு தயாரித்து பிரிட்டிஷ் அரசின் சட்டத்தை மீறினார் காந்தி. தன்னைப் போலவே மற்றவர்களையும் உப்புக் காய்ச்சும் பணிக்கு ஆணையிட்டார். தடுக்க முயன்ற போலீஸ்காரர் லத்தியால் தாக்கியதில் ஒரு சத்தியாக்கிரகிக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட் டியது. அந்த ரத்த வேகம் இந்தியா முழுவதும் பரவியது. அன்று, காந்தியின் கைப்பிடியில் இருந்தது வெறும் உப்பு அல்ல, அது இந்திய மக்களின் நம்பிக்கை. இந்தியாவெங்கும் உப்பு சத்தியாக்​கிரக த்தால் பல்லாயிரக்கணக்கானவர்கள் சிறையில் அடை க்கப்பட்டனர். இதைச் சமாளிக்க வழி தெரியாமல், பிரிட்டிஷ் அரசாங்கம் உப்பு மீதான வரியை நீக்கிக் கொண்டது.உப்பு சத்தியாக்கிரகம் என்பது அறப்போர் மட்டும் அல்ல. அது ஒரு மகத்தான வரலாற்றுப் பாடம். இந்திய மக்களை உப்பின் பெயரால் ஏமாற்றி வந்த வெள்ளை அரசுக்கு விடப்பட்ட இறுதி எச்சரிக்கை. எளிய மக்களின் வாழ்வுரிமை பறிக்கப்படுவதற்கு எதிரான மக்கள் எழுச்சி. அதிகார அரசியலை எதிர்க்கும் ஆயுதமாக உப்பைக்கூட பயன்படுத்த காந்தியால் முடிந்திருக்கிறது. மகத்தான மனிதர்களே மகத்தான வழிகளை உருவாக்கிக் காட்டுகிறார்கள் என்பதையே காந்தி நிரூபித்து இருக்கிறார்.உப்பு பரிமாற்றத்தைத் தடுக்க அமைக்கப்பட்ட முள்வேலியை பற்றித் தேடித் திரிந்து உலகுக்கு அடையாளம் காட்டிய ராய் மார்க்ஸ்ஹாம், முள் வேலியைக் காண்பதற்காக இந்தியா முழுவதும் அலைந்திருக்கிறார். லண்டன் ஆவணக் காப்பகத்தில் உள்ள ரிக்கார்டுகளை நாட்கணக்கில் வாசித்து இருக்கிறார். நாடோடி போல நுரையீரலில் புழுதி படியத் தேடியும் முள்வேலியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. புதிய சாலைகள் உருவானதும், ரயில் பாதைகளின் வரவும் சுங்கவேலியை அடையாளம் அற்றதாக ஆக்கிவிட்டது.உத்தரப் பிரதேசத்தின் எடவா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில், தூர்ந்துபோன முள்வேலியின் ஒரு பகுதியை அவருக்கு அடையாளம் காட்டியிருக்கிறான் ஒரு திருடன். அது ஒன்றுதான் உப்புக்காக அமைக்க ப்பட்ட முள்வேலியின் சான்று. இந்தச் சான்றுடன் தனது உப்பு வரி குறித்த ஆய்வைத் தொகுத்து, பிரிட்டிஷ் அரசு இந்தியாவை எப்படி எல்லாம் சுரண்டியது எனப் பல சான்றுகளுடன் விவரித்து எழுதியிருக்கிறார்.உப்பு வணிகத்தில் என்றோ காலனிய அரசு மேற்கொண்ட அதே தந்திரங்களைத்தான் இன்றைய பெரும் வணிக நிறுவனங்கள் அயோடின் கலந்த உப்பு என்ற பெயரில் அதிக விலை வைத்து ஏகபோகம் செய்து வருகின்றன. எக்னாமிக் டைம்ஸ் நாளிதழில் ஒரு புள்ளிவிவரம் வெளியாகி இருக்கிறது. அதன்படி, ஒரு கிலோ உப்பு தயாரிக்க இன்று ஆகும் செலவு ரூ 1.40. அதன் பேக்கிங் செலவு 50 பைசா. போக்குவரத்துக் கட்டணம் 90 பைசா. உள்ளுர் வரிகள் 30 பைசா. இதர செலவுகள் 40 பைசா என்றால், விற்க வேண்டிய விலை ரூ 3.50. ஆனால், விற்கும் விலையோ ரூ 11 முதல் 13 வரை. ஒரு கிலோ உப்பு வழியாகக் குறைந்தபட்சம் 9 ரூபாய் சம்பாதிக்கின்றன பெரும் நிறுவனங்கள்.
வரலாறு சுட்டிக்காட்டும் எளிய உண்மை, உப்பின் பெயரால் இந்திய மக்கள் இன்றும் ஏமாற்றப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதுதான்!
விகடன்

No comments:

Post a Comment