வெறும் வார்த்தைகளோடு நின்று விடவில்லை. தென்னாப்பிரிக்காவின் நிறவெறிக்கு எதிரான தீர்மானத்தை தன்னை அடிமைப்படுத்திய இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு எதிராகக் கொண்டுவந்து தென்னாப்பிரிக்காவை விடுதலைப் பாதையை நோக்கி கொண்டு சென்றார் இந்திய பிரதமர் நேரு. அடிமைத் தளையில் இருந்து விடுபட்டு சில ஆண்டுகளே ஆகியிருந்ததால் அப்போது இந்தியாவுக்கு ‘அடிமை’களின் வலி புரிந்தது, வேதனை புரிந்தது.
ஆனால்... இன்று?
அன்று தென்னாப்பிரிக்க மக்கள் அனுபவித்ததை விட ஆயிரமாயிரம் மடங்கு அடக்குமுறையையும், சித்ரவதைகளையும் அனுபவித்துக் கொண்டிருக்கும் ஈழத் தமிழர்களைப் பற்றிய ஓர் தீர்மானம் ஐ.நா. வில் தாக்கலான பிறகும் இந்தியா மௌனம் காத்தது. ‘உன் நிலைப்பாடு என்ன?’ என்று கூக்குரல் எழுப்பியும் தொடர் மௌனம் காத்தது. அந்தத் தீர்மானம் வாக்கெடுப்புக்கு வரும் வரை தனது நிலைப்பாட்டை தெளிவாக அறிவிக்காமல் இருந்தது. வாக்கெடுப்பு அன்று அந்த நிமிடத்தில் சட்டென இனவெறி ஏகாதிபத்திய இலங்கைக்கு ஆதரவாக மிகச் சாதகம் கொண்ட ஓர் திருத்தத்தைக் கொண்டுவந்து தனது ‘ஆசிய பவர்’ மீது ரத்தத்தை அள்ளிப் பூசிக் கொண்டிருக்கிறது.
அன்று தென்னாப்பிரிக்காவுக்காக துடித்த நேருவின் பரம்பரைதான் இன்றும் ஆட்சி செய்கிறது. ஆனால், நேரு துடித்தார். சோனியாவோ துடிக்க வைக்கிறார், துடிதுடிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.
மார்ச் 22-ம் தேதியன்று சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனிவா நகரிலுள்ள ஐ.நா. சபையின் மனித உரிமைப் பேரவையில் அமெரிக்கா தனது சர்வதேச காய் நகர்த்தல்களுக்காக கொண்டுவந்தது ஒரு தீர்மானம்.
அதனால் ஈழத் தமிழர்களுக்கு ஒரு சாதகமும் இல்லை. ஆனால்... மூன்று வருடங்களாக கதறிக் கொண்டிருந்த தமிழினத்தின் ஓலத்தை உலக நாடுகள் எல்லாம் திரும்பிப் பார்க்கிற சந்தர்ப்பமாக இந்தத் தீர்மானம் அமைந்திருந்தது.
ராஜபக்சே சகோதரர்களின் இனவெறி இதயத்தை உலகத்திடம் எடுத்துவைக்க தமிழர்களுக்கு இது ஒரு மேடையானது. முதன் முதலில் சர்வதேசத்தின் மேடையில் தமிழனின் பாடு பேசப்படுவதற்கு வாய்ப்பானது. மார்ச் 22-ம் தேதி இந்திய நேரப்படி 2.30க்கு மனித உரிமை அமர்வில் இலங்கை குறித்த விவாத அரங்கு ஆரம்பித்தது.
முதலில் கருத்து தெரிவிக்க அழைக்கப்பட்ட நாடு கியூபா. சேகுவேராவும், பிடல் காஸ்ட்ரோவும் இணைந்து நடத்திய விடுதலைப் போராட்டத்தால் சுதந்தரக் காற்றை சுவாசித்துக் கொண்டிருக்கும் கியூபா... தன் வரலாற்றை வசதியாக மறந்துவிட்டு இலங்கையை ஆதரிக்கத் தொடங்கியது.
சிங்கள அரசு ஈழத்தில் போட்ட குண்டை விட கியூபாவின் கருத்து குண்டுகள் தமிழர்களை காயப்படுத்தின. ‘‘இப்போது இந்தத் தீர்மானத்துக்கு என்ன அவசரம்? வரும் செப்டம்பர் மாத அமர்வுக்கு இதை எடுத்துக் கொள்ளலாமே...’’ என்று வெண்ணெய் திரண்டு வரும் நேரத்தில் தாழியை உடைக்கப் பார்த்தது கியூபா. ஆனால், அமெரிக்கா இதை கடுமையாக எதிர்க்க, விவாதம் தொடர்ந்தது.
கியூபாவை அடுத்து கருத்துக்களை வெளியிட்டது ஐரோப்பிய ஒன்றியத்தின் பெல்ஜியம். ‘‘இந்தத் தீர்மானத்துக்காக லாபி செய்த ஜெனிவாவில் இருக்கும் தமிழர்களே மிரட்டப்படுகிறார்கள் என்றால், அங்குள்ள தமிழர்களின் கதியை எண்ணிப் பாருங்கள்! இந்தத் தீர்மானத்துக்கு முழுக்க முழுக்க ஆதரவளிக்கிறோம். சர்வதேசத்துக்கு பதில் சொல்லவேண்டிய கடமை இலங்கை அரசாங்கத்துக்கு இருக்கிறது’’ என்றது பெல்ஜியம்.
அந்த நாட்டுப் பிரதிநிதி பேசியது ஆங்கிலம் என்றாலும் அதில் ‘தமிழ்’ ஒட்டியிருந்தது. தன்னைப் பற்றிக் கொண்டுவந்த தீர்மானத்தை தோற்கடிப்பதற்காக இலங்கை அரசுக்கு இன்னும் உதவுவது புலிகள்தான். ஆமாம். ‘‘இந்தத் தீர்மானம் விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீண்டும் எழச் செய்யும். எனவே இலங்கையை மறு நிர்மாணம் செய்ய எங்களுக்கு மேலும் கால அவகாசம் அளித்து இந்தத் தீர்மானத்தைத் தோற்கடியுங்கள்’’ என்று தனது பசப்பு வாதத்தை அரங்கேற்றியது இலங்கை.
இதன்பிறகு 47 நாடுகளும் தலா மூன்று நிமிடங்களில் கருத்துக்களை தெரிவித்தன. இறுதியில் தீர்மானத்தை இந்தியா உள்ளிட்ட 24 நாடுகள் ஆதரிக்க, 15 நாடுகள் எதிர்க்க, எட்டு நாடுகள் வாக்கெடுப்பை புறக்கணிக்க... தீர்மானம் நிறைவேறியது.
இதில் இலங்கைக்கு எதிராக என்ற பெயரில் வாக்களித்த இந்தியாதான் முழுக்க முழுக்க இலங்கைக்கு ஆதரவான மிக உறுதியான திருத்தத்தைச் செய்துள்ளது என்கிறார்கள் ஜெனிவாவில் இருக்கும் பத்திரிகையாளர்கள். அமெரிக்கா கொண்டுவந்திருந்த தீர்மானத்தில்... ‘ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் ஹை கமிஷனர் அளிக்கும் ஆலோசனைகளை, உதவிகளை இலங்கை அரசு ஏற்றுக்கொள்ளவேண்டும்’ என்று ஒரு உறுதி தொனி இருந்தது.
ஆனால், அதில் இந்தியா கொண்டுவந்த திருத்தமோ.. ஐ.நா. மனித உரிமைப் பேரவை அளிக்கும் எந்த ஆலோசனையும் உதவியும் இலங்கை அரசின் ஆலோசனைப்படிதான் இருக்க வேண்டும்’ என்று திருத்தப்பட்டது. இலங்கை உள்ளுக்குள் ஆயிரமாயிரம் நன்றிகளை இந்தியாவுக்கு கூறியிருக்கும். அன்று போருக்கு ஆயுதம் கொடுத்த உதவியைவிட மிகக் கொடிய உதவி இந்தத் திருத்தம் கொடுத்து உதவியது.
இன்னொரு கேள்வியும் இந்த வாக்கெடுப்பு மூலம் எழுப்பப்படுகிறது. ‘‘இந்தியா மூலம் வருடம் தோறும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை உதவியாகப் பெறும் பங்களாதேஷ், பிலிப்பைன்ஸ், மலேசியா, மாலத்தீவு உள்ளிட்ட நாடுகள் வாக்கெடுப்பில் இந்தியாவின் நிலைப்பாட்டை எதிர்த்து வாக்களித்துள்ளன. ஆக ஆசியாவில் இந்தியாவை அவர்கள் மதிக்காமல் சீனா பின்னால் செல்லத் தயாராகின்றனர் என்பதை இது காட்டுகிறது.
அதேநேரம் இந்தியா இந்த ஆசிய நாடுகளிடம், ‘உள்நாட்டு நிர்ப்பந்தங்களால் நாங்கள் தீர்மானத்தை ஆதரிக்கிறோம். நீங்கள் இதை உறுதியாக எதிர்க்க வேண்டும்’ என்று உத்தரவிட்டு இலங்கைக்கு, தான் ஆதரவாகக் களமிறங்க முடியாவிட்டாலும் தனது நட்பு நாடுகளை உசுப்பிவிட்டிருக்கிறது என்றும் கருத இடமிருக்கிறது.
இது ஒருபக்கம் என்றால் ஆசியாவில் சீனா பெரிதா, இந்தியா பெரிதா என்ற வல்லாதிக்கப் போட்டியை இந்த வாக்கெடுப்பு மூலம் இன்னும் பெரிதாக வளர்த்துவிட்டு தன் வேலையை கச்சிதமாக முடித்திருக்கிறது அமெரிக்கா’’ என்கிறார்கள் உலக நிலவரம் புரிந்தவர்கள்!
எப்படியோ இலங்கையை ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் நேரடிக் கண்காணிப்பிலிருந்து சற்றே தள்ளி வைத்திருக்கிறது இந்தியா. இந்த ‘உதவியை’ இலங்கையும் மறக்காது! தமிழர்களும் மறக்கமாட்டார்கள். ஏனென்றால் தமிழர்களுக்குத் தெரியும் அது நேரு இந்தியா... இது வேறு இந்தியா என்று!
நன்றி: ஆரா (தமிழக அரசியல்) |
No comments:
Post a Comment