திராவிட இயக்கத்தின் நூறாவது ஆண்டு விழா என்ற பெயரில், கலைஞர், தனது பழைய பாணி துவேஷ அரசியலை மீண்டும் துவக்கியிருக்கிறார். திராவிடம், திராவிட நாடு என்பதையெல்லாம் மீண்டும் உலவ விட்டிருக்கிறார். இந்த நிலையில், இவை பற்றி ஏற்கெனவே ஆராய்ந்து ‘திராவிட மாயை’ என்ற பெயரில் புத்தகம் எழுதிய ‘சுப்பு’ இந்த விஷயம் பற்றி ‘துக்ளக்’கில் கட்டுரை எழுத இசைந்துள்ளார். திரிசக்தி பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட ‘சுப்பு’வின்‘திராவிட மாயை’ புத்தகத்திலிருந்து பல பகுதிகளும், இக்கட்டுரைகளில் இடம் பெறும்.
திராவிட இயக்க நூறாம் ஆண்டு துவக்க விழா கடந்த பிப்ரவரி 27 ஆம் தேதியன்று சென்னையில் தி.மு.க.வினரால் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்குத் தொண்டர்களை அழைக்கும் விதத்தில், முரசொலியில் கடிதம் எழுதினர் கலைஞர். அந்தக் கடிதத்தில், திராவிட இயக்கத்தின் தோற்றத்தைப் பற்றிக் குறிப்பிட்ட அவர், ‘1917ஆம் வருடம் சென்னை ஸ்பர்டாங்க் சாலையருகே நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் டாக்டர் டி.எம்.நாயர் ஆற்றிய உரையைச் சுட்டிக்காட்டி, நம் பத்திரிக்கைகள் வளர்ந்தால்தான் நம் மக்களுக்கு பலம் வரும்; நம் எதிக் கட்சியான பார்ப்பனக் கூட்டம் நடுங்கும் என்று முழங்கியதை நான் இப்போதும் திரும்பக் கூற விரும்புகிறேன்’ என்று எழுதியுள்ளார்.இதைத் தொடர்ந்து நடந்த விழாவிலும், பிராமண எதிப்பைமையப் பொருளாக வைத்து கலைஞர் பேசியிருக்கிறார். அண்ணா எழுதிய தலையங்கத்தைச் சுட்டிக்காட்டி, ‘நாமெல்லாம் இனத்தால் திராவிடர்கள்’ என்று கூறியிருக்கிறார்.ஆனால், திராவிட இனம் பற்றிய அண்ணாவின் முக்கியமான கருத்தை உடன்பிறப்புகளுக்கு எடுத்துச் சொல்ல அவருக்கு சௌகரியப்படவில்லை. இதை இந்த நேரத்தில் எடுத்துச் சொல்ல வேண்டியது நம்முடைய கடமை.
பிராமணர் இனம் வேறு; பிராமணர் அல்லாதார் இனம் வேறு என்பது திராவிடர் கழகத்தின் கொள்கை. பிராமணர் அல்லாதார் நலனுக்காக ஏற்படுத்தப்பட்ட திராவிடர் கழகத்தில், பிராமணர் உறுப்பினராக முடியாது. ஈ.வே.ரா. வின் கொள்கையால் ஈர்க்கப்பட்ட சின்னக் குத்தூசி போன்றவர்களுக்குக் கூட அங்கே அனுமதி இல்லை. ஆனால், ஈ.வே.ரா.விடமிருந்து பிரிந்து வந்த திராவிட முன்னேற்றக் கழகத்தில் பிராமணர்கள் உறுப்பினராகலாம். இது எப்படி?தளபதி மீதும் தம்பிகள் மீதும் நம்பிக்கை இல்லாத காரணத்தால், மணியம்மையைத் திருமணம் செய்து கொண்டார் ஈ.வே.ரா. அது மட்டுமல்ல, கொள்கைக்கும் சொத்துக்கும் மணியம்மைதான் வாரிசு என்று அறிவித்தார் அவர்.ஈ.வே.ரா.விடமிருந்து பிரிந்து வந்தவர்கள், அண்ணாவின் தலைமையில் ஒன்று கூடி ஆலோசித்தார்கள். சொத்துக்காக சண்டை போடுவதில்லை என்றும், புதிய அமைப்பை உருவாக்குவது என்றும் முடிவு செய்யப்பட்டது. புதிய கட்சியின் பெயர் ‘திராவிட முன்னேற்றக் கழகம்’ என்று தீர்மானிக்கப்பட்டது. அங்கே இருந்தவர்களால் ‘கட்சியின் பெயரில் ‘ர்’ இல்லையே?’ என்ற கேள்வி கேட்கப்பட்டது.தம்பிகளுக்கு விளக்கம் அளித்த அண்ணா, ‘திராவிடர்’ என்பது இனத்தைக் குறிக்கிறது. ‘திராவிட’ என்பது ஒரு பிரதேசத்தைக் குறிக்கிறது என்றார். பிராமணர் உட்பட அனைவருக்கும் கழகத்தில் இடமுண்டு என்றார். இன அடையாளம் வேண்டாம் என்றார். சொன்னது மட்டுமல்ல பிரபல வழக்கறிஞரான வி.பி.ராமன் என்கிற பிராமணரைச் சேர்த்துக் கொண்டார். அண்ணாவின் கருத்துப்படி பிராமணர் அல்லாத இனம் என்பது அப்போதே கழற்றி விடப்பட்டது.
பிராமணர்களை உறுப்பினராக்கியது மட்டுமல்ல, அவர்களுக்கு பதவியும் கொடுத்தது, அண்ணாவின் தி.மு.க.ஜாதி அடிப்படையில் மேயரைத் தேர்ந்தெடுக்கும் முறை, சென்னை மாநகராட்சியில் கடைப் பிடிக்கப்பட்ட காலம் அது. தி.மு.க.சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிராமணரான திருமதி. காமாட்சி ஜெயராமன் என்பவர், சென்னை மாநகராட்சியின் மேயரானது ஒரு வரலாற்றுப் பதிவு.மாநிலங்களவையில் அண்ணாவின் கன்னிப் பேச்சு இன்னொரு முக்கியமான பதிவு. “யதா ராஜா ததா பிரஜா” என்று சொன்ன அறிஞர்கள் வாழ்ந்த காஞ்சிபுரத்திலிருந்து வருகிறேன்” என்றார் அவர். பிரிவினைக் கோரிக்கையை தி.மு.க.கைவிடாத அந்தக் காலத்திலும், தன்னுடைய உரையில் சம்ஸ்க்ருத மேற்கோள் காட்டுவதற்கு அவர் தயங்கவில்லை.இதைவிட சுவாரஸ்யமான செய்தி கூட உண்டு. திராவிட இயக்கத்தின் நன்கூரமான இடஒதுக்கீடு கொள்கையிலும் மாறுதல் செய்ய விரும்பினார் அண்ணா. ‘முற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் ஏழைகளாக இருந்தால், அவர்களுக்கும் கல்வியில் முன்னுரிமை தர வேண்டும்’ என்று அண்ணா, சட்ட மன்றத்தில் உரையாற்றினார்.பல கட்சிகளின் கூட்டணியோடும் வெகுஜன ஆதரவோடும் ஆட்சியைப் பிடிக்க முயன்ற அன்னாவிடத்தில், பிராமண எதிர்ப்பு இல்லை. ஹிந்தியை எதிர்க்கும் போது கூட ‘இந்த வேலையை ராஜாஜியிடம் விட்டு விடலாம். காலில் முள் தைத்துவிட்டது. இந்த முல்லை எடுக்க என்னால் முடியாது. பெரியாரிடம் விட்டால் காலை வெட்டி விடலாம் என்பார். காலுக்கு பாதகமில்லாமல் கச்சிதமாக முல்லை எடுக்க ராஜாஜிக்குத்தான் தெரியும்’ என்று பொதுக்கூட்ட மேடையில் போட்டுடைத்தவர் அண்ணா. முதலமைச்சர் அண்ணாவிடம் பிராமணர் எதிர்ப்பு என்கிற மனோபாவம் இல்லை.
திராவிட இயக்க வரலாற்றில் அண்ணா ஏற்படுத்திய ஆரோக்கியமான மாறுதல்களை கருணாநிதி புறந்தள்ளி விட்டார். தன்னுடைய கட்சி தோல்வி அடையும் போதெல்லாம் பிராமணர்கள் மீது கசப்பைக் காட்டும் கருணாநிதிக்கும், பக்குவப்பட்ட முதலமைச்சராக இருந்த அண்ணாவுக்கும் எவ்வளவு வித்தியாசம்! அண்ணாவின் அணுகுமுறையை கருணாநிதி மறந்து விட்டார். இதயத்தை பதவியிடமும், பெட்டிச் சாவியை குடும்பத்தாரிடமும் கொடுத்தவரிடம் பெருந்தன்மையை எதிர்பார்ப்பது வீண் வேலை.
மேற்கண்ட கட்டுரை 21 மார்ச் 2012 துக்ளக் வார இதழில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment