நம் உடலின் நுழைவுவாயிலான வாய்ப் பகுதியில் பற்கள் காவலர்களாக இருந்து செயல்படுகின்றன. உண்ணும் பொருள்களை உடலுக்கு ஏற்றவகையில் சரிபடுத்தி அனுப்பும் முக்கியமான பணியைப் பற்கள் மேற்கொள்கின்றன. பற்கள் இருந்தால்தான் முகத்துக்கு அழகு கிடைக்கும்; பேச்சிலும் தெளிவு பிறக்கும். அத்தகைய பற்களுக்கு நேரும் சில பிரச்னைகளை இப்போது பார்ப்போம்.
பல்வலிக்கு முக்கியக் காரணம், பற்சொத்தை. வாயைச் சுத்தமாகப் பராமரிக்கத் தவறுவது பற்சொத்தைக்கு அடிப்படை காரணம். இதன் விளைவாக, பற்களுக்கு இடையில் படியும் ’காரை’ என்று அழைக்கப்படுகிற கடினமான பொருள் பற்சொத்தைக்கு வழி அமைக்கிறது. பற்களுக்கு இடையில் சிக்கிக் கொள்ளும் உணவுத்துகள்கள், வாயிலுள்ள நுண்கிருமிகள், உணவிலுள்ள இனிப்புகள் இவையனைத்தும் சேர்ந்து ’காரை’யாக மாறுகிறது.
பற்களின் மேலுள்ள ’எனாமல்’ என்னும் மேற்பூச்சுதான் பற்களைப் பாதுகாக்கும் கவசமாகத் திகழ்கிறது. ’காரை’ யிலிருந்து வெளிப்படும் ஒருவகை அமிலம் எனாமலை மெதுவாக அரிக்கத் தொடங்குகிறது. இதுதான் பல் சொத்தையின் ஆரம்பநிலை. இந்த நிலையில் பற்களைக் கவனிக்கத் தவறினால், அமிலம் பல்லின் வேர்ப்பகுதியையும் அரித்து விடும். அப்போது பல்லில் சீழ் பிடித்து, கழுத்தில் நெறிகட்டி, காய்ச்சல் வரும்.
அறிகுறிகள்:
சொத்தைப் பல்லுக்கு முதல் அறிகுறி, பல்வலி. குறிப்பாக, சூடான அல்லது குளிர்ச்சியான உணவுகளைச் சாப்பிடும் போது பல்வலி அதிகமாகும். இனிப்புப் பொருள்களைச் சாப்பிடும்போது பல்லில் கூச்சமும் வலியும் ஏற்படும். பல்லின் மேற்பரப்பு கறுப்புநிறமாக மாறும்; அங்கு குழி விழும்.
என்ன முதலுதவி செய்யலாம்?
* வெந்நீரில் துணியை நனைத்துப் பிழிந்துகொண்டு, பல் வலியுள்ள முகத்தின் வெளிப்பக்கத்தில் ஒத்தடம் தரலாம்.
* மருத்துவரின் ஆலோசனைப் படி, ’டிசென்சடைசிங்’ மருந்து கலந்த களிம்பைச் சொத்தைப் பல்லின்மீது தடவலாம்.
என்ன சிகிச்சை?
* பற்சொத்தை ஆரம்பநிலையில் இருந்தால், சில வேதிப்பொருள்களால் சொத்தையை அடைத்துவிட முடியும்.
* சொத்தை வேர்ப்பகுதி வரை சென்றிருந்தால், ’வேர்ச்சீரமைப்பு’ சிகிச்சை மூலம் சரி செய்துவிடலாம்.
* பற்சொத்தை மிக மோசமாக இருந்தால், அந்தப் பல்லை அகற்றியே ஆக வேண்டும்.
பல் ஈறுகளில் ரத்தம் வருதல்:
பற்காரை, பற்சொத்தை, சரியாக அமையாத பற்கிளிப்புகள், செயற்கைப் பற்செட்டுகள், வைட்டமின் - சி குறை பாட்டினால் ஏற்படுகிற ’ஸ்கர்வி நோய்’, ரத்த உறைவுக் குறைபாடு நோய், வின்சென்ட் நோய் போன்றவை பல் ஈறுகளைப் பாதித்து, ரத்தம் கசிய வழி செய்யும். வாயிலுள்ள கிருமிகள் காரணமாக, ஈறுகள் அழற்சியுற்று வீங்கும் போதும் ஈறுகளில் ரத்தம் கசியும். பல்லில் அடிபட்டாலும், பல் ஆட்டம் கண்டு விழுந்துவிட்டாலும் பல் ஈறிலிருந்து ரத்தம் வரலாம்.
நகம் கடிக்கக் கூடாது. பென்சில் கடிக்கக் கூடாது. விரல் சூப்புதல் கூடாது. ஊக்கு அல்லது குண்டூசியால் பல் குத்தக் கூடாது.
* சிறிதளவு பஞ்சைத் தண்ணீரில் நனைத்துப் பிழிந்துகொண்டு, ரத்தம் கசிகிற ஈறின்மீது வைத்து, விரல்களால் பத்து நிமிடங்களுக்கு அழுத்திப் பிடிக்கவும்.
* பஞ்சு கிடைக்காவிட்டால், சுத்தமான துணியைச் சிறிய அளவில் மடித்துத் தண்ணீரில் நனைத்து, மேற் சொன்ன மாதிரி பயன்படுத்தலாம்.
* பல் விழுந்து ரத்தம் கசிகிறதென்றால், தண்ணீரில் நனைத்த பஞ்சை பற்குழியில் வைத்து, பற்களை அழுத்தமாகக் கடித்துக்கொள்ள வேண்டும்.
* ரத்தம் கசியும் முகத்தின் வெளிப் பக்கத்தில் ஐஸ் கட்டியால் ஒத்தடம் தரலாம்.
* வாயைக் கொப்பளிக்க வேண்டாம். அப்படிச் செய்தால், ரத்தம் உறைவது தடைபடும்.
பல்லில் அடிபடும்போது பல் உடைந்து போகுமல்லவா? அப்போது என்ன செய்வது? பல் பாதியாக உடைந்து போனாலும் சரி, முழுப் பல்லும் வெளியே வந்திருந்தாலும் சரி, இப்போதுள்ள நவீன மருத்துவத்தில், பல்லை அதே இடத்தில் பொருத்தி சரி செய்துவிடலாம்.
நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்: ஒரு தம்ளரில் சிறிதளவு பால் எடுத்துக்கொள்ளுங்கள். அடிபட்ட பல்லை அதில் போட்டு மூடுங்கள். அப்படியே அதை அடுத்த நான்கு மணி நேரத்துக்குள் பல் மருத்துவரிடம் கொண்டு சென்று விடுங்கள். பாதியாக உடைந்த பல்லையும் ஒட்டிவிடலாம். முழுப்பல்லையும் பொருத்திவிடலாம். கவலை வேண்டாம்.
பல் பாதுகாப்புக்குப் பத்து வழிகள்!
* காலை, இரவு என இரண்டு வேளைகளிலும் பல் துலக்க வேண்டும். மேல்தாடைப் பற்களைக் கீழ்நோக்கிச் சுழற்றியும், கீழ்த்தாடைப் பற்களை மேல் நோக்கிச் சுழற்றியும் துலக்க வேண்டும். கடிக்கும் பகுதியை முன் பின்னாகத் துலக்க வேண்டும். நாக்கையும் சுத்தப்படுத்த வேண்டும்.
* ஃபுளூரைடு கலந்த அனைத்து வகை பற்பசைகளுமே உகந்தவைதான். பல்லில் தேய்மானம் இருந்து, பல்லில் கூச்சம் ஏற்பட்டால், அப்போது மட்டும் ’டிசென்சடைசிங்’ பற்பசையைப் பயன்படுத்தலாம்.
* பல் துலக்கியைப் பொருத்த வரையில், மிருதுவான அல்லது நடுத்தர வகை பல்துலக்கியைப் பயன்படுத்துவது பற்களின் பாதுகாப்புக்கு நல்லது.
* ஆரோக்கியமான நிலைப்பற்களுக்குப் பால்பற்கள்தான் அஸ்திவாரம். ஆகவே, கை விரலில் பொருத்திக் கொள்ளும் மிருதுவான ’விரல் பல் துலக்கி’யைப் பயன்படுத்தி, பெற்றோரே குழந்தைகளுக்கு ஐந்து வயது வரையிலும் பல் துலக்கிவிடுவது நல்லது.
* வைட்டமின் - சி, வைட்டமின் - டி, கால்சியம், பாஸ் பரஸ் சத்துகள் மிகுந்த மீன் எண்ணெய், ஆரஞ்சு, தக்காளி, எலுமிச்சை, நெல்லிக்காய், பச்சைக் காய்கறிகள், கீரைகள், பழங்கள் முதலியவற்றையும், புரதச் சத்து மிகுந்த பால், முட்டை, இறைச்சி, பயறு, பருப்பு முதலியவற்றையும் தினசரி உணவில் சேர்த்துக்கொண்டால், பல் ஈறுகளும், பற்சிப்பியும் நல்ல வளர்ச்சி பெறும்.
* பற்களில் ஒட்டிக்கொள்ளக் கூடிய இனிப்புமாவு, சாக்லேட், மிட்டாய், ஐஸ்கிரீம் போன்றவற்றைச் சாப்பிட்டால் உடனே வாயைக் கொப்பளிக்க வேண்டும்.
* காபி, தேநீர் உள்ளிட்ட அதிக சூடான உணவுகளையும் ஐஸ்கிரீம் உள்ளிட்ட அதிகக் குளிர்ச்சியுள்ள உணவுகளையும் குளிர்பானங்களையும் அடிக்கடி சாப்பிடக்கூடாது.
* சூயிங்கம் மெல்லுவது, வெற்றிலைப் பாக்கு போடுவது, புகை பிடிப்பது, பான்மசாலா பயன்படுத்துவது, மது அருந்துவது போன்றவற்றைத் தவிர்த்தால் பல்லுக்குப் பாதுகாப்பு கிடைக்கும்.
* ஆறு மாதங்களுக்கு ஒருமுறை பல் மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறும் பழக்கத்தைப் பின்பற்றினால், பல்சொத்தை உள்ளிட்ட பல் பிரச்னைகளை ஆரம்பநிலையிலேயே தவிர்த்துவிடலாம்.
No comments:
Post a Comment