உலகம் முழுவதும் - வருத்தமும் அதிர்ச்சியும், துயரமும் அடையும் சோகச் சம்பவம் - உலகத்தின் மிகப் பெரிய கணினி குழுமத்தினை கூட்டாக ஒரு நண்பருடன் இணைந்து நிறுவியவர் - ஆப்பிள் கம்ப்யூட்டர் நிறுவனர் - ஸ்டீவ்ஜாப்ஸ் என்ற அமெரிக்க வாழ் மாமனிதர்.
அவர், கணையப் புற்றுநோய் காரணமாக தனது 56ஆவது வயதில் இன்று காலமானார் என்ற செய்தி தான் அந்த சோக உணர்வுக்குக் காரணம்.
ஸ்டீவ் ஜாப்ஸ் செய்த தொழில்நுட்ப சாதனை காரணமாகவே இன்று உலகத்தின் தகவல்கள் அனைத்தும், நாம் விரும்பினால் உடனே நம் விரல் நுனிகளின்மூலம் - அய்பாட் (i-Pad) மூலம் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம் என்பதில் ஆப்பிள் நிறு வனத்தின் சாதனை முன்னோடி யாகவே உள்ளது!
இந்த எளிய மனிதரின் மூளைத் திறன் உலகப் படையெடுப்பை வெற்றி கரமாக அல்லவா நடத்தியுள்ளது!
I-phone, i-pad - இப்படிப் பலப்பல பாட்டு இசை, தகவல் பரிமாற்றம் முதலிய தகவல் புரட்சி யுகத்தின் தலைசிறந்த முன் னோடியாக அல்லவா இந்த மாமனிதர் இருந்து, சாதனைமேல் சாதனை செய்து சரித்திரம் படைத்துள்ளார்!
மைக்ரோ சாஃப்ட் என்ற உலகின் நெம்பர் 1 கணினிக் குழும உரிமையாளர் கள் பில்கேட்ஸ், அவரது துணைவியார் மெலிண்டாகேட் ஆகியோர் ஏராளமான பல பில்லியன் டாலர்களை சம்பாதித் தாலும், ஒரு பெரும் பகுதியை அறக்கட்டளை யாக்கி, உலகில் எய்ட்ஸ், புற்றுநோயால் அவதிப்படும் மக்களின் சிகிச்சைக்கே ஒதுக்கி வைத்துள்ளனர்!
அவர் ஆப்பிள் கூட்டு நிறுவனரான ஸ்டீவ்ஜாப்ஸ் பற்றி ஓகோ என்று புகழ்ந் துள்ளார். அவரது மன வளத்தால் தொழில் நுட்பத்தால் உலகம் அதன் முன்னேற்றத் தில் வளர்ச்சியின் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டது என்று குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் பாரக் ஓபாமா, அவர் ஒரு மிகப் பெரிய தொலைநோக்காளர், அறிவுலகம் ஒரு மிகப் பெரிய தொழில் நுட்ப மேதையை இழந்துள்ளது என்று கூறுகிறார்!
ஆஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கில்லார்டு (என்ற பெண்) இவரது சேவை மிகப் பெரிய புரட்சியை உலகில் உருவாக்கி, மனித குலத்திற்கு உதவியது எனக் கூறியுள்ளார்!
இவ்வாண்டு ஆகஸ்ட்டிலேயே அவர் தமது கம்பெனி தலைவர் பொறுப்பிலிருந்து விலகி, முக்கிய அயல் இயக்குநராக இருந்து இவரால் தயாரிக்கப்பட்டவரையே இவர் இடத்தில் அமரச் செய்தார்.
சுமார் இரண்டு மாதங்களே வாழ்ந் துள்ளார், அதன்பின். இந்தப் பேரறி வாளர் மறைவினால் தொழில் புரட்சி ஒரு பின்னடைவைச் சந்திக்குமா என்பது சிலரது கவலை.
ஆனால் இயற்கையில் அப்படி ஏதும் இல்லை. அவரிடம் பெற்ற பயிற் சியால் அவரது சீடர்கள் அதைவிடச் சிறப்பாகவே சாதனை புரிவார்கள் என்று நம்பலாம்!
அறிவு ஆராய்ச்சி, புதுநோக்குப் புத்தாக்கம் எவரின் தனிப்பட்ட ஏக போகமோ தனி உடைமையோ இல்லை.
பல கூழாங் கற்கள்போல கிடந்தவைகூட, வாய்ப்புகள் அவற்றை தழுவும்போது வைரங்களாகவும் ஒளி வீசுவது உலகின் வரலாற்றில் நாம் காணுவது நடைமுறைதான்.
ஸ்டீவ்ஜாப்ஸ் என்ற மனிதருக்கு சாவு உண்டு. ஸ்டீவ்ஜாப்ஸ் என்ற நிறுவனத்திற்கு மறைவே இல்லை - அது நிரந்தரமானது! நீடித்தே நிலைப்பது ஆகும்!
புதுமை யுகத்தின் பூபாளமாக மீண்டும் மீண்டும் புதிய விடியல்களின் போதெல்லாம் ஒலிக்கும் என்று நம்புவோமாக!
Thursday, October 6, 2011
ஸ்டீவ்ஜாப்ஸ் என்ற ஒரு சரித்திர சாதனையாளர்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment