ஈரோடு மாவட்டம் வெள்ளோடு பறவைகள் சரணாலயம் 200 ஏக்கர் பரப்பளவு கொண்டது. வெளிநாட்டு பறவைகள் அக்டோபரில் வந்து முட்டையிட்டு குஞ்சு பொறித்து மார்ச்சில் சொந்த நாடுகளுக்குச் சென்று விடும்.
கொசு உள்ளான், கூழக் கடா, நெடுங்கால் உள்ளான், வண்ண நாரை, வெள்ளை அரிவாள்மூக் கன் போன்ற வெளிநாட்டு பறவைகள் வந்து, மீண்டும் திரும்பிச் சென்று விடுகின்றன.
கடந்த 10 ஆண்டுகளில் 93 வகைகளை சேர்ந்த 31 ஆயிரம் வெளிநாட்டு பறவைகள் மீண்டும் திரும்பிச் செல்லாமல் இங்கேயே தங்கி விட்டன. பாம்புதாரா, நீர் காகம், பெரிய நீர்காகம், உண்ணி கொக்கு, நீளவால் இலைக் கோழி, நாமக்கோழி, சிவப்பு மூக்கு ஆள்காட்டி மற்றும் பல்வேறு வகை சிட்டுக்குருவி ரக பறவைகள் தான் இங்கேயே நிரந்தரமாக தங்கி இருக்கின்றன.
நீர் காகம், கொக்கு வகைகள் காலையில் கிளம்பிச் சென்று மாலையில் மீண்டும் அங்கு வந்து விடுகின்றன. ராக்கொக்கு பறவைகள் மாலையில் வெளியேறி அதிகாலை சரணாலயம் திரும்புகிறது. பறவைகளை காண விரும்பும் சுற்றுலா பயணிகள் காலை 6 மணிக்கு அல்லது மாலை 5 மணியில் இருந்து 6.30க்குள் வந்தால் அனைத்து வகை பறவைகளையும் பார்க்க முடியும்.
பறவைகளை காண வனத்துறை சார்பில் தொலைநோக்கி கருவி, பார்வையாளர் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் ஏராளமான சிறுவர் சிறுமிகள் பெற்றோருடன் வந்து செல்கின்றனர். அவர்கள் பகல் நேரத்தில் வருவதால் அரியவகை பறவைகளை காண வாய்ப்பில்லாமல் போய் விடுகிறது. மாலை நேரத்தில் 6.30 வரை சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப் படுகின்றனர்.
சுற்றிலும் ஆயிரக்கணக்கான மரங்கள் நடப்பட்டுள்ளதால் தற்போது சரணாலயம் மரங்கள் பூத்து குலுங்கும் சோலையாகக் காட்சி தருகிறது.
No comments:
Post a Comment