முதல்வராகப் பதவி ஏற்றதும், ஏழைப் பெண்களின் திருமணத்துக்கு இலவசமாக 4 கிராம் தங்கம் வழங்கும் உத்தரவில் முதல் கையெழுத்திட்டார் முதல்வர் ஜெயலலிதா.
தமிழகத்தின் முதல்வராக மூன்றாவது முறையாக பதவியேற்ற பிறகு முதல் முறையாக சென்னை ஜார்ஜ் கோட்டையில் உள்ள தலைமைச் செயலகத்துக்கு ஜெயலலிதா இன்று திங்கள்கிழமை மாலை சென்றார். அங்கு முதல்வர் பொறுப்பை முறைப்படி ஏற்றார். பின்னர் கோப்புகளில் கையெழுதிட்டார்.
படித்த ஏழைப் பெண்களின் திருமணத்துக்கு 4 கிராம் தங்கம் இலவசமாக வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் ஜெயலலிதா தெரிவித்திருந்தார். அதை உடனே நிறைவேற்றும் விதமாக, முதல் கையெழுத்திட்டார்.
இதன்படி இனி திருமணத்துக்கு தயாராக நிற்கும் ஏழைப் பெண்களுக்கு 4 கிராம் தங்கம் உடனடியாக வழங்கப்படும்.
இரண்டாவதாக, டிப்ளமோ, இளநிலை பட்டப்படிப்பு படித்த பெண்களுக்கான திருமண உதவித்தொகை ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரமாக உயர்த்தப்படும் என்ற உத்தரவில் கையெழுத்திட்டார். இந்த தொகையுடன் 4 கிராம் தங்கமும் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
அடுத்ததாக பெண்களுக்கான முதியோர் உதவித்தொகை மாதம் ரூ.500ல் இருந்து ரூ.1000 ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்ற கோப்பில் கையெழுத்திட்டார்.
அரசுப் பணியில் பணிபுரியும் பெண்களுக்கு மகப்பேறு விடுப்பு 6 மாதம் வழங்கப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்றும் விதத்தில் நான்காவது கோப்பில் கையெழுத்திட்டார்.
அடுத்து, மீனவர்களுக்கு மீன்பிடித் தடைக் காலத்தில் ரூ.2000 வழங்கப்படும் என்ற உத்தரவிலும் கையெழுத்திட்டார்.
ஏழைகளுக்கு மாதம் தோறும் 20 கிலோ அரிசியும், பரம ஏழைகளுக்கு 35 கிலோ அரிசியும் இலவசமாக வழங்கப்படும் என்ற உத்தரவும் இன்றே கையெழுத்தானது.
மேலும், தேர்தலின்போது தான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வசதியாக, அதற்கென்றே தனித்துறை மற்றும் அமைச்சர் உருவாக்கப்படவிருப்பதையும் முதல்வர் தெரிவித்தார்.
தலைமைச் செயலாளர் மாற்றம்
இதற்கிடையே தமிழக அரசின் தலைமைச் செயலர் பதிவியிலிருந்த மாலதிக்கு பதில், தேபேந்திரநாத் சாரங்கி புதிய தலைமைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை கமிஷனர் மாற்றம்
அதே போல சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக இதுவரை இருந்து வந்த ராஜேந்திரன் சிறைத்துறையின் கூடுதல் டிஜிபியாக மாற்றப்பட்டார். அவருக்கு பதில் புதிய கமிஷனராக ஜேகே திரிபாதி பதவி ஏற்றுள்ளார்.
முதல்வரின் புதிய செயலாளர்கள்
முதல்வர் ஜெயலலிதாவின் செயலாளர்களாக எம்.ஷீலா பிரியா, பி.ராமமோகன ராவ், கே.என்.வெங்கட்ராமன் ஆகியோரும், உள்துறை முதன்மைச்செயலாளராக ஷீலா ராணி சுங்கத்தும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று இரவு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை இயக்குனராக பணியாற்றி வரும் எம்.ஷீலா பிரியா மாற்றப்பட்டு முதல்வர் ஜெயலலிதாவின் செயலாளர் (நம்பர் 1) மற்றும் கூடுதல் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ளார். வேளாண்மை உற்பத்தி ஆணையாளராக பணிபுரிந்து வரும் பி.ராமமோகன ராவ் மாற்றப்பட்டு, முதல்வரின் முதன்மைச்செயலாளராக (நம்பர் 2) நியமிக்கப்பட்டு இருக்கிறார்.
பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை முதன்மைச்செயலாளர் கே.என்.வெங்கட்ரமணன் மாற்றப்பட்டு, முதல்-அமைச்சரின் முதன்மைச்செயலாளராக (நம்பர் 3) நியமிக்கப்பட்டு உள்ளார். தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய நிர்வாக இயக்குனர் ஏ.ராமலிங்கம் இடமாற்றம் செய்யப்பட்டு, முதல்வரின் கூடுதல் செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
உள்துறை செயலாளர் ஷீலா ராணி சுங்கத்
நகராட்சி நிர்வாகத்துறை இணை ஆணையாளர் ரீட்டா ஹாரீஸ் தாக்கர் மாற்றப்பட்டு, முதல்வரின் இணைச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு தொழில் முதலீட்டுக்கழக (டிக்) தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஷீலா ராணி சுங்கத் இடமாற்றம் செய்யப்பட்டு, உள்துறை, மதுவிலக்கு மற்றும் கலால்துறை முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ளார். முன்பு இந்த பதவியில் இருந்த கே.ஞானதேசிகன் மாற்றப்பட்டுள்ளார்.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச்செயலாளர் கே.அசோக் வரதன் ஷெட்டி மாற்றப்பட்டு, ஆவண காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி சிறப்பு ஆணையாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
No comments:
Post a Comment