கல்பாக்கத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள அணு உலைகள், பூமிக்கு அடியில் 185 அடி ஆழத்தில் கட்டப்பட்டுள்ளன; விபத்து ஏற்பட்டால் பூமிக்கு அடியிலேயே புதைந்து போய் விடும் என்றும் துவக்கத்தில் சொன்னவர்கள், இன்று கல்பாக்கம் அணுமின் நிலையம், கடல் மட்டத்தில் இருந்து இரண்டரை மீட்டர் உயரத்தில் உள்ளதாகவும், அதிவேக ஈணுலை, நான்கரை மீட்டர் உயரத்தில் உள்ளதாகவும் சொல்லி இருப்பது, முன்னுக்குபின் முரணாக உள்ளது.
ஜப்பானின் புகுஷிமா கடல் மட்டத்தில் இருந்து இதை விட அதிக உயரத்திலும், தூரத்திலும் இருந்தும் பாதிப்பை தவிர்க்க முடியவில்லை. இதுவரை கல்பாக்கம் அணு உலையின் மின் உற்பத்தி கலன்களை குளிர்விப்பதற்கு கடல் நீரை பயன்படுத்தி, மறு சுழற்சி மூலம் கடலில் விட்டு வந்ததால் கடல் வளம் பெரிதும் பாதிக்கப்பட்டது. கல்பாக்கம், கூடங்குளம் புதிய அணு உலைகளின் தொழில்நுட்பம், தண்ணீருக்குப் பதிலாக, எளிதில் தீப்பற்றக் கூடிய சோடியம் பயன்படுத்தப்படுகிறது; எப்போதும் எரிந்து ஆபத்தை உருவாக்கக் கூடியது.
ஜப்பானின் புகுஷிமா அணு உலைகள் அருகருகே இருந்ததால் ஒன்றில் பாதிப்பு ஏற்பட்ட உடனேயே மற்றதிலும் வெகு சீக்கிரத்தில் ஆபத்து உருவாகி, உலகத்தையே அச்சத்தில் ஆழ்த்தியது. கல்பாக்கத்தில் சிறிய நிலப்பரப்பில் ஏற்கனவே பல அணு உலைகள் அருகருகே இருக்கும் போது, ஆயிரத்திற்கும் அதிகமான மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் அணு உலைகளை அமைப்பது, நாட்டின் பாதுகாப்பிற்கு பெரும் அபாயத்தை விளைவிக்கும். இவ்வாறு அந்த அறிக்கையில் வைகோ தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment