Monday, May 16, 2011

பணம்... பணம்... பணம்...



இலவச டிவி... ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி... இலவச கேஸ் ஸ்டவ்... 108 ஆம்புலன்ஸ் திட்டம்... உயிர் காப்பீடு திட்டம்... இலவச வீடு திட்டம்... இப்படி எத்தனையோ மக்கள் நலத்திட்டங்களை தி.மு.க. அரசு செயல்படுத்திக் கொண்டிருந்தாலும், அவைகளை தாண்டி பணத்தை கொடுத்து வாக்காளனை வாங்கிவிடலாம் என்று மமதையில் திரிந்தனர்.

பணம் ஒரு முறை எடுபடும்... இரண்டு முறை எடுபடும்... எல்லா முறையும் எடுபடுமா? அதைத்தான் தமிழ்நாட்டு மக்கள் பட்டவர்த்தனமாக சுட்டிக் காட்டியிருக்கிறார்கள்.

அதாவது தி.மு.க.வின் "money" பிளானுக்கு சாவு மணி அடித்து இருக்கிறார்கள். இதற்காகவே, தமிழ்நாட்டு மக்களை பாராட்ட வேண்டும்.

அதற்காக, அ.தி.மு.க. பணம் கொடுக்கவில்லையா என்று கேட்கலாம். அ.தி.மு.க.வும் இந்தத் தேர்தலில் பணம் கொடுத்து இருக்கிறார்கள். அதை மறுக்கவில்லை. ஆனால், பணத்தை கொடுத்து இனி ஓட்டுக்களை வாங்க முடியாது என்று தி.மு.க.வுக்கு கொடுத்த தீர்ப்பு, அ.தி.மு.க.வும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

2009ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், 40 தொகுதிகளிலும் பணத்தை கோடி கோடியாக வாரி இறைத்து 28 தொகுதிகளை பிடித்த இறுமாப்பில் இருந்த தி.மு.க.வினருக்கு 2011 பொதுத்தேர்தல் கொடுத்த பாடத்தை இந்தியா முழுவதும் இருக்கும் அரசியல் கட்சிகளும் அறிந்து கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு மந்திரிகளும் பேசிய பேச்சுகளும் நடந்து கொண்ட விதங்களும்... நினைத்துப் பார்த்தால் அருவெறுப்பாக இருக்கிறது.

குறிப்பாக கோடிகளில் புரண்ட அமைச்சர்களின் கதிகளை பார்த்தால் சிரிப்பும் வேதனையும்தான் மிஞ்சுகிறது.

பொன்முடி... அவரது தொகுதியில் செலவு செய்த தொகை 10 கோடி ரூபாயாம். கடைசியில் தோல்வி. அதுவும் 12 ஆயிரம் வாக்குக்கள் வித்தியாசத்தில்.

எ.வ.வேலு தனது தொகுதியில் 13 கோடி ரூபாயை இறைத்திக்கிறார். அவரவும் தோல்வி முகம் கண்டு கடைசியில் 5 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார். இவர் விட்ட சவால் என்ன தெரியுமா... 'நான் ஜெயிச்சாச்சு... தலைவரும் தளபதியும் ஜெயிக்கறதுதான் கஷ்டம்...' இப்படி சொன்னவர் எப்படி கஷ்டப்பட்டார் என்பது ஊரே சிரித்தது.


துரைமுருகன் இரண்டாயிரத்து 500 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவர் செய்த செலவு 6 கோடி ரூபாய். ஆனால், தேர்தலுக்கு வசூலித்த தொகை 10 கோடியை தொடும். பெங்களூர் மற்றும் டெல்லி தொழிலதிபர்களிடம் இருந்து வசூலித்த விவகாரம் எல்லாம் விரையில் அம்பலமாகும்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் ராஜ கண்ணப்பனை எதிர்த்துப் போட்டியிட்ட தி.மு.க. அமைச்சரான பெரிய கருப்பன் செலவு செய்த தொகை 25 கோடியை தொடும். ஏழு சுற்று வரை பின் தங்கி இருந்த பெரிய கருப்பன், பின்னர் 400 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இவர்கள் எல்லாம் பரவாயில்லை... தி.மு.க.வின் நட்சத்திரம்... நாளை முதல்வர் என்று அறிவிக்கப்பட்ட மு.க.ஸ்டாலின் எப்படி தண்ணீர் குடித்தார் கொளத்தூர் தொகுதியில் என்று உடன்பிறப்புகளுக்கு நன்றாகவே தெரியும்.

கொளத்தூர் தொகுதியில் ஒரு வீட்டுக்கு 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை வழங்கப்பட்டது. இதை ஸ்டாலின் உறவினரே வெளிப்படையாகச் சொன்னார். அத்தொகுதியில் கிட்டத்தட்ட 40 ஆயிரம் வீடுகளுக்கு இத்தொகை வழங்கப்பட்டிருக்கும் என்று புள்ளிவிவரத்தோடு சொன்னார். இது தவிர, ஆயிரம் ரூபாய் என்ற அளவில் 20 ஆயிரம் வீடுகளுக்கு வழங்கப்பட்டிருக்கும் என்றார்.

இதெல்லாம் விடுங்கள். தி.மு.க.வின் நாளைய தலைவராக வரப்போகிறவர். தமிழ்நாடு முழுவதும் தனது கட்சி வேட்பாளர்களுக்கும், கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கும் சுற்றிச் சுற்றி வந்து பிரசாரம் செய்தவர். அவரது எத்தனை சுலபமாக வெற்றி பெற்றிருக்க வேண்டும். தட்டுத்தடுமாறி... தப்பி பிழைத்து... அட... போயிடுமோ... என்று இழுத்து இழுத்து ஜெயிக்க வேண்டிய நிலை ஸ்டாலினுக்கு. இவருக்கு ஏன் பணம் கை கொடுக்கவில்லை.


அட... ஸ்டாலினாவது பரவாயில்லை. சென்னை எழும்பூர் தொகுதியில் போட்டியிட்ட பரிதி இளம்வழுதி, இதுவரை தோற்றதே கிடையாது. அந்த பரிதி... தே.மு.தி.க.வினருக்கே பரிச்சயம் இல்லாத... எழும்பூர் தொகுதி மக்களுக்கு முகத்தையே காட்டாத நல்லதம்பி ஜெயித்து இருக்கிறார்.

பரிதி செலவு செய்த தொகை 5 கோடியாம்.

இன்னொரு வாய் சவடால் வீரர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். தி.மு.க.வில் சுகாதாரத்துறை அமைச்சராக் இருந்தவர். இவர் தேர்தலுக்கு ஒரு வாரம் முன்பு சவுண்டு விடுகிறார் தனது பக்கத்துக் தொகுதி அமைச்சரின் பி.ஏ.விடம்.

யோவ்... நான் தோத்துட்டா... தமிழ்நாட்டுல தி.முக. மொத்தமா தோத்துடும். குறிஞ்சிப்பாடிக்கு எவ்ளோ செஞ்சிருக்கேன் தெரியுமா. நான் போய் தோத்துடுவேன் ஊரில பேசிக்காறாங்களாம்.... என்று கொக்கரித்தவர்...

இன்று என்ன நிலைமை.

பன்னீர் தண்ணீராய் செய்த செலவு 6 கோடி ரூபாயாம்.

நேரு. பாவம் இவர். பரிதாபத்துக்க்குரியவர். தமிழ்நாட்டில் எல்லாருமே தோற்றுவிட்டாலும் தான் மட்டுமே ஜெயிக்க முடியும் என்று கர்ஜனை செய்தவர். அதுமட்டுமா.... திருச்சியில் வந்து போட்டியிட ஜெயலலிதாவுக்கு என்ன தைரியம்? தோக்கவைக்கிறேன் ஜெயலலிதாவை என்று சபதம் போட்டவர்.

சபதம் போட்டவர் இன்று சப்தம் இல்லை... கொஞ்சம் கூட பேச முடியாத அளவுக்கு முக்கி முணுகிக் கொண்டிருக்கிறார். இவரது செலவு 18 கோடி ரூபாய். என்ன இவ்வளவு செலவு என்று கேட்கிறீர்களா?

திருச்சி தெற்கு தொகுதியில் போட்டியிட்ட நேரு தொகுதிக்கு 8 கோடி தான் செலவு. ஆனால், ஜெயலலிதாவை ஸ்ரீரங்கத்தில் தோற்கடிக்க 10 கோடி செலவாம். இதை நான் சொல்லவில்லை. அவரே, ஏப்ரல் 13ம் தேதி தேர்தல் முடிந்ததும், கருணாநிதியிடம் வந்து 'தலைவரே.. ஜெயலலிதா ஜெயிக்கவே முடியாது. எல்லாம் என் தம்பி ராமஜெயம் அங்கே இருந்து, அ.தி.மு.க.வையே கரைச்சி குடிச்சிட்டான்' என்று முழங்கிவிட்டு வந்தார்.

இன்று என்ன கணக்கு சொல்லப்போகிறார் நேரு.

வீரபாண்டி ஆறுமுகம். 'என்னய்யா... நீ தோத்துடுவன்னு இண்டெலிஜென்ஸ்ல சொல்றாங்களே...' என்று கருணாநிதி கேட்டாராம்.

'அட... நீங்க வேற... என் மகன் கூட தோத்துடுவான்.. நான் தோற்கவே மாட்டேன்' என்று வசனம் பேசிய வீரபாண்டி ஆறுமுகம் 35 ஆயிரத்து சொச்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுவிட்டார்.

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால், மக்கள் கொடுத்த பணத்தை வாங்கிக் கொண்டு, தங்கள் வேலையை காட்டிவிட்டார்கள்.

பண பலத்துக்கு அடித்த சாவு மணி.... இனி தமிழ்நாட்டில் பணத்தை வைத்துக் கொண்டு எந்த கட்சியும் ஆட்சிக்கு வந்துவிடலாம் என்று மனக்கோட்டை கட்டவேக் கூடாது.

பணத்தை வைத்துக் கொண்டு ஆட்சியை பிடித்துவிடலாம் என்றால், எல்லா மாநிலங்களில் இருக்கும் ஆளும்கட்சிகளே பணத்தை கொடுத்து ஜெயித்துவிடலாமே.

காங்கிரஸ் கட்சிதான் எல்லா மாநிலங்களிலும் ஆட்சியில் இருந்தது. அதுவும் அது ஜமின்தார் கட்சியாயிற்றே. அவர்கள் இருக்கும் காசு பணத்தை கொடுத்து ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள முடிந்ததா?

இலவசம்... ஒரு ரூபாய்க்கு அரிசி... டிவி... ஸ்டவ் இதெல்லாம் எத்தனை நாள்?

தி.மு.க.வில் எந்த அமைச்சராவது மக்களோடு மக்களாக வாழ்ந்தார்களா.

துரைமுருகன் சென்னை வீட்டுப் பக்கம் காட்பாடி தொகுதியிலிருந்து வந்த ஒருவன் டீ குடித்துவிட்டு சென்றதாக ஒருவன் சொன்னால் கூட... காதை அறுத்துக் கொள்கிறேன்.

மக்களிடம் இருந்து அன்னியப்பட்ட அமைச்சர்கள் யார்... பொன்முடி... எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், எ.வ.வேலு., பொங்கலூர் பழனிச்சாமி.. வீரபாண்டி ஆறுமுகம்.. பரிதி இளம்வழுதி... கீதா ஜீவன்... பூங்கோதை ஆலடி அருணா... இவர்களிடம் கட்சிக்காரர்கள் தங்களது மனுக்களை கொடுத்துவிட்டு அலைந்ததை நேரில் பார்த்திருக்கிறது தமிழ் லீடர்.

சில அமைச்சர்கள் தான் கட்சிகாரர்களை மதித்து நடந்ததுண்டு. அதில் ஆற்காடு வீராசாமி, பெரிய கருப்பன், ஐ.பெரியசாமி, தங்கம் தென்னரசு, மைதீன்கான் இப்படி சிலரும் இருந்தார்கள்.

ஆனால், ஒட்டு மொத்தமாக கட்சிக்காரனுக்கு கூட காசு இருந்தால் தான் தி.மு.க. ஆட்சியில் வேலை நடந்தது என்பதை உடன்பிறப்புக்கள் யாரும் மறுக்கவே முடியாது.

அப்படிப்பட்ட ஆட்சியை தமிழ்நாட்டு மக்களும், தி.மு.க, குடும்பத்தினருமே தூக்கி எறிந்தது வரவேற்கத்தக்கது.


No comments:

Post a Comment