ரசிகர்கள் என்றில்லை, இந்தியா முழுக்க கடந்த வாரம் இதுவும் ஒரு முக்கிய கேள்வியாக இருந்தது. இந்த வாரம் எல்லா நிகழ்வுகளையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு இந்தக் கேள்வியே பிரதானமாக நின்றது.
உள்ளூர், வெளியூர், வெளிநாட்டு ரசிகர்கள் மற்றும் நண்பர்கள் தொலைபேசியில் அழைத்து, ‘தலைவருக்கு..’ என ஆரம்பிக்கும்போதே தழுதழுத்தனர். ‘இப்போதே சென்னைக்கு கிளம்புகிறோம். தலைவரைப் பார்க்காமல் போகப் போவதில்லை,’ என ஆவேசப்பட்டனர்.
நமக்குத் தெரிந்த உண்மைகளைச் சொல்லி அவர்களைச் சமாதானப்படுத்தினாலும், இந்த விசாரிப்புகள் முடிவற்று தொடர்வதைத் தவிர்க்க, ரஜினியின் உடல் நிலை குறித்து நாம் அறிந்த, மருத்துவர்கள் மூலம் தெரிந்து கொண்ட சில விஷயங்களை ஒரு கட்டுரையாகத் தர முடிவெடுத்து, தயார் செய்தும் வைத்திருந்தோம்.
இந்த நிலையில்தான் இன்று காலை, மிகுந்த அதிர்ச்சியூட்டும் வகையில் வதந்திகளைப் பரப்பிவிட்டிருந்தனர் விஷமிகள் சிலர். அதைக் கேள்விப்பட்ட ஒவ்வொருவரும் கிட்டத்தட்ட செயலிழந்து நின்றனர் என்றால் மிகையல்ல. உடனே இதுகுறித்து திருமதி லதா ரஜினி மற்றும் ரஜினி இல்லத்தில் உள்ள அலுவலக நிர்வாகிகளிடம் பேசினோம். தலைவருக்கு என்ன நடக்கிறது என்பதை மூடி வைப்பதால் ரசிகர்கள் படும் பாட்டையும் சற்று விரிவாகவே விளக்கினோம்.
ஏற்கெனவே கொந்தளிப்பான சூழல் உள்ள நிலையில் ரஜினிக்கு என்ன மாதிரியான உடற்கோளாறுகள் உள்ளன என்பது குறித்து இப்போதைக்கு எதுவும் வெளியிடாமல் இருப்பதே நல்லது என்றும், மருத்துவ சோதனைகளின் முடிவுகள் வந்தபிறகு வெளியிட்டுக் கொள்ளலாம் என்றும் கேட்டுக் கொண்டதால், இப்போது வெளியிடுகிறோம்.
முதல்கட்ட மருத்துவ பரிசோதனை முடிவுகள் வெளிவந்துவிட்டன:
ரசிகர்கள் பயப்படும் அளவுக்கு ரஜினிக்கு எந்த ஆபத்துமில்லை!
ரஜினி ஆரம்பத்தில் அஜீரணக் கோளாறு, நீர்ச்சத்து குறைவு மற்றும் சோர்வு போன்றவற்றால் அவதிப்பட்டார். இது அவர் ராணாவுக்காக 15 கிலோ வரை எடை குறைத்து ஸ்லிம்மாக மேற்கொண்ட கடும் உடற்பயிற்சி மற்றும் டயட்டின் விளைவு. அதன் தொடர்ச்சியான விளைவுகளாக, நுரையீரலில் நோய்த் தொற்று மற்றும் இரைப்பை அழற்சி போன்றவை அவரைச் சற்று கடுமையாக பாதித்துள்ளன.
நுரையீரல் பிரச்சினை…
ரஜினிக்கு நீண்ட காலமாக புகைப் பழக்கம் இருப்பதால், நுரையீரலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை, Chronic Obstructive Pulmonary Disease (COPD) என்று சொல்கிறார்கள்.
இந்தப் பிரச்சினை காரணமாக அவருக்கு நுரையீரலுக்கும் இதயப் பகுதிக்கும் இடையே திரவம் அதிகளவு தேங்குகிறது. இதனை சரிசெய்ய ஆக்ஸிஜன் மூலம் நோய் எதிர்ப்புக்கான மருந்துகள் செலுத்தப்பட்டு, அந்தப் பகுதியில் உள்ள நோய்த் தொற்றை அடியோடு நீக்கி வருகின்றனர். அதில் நல்ல வெற்றியும் கிடைத்துள்ளது மருத்துவர்களுக்கு.
சிறுநீரகப் பிரச்சினை…
ரஜினிக்கு மேற்கொள்ளப்பட்ட ஸீரம் க்ரியேட்டினைன் டெஸ்டில், அவருக்கு ரத்தத்தில் க்ரியேட்டினைன் அளவு அதிகமாக உள்ளதாக தெரிய வந்துள்ளது. இதனால் சிறுநீரகங்களின் செயல்பாட்டில் ஒழுங்கின்மை காணப்படுகிறதாம். நோய்த் தொற்றும் கண்டறியப்பட்டுள்ளதால் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காலில் வீக்கம் ஏற்பட முக்கிய காரணம் இதுவே.
ஆனால் இது மிக ஆரம்ப நிலை (மூன்றாம்) என்பதால் சீக்கிரமே சரிப்படுத்திவிட முடியும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதில் இரண்டாவது மற்றும் முதல் நிலை கோளாறுதான் ஆபத்தானவை. ரஜினிக்கு அந்தப் பிரச்சினை இல்லை.
இப்போது அடுத்து தரப்பட்டுள்ள Culture test முடிவுகளுக்காகக் காத்திருக்கிறார்கள். பொதுவாக, முதல்கட்ட சோதனைகளில் ஒன்றும் சிக்கல் இல்லை என்று முடிவு வந்துவிட்டதால், கல்ச்சர் டெஸ்ட் முடிவும் கூட அதையொட்டியதாகவே இருப்பது வழக்கம் (எனது உடன்பிறந்த சகோதரி மற்றும் அவரது கணவர் இருவருமே சென்னை அரசு மருத்துவமனை நிபுணர்கள் என்பதால் இதனை உறுதியாகச் சொல்கிறோம்.)
என்ன சொல்கிறார் ஆய்வக நிபுணர்…?
இதுகுறித்து ராமச்சந்திரா மருத்துவமனையின் மைக்ரோபயாலஜி ஆய்வுக்கூடத்தில் பணியாற்றும் நமக்கு மிக நெருங்கிய மருத்துவ நிபுணர் இப்படிக் கூறுகிறார்:
“கடந்த இரு தினங்களாக, ‘விவிஐபியின் சாம்பிள் இவை. மிகுந்த அக்கறையுடன் சோதனைகளை மேற்கொள்ள வேண்டும்’, எனக் கூறியபடி ரத்தம், சிறுநீர், சளி உள்ளிட்ட சாம்பிள்களைக் கொண்டு வந்தனர். யாராக இருக்கும் என்று பார்த்தபோதுதான் அது ரஜினி சார் என்று தெரிய வந்தது (சிவாஜிராவ் எனும் பெயரில் சேர்க்கப்பட்டுள்ளார்!).
நாங்கள் எடுத்த முதல் கட்ட சோதனையின் முடிவில், பயப்படும்படி அவருக்கு ஒன்றுமில்லை என தெரிய வந்துள்ளது. நீண்ட நாள் புகைப்பழக்கம் உள்ளவர்களுக்கு வருகிற பிரச்சினைதான் இது. சீக்கிரமே சரி செய்துவிடலாம்.
விஷயம் தெரிந்த பிறகு, இன்று காலை மற்றும் பிற்பகலில் நானே நேரில் போய் பார்த்துவிட்டு வந்தேன். அவர் மிகவும் நார்மலாக உள்ளார். தனக்கான வேலைகளை யாருடைய உதவியுமின்றி செய்து கொள்கிறார்.
நாளை கல்ச்சர் டெஸ்ட் முடிவும் வந்துவிடும் (குறைந்தது 24 மணிநேரம் முதல் 48 மணிநேரம் பிடிக்கும் இந்த சோதனை முடிவு தெரிய!). இந்த ரிசல்டில், ரஜினியின் உள்ளுறுப்புகளைத் தாக்கியுள்ள கிருமியின் தன்மை தெரிந்துவிடும். சிகிச்சை அளிப்பது இன்னும் சுலபமாகிவிடும். அதன்பிறகு அவர் வீட்டிலேயே ரெஸ்ட் எடுத்தால் போதும்”, என்றார்.
‘உற்சாக ரஜினி’ – இரண்டாவது செய்திக் குறிப்பு
ராமச்சந்திரா மருத்துவமனையின் இரண்டாவது செய்திக் குறிப்பில், “பொது மற்றும் சிறப்பு மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் ரஜினிக்கு இப்போது கிசிச்சை அளித்து வருகின்றனர். அவரது உடல்நலத்தை முழுமையாக கண்காணிப்பதற்காக தொடர்ந்து மருத்துவமனையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இப்போது நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
ரஜினி உற்சாகமாக இருக்கிறார். அவருக்கு தனி வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது முக்கிய உறுப்புகள் அனைத்தும் இயல்பாக செயல்படுகின்றன.
பார்வையாளர்களை சந்திப்பதை வெகுவாக குறைத்துக் கொள்ளும்படி ரஜினிக்கு அறிவுறுத்தியுள்ளோம். அவரை முழு ஓய்வு எடுக்கும்படி அறிவுறுத்தியுள்ளனர் மருத்துவ நிபுணர்கள்,” என்று கூறப்பட்டுள்ளது.
ரசிகர்கள் கவலை வேண்டாம்…
எனவே இப்போது ரஜினிக்கு நுரையீரல் நோய்த் தொற்று, ப்ளாஸ்மா திரவ தேக்கம் மற்றும் ரத்தத்தில் கிரியேட்டினைன் அளவு அதிகமாக இருப்பதுதான் பிரச்சினை. இதற்கு முழுமையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சென்னையில் மற்ற தனியார் மருத்துவமனைகளை விட சிறப்பான வசதிகள் கொண்டது ராமச்சந்திரா என்பதால், இந்த பிரச்சினைகளை இங்குள்ள மருத்துவ நிபுணர்களே சரிசெய்து விடுவார்கள். தலைவரும் நலமுடன் இந்த வார இறுதியில் வீடு திரும்பிவிடுவார்.
இடையில் அவர் சொன்னார், இவர் சொன்னார், அந்த நிர்வாகி பார்த்தார் என்றெல்லாம் வரும் வதந்திகளை நம்ப வேண்டாம். தேவையில்லாமல் யாரிடமும் தகவல் விசாரிக்கவும் தேவையில்லை. நமக்கே இவ்வளவு பதட்டம் எனும்போது, சரியான தகவல் ஒருங்கிணைப்பை மேற்கொள்ள முடியாமல், ரஜினியின் உடல்நிலையையும் கவனித்துக் கொள்ளும் அவரது குடும்பத்தினரை விசாரிப்பு என்ற பெயரில் ரசிகர்களும் துன்பப்படுத்த வேண்டாமே.
தலைவர் தொடர்பான எந்த சிறு நிகழ்வாக இருந்தாலும் அதை தவறாமல் சொல்ல நாமிருக்கிறோம். கவலை வேண்டாம்.
அமைதியான பிரார்த்தனை…
அதேபோல, உங்கள் பிரார்த்தனைகளை அமைதியாக, யாருக்கும் தெரியாத வகையில் மேற்கொள்ளுங்கள். காரணம், விளம்பரமற்ற ஆத்மார்த்தமான பிரார்த்தனைகளைக் கேட்க ஆண்டவன் செவிகள் எப்போதும் திறந்தே இருக்கும்.
மேலும் பிரார்த்தனை, வழிபாடு எனும் பெயரில் ரசிகர்கள் கிளப்பும் பரபரப்பே மக்கள் மத்தியில் பற்பல யூகங்களுக்கு வித்திடவும் வாய்ப்புள்ளது.
தலைவர் இன்னும் ஓரிரு தினங்களில் நலமுடன் உங்கள் முன் சின்னத்திரையில் தோன்றுவார். அதற்குப் பிறகு பெரிய திரையிலும் கலக்குவார். அதற்கான பூரண ஓய்வு இது என்று எடுத்துக் கொள்வோம்!
நன்றி - வினோ
No comments:
Post a Comment