Wednesday, May 4, 2011

60-ஐ விட்டுட்டு 20-ஐ பிடிப்பீங்களா?

கழுகார் உள்ளே நுழையும்போது சிறகு​களிலும் அனல் தெறித்தது!

''அக்னி நட்சத்திரம் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே வெப்பம் தகிக்கிறது. அதற்குப் போட்டியாக அரசியலும் கனகனக்கிறது!'' என்றார் கழுகார்.

''எதிர்பார்த்தது மாதிரியே தி.மு.க. உயர் நிலைச் செயல் திட்டக் குழுவில் எதுவும் நடந்துவிடவில்லை,


பார்த்தீரா? கனிமொழி பெயரை ஸ்பெக்ட்ரம் வழக்கின் குற்றப் பத்திரிகையில் சேர்த்ததுமே, கருணாநிதி கொந்தளித்தது உண்மை. 'உடனே எல்லா மத்திய அமைச்சர்களையும் ராஜினாமா பண்ணிட்டு சென்னைக்கு வரச் சொல்’ என்றதையும், 'தேர்தல் முடிவுகள் வரும் வரை அமைதியாக இருங்கள்’ என்று ஸ்டாலின் சமாதானம் செய்ததையும் சொல்லி இருந்தேன். 'அந்த வீட்டு அம்மாவைக் காப்பாத்தினவரால் என் மகளைக் காப்பாத்த முடியலையா?’ என்று ராஜாத்தி அம்மாள் வட்டாரம்தான் துளைத்து எடுத்தது. அதற்கு மட்டும் கருணாநிதியால் சரியான பதிலைச் சொல்ல முடியவில்லை. அன்றைய தினம் இரவு முழுவதும் ராஜாத்தி அம்மாள் தூங்கவே இல்லையாம். திடீரென அவரது கோபம் தயாநிதி மாறன் மீது மாறியதாகவும் சொல்கிறார்கள்.''

''அவர் எங்கே, இதில் வந்தார்?''

''தயாநிதி மாறன், கனிமொழியை மாட்டிவிடக்கூடிய காரியங்களை டெல்லியில் இருந்து பார்த்தார் என்று நினைத்துவிட்டாராம் ராஜாத்தி. இதற்கிடையே, டெல்லி நிலவரம் தொடர்பாகப் பேச, கருணாநிதியை சந்திக்க தயாநிதி முயற்சித்தாராம். அதை கருணாநிதி தவிர்த்துவிட்டார். விஷயம் செல்விக்குப் போனது. அவர் உடனே கருணாநிதியிடம் பேசினார். 'ஆரம்பத்திலேயே தயாநிதியிடம் இந்த விஷயத்தை ஒப்படைத்து இருந்தால், டெல்லியில் இவ்வளவு பிரச்னை வந்து இருக்குமா? நீங்க தேவையில்லாமல் சந்தேகப்பட்டு ஒதுக்கிவைத்த பிறகு அவர் எதிலுமே தலையிடவில்லை. இப்போதாவது முக்கியத்துவம் கொடுத்து வழி விட்டால், டெல்லி விஷயங்களைக் கவனிச்சு, கஷ்டத்தைக் குறைக்கலாம்’ என்று செல்வி சொல்ல.... கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதி - தயாநிதி சந்திப்பு நடந்தது.''



''என்ன சொல்கிறார் தயாநிதி?''

''டெல்லி நிலவரத்தை சொல்லி இருக்கிறார் தயாநிதி! 'தாத்தா சொல்றது மாதிரி நாங்க ராஜினாமா செய்துவிடுகிறோம். ஆனால், அடுத்து என்ன செய்யப் போகிறோம்? காங்கிரஸ் இல்லாம ஆட்சி அமைக்க முடியாதுங்கிற நிலைமை வந்துச்சுன்னா... என்ன பண்ணுவீங்க?’ என்று லாஜிக்கான கேள்வி கேட்க, கருணாநிதி யோசிக்க ஆரம்பித்தாராம். கட்சியின் அவசரக் கூட்டத்தில் வீரபாண்டி ஆறுமுகம், துரைமுருகனும் கிட்டத்தட்ட இதுபோன்ற ஒரு நிலைப்பாட்டிலேயே இறுக்கமாக இருந்துவிட... வேறு வழி இல்லாமல் மே.வீ.கல்யாணசுந்தரம் மட்டும்தான், கட்சியின் அவசரக் கூட்டத்தில் கருணாநிதியின் கோபமான கருத்தைப் பிரதிபலித்தார்.''

''எமது நிருபர் அதை லைவ் ரிப்போர்ட் செய்துள்​ளாரே?''

''கூட்டத்தில் ஒருவர் சொன்ன தகவல்தான் அத்தனை பேரையும் கலங்க வைத்ததாம். 'தேர்தலில் நாம் அனைத்துத் தொகுதிகளுக்கும் தாராளமாகச் செலவு செய்தோம். காங்கிரஸ் வேட்பாளர்களுக்கும் பணம் கொடுத்தோம். அப்போது எல்லாம் காரணம் கேட்காதவர்கள், நம் மீது நடவடிக்கை எடுக்க மட்டும் பாய்வது ஏன்?’ என்று கேட்டாராம். எப்படி இருக்கிறது நியாயம்?''

''கருணாநிதியின் பேச்சிலும் ஏதோ சில சந்தேக ரேகைகள் படர்ந்து இருந்ததே?''

''கனிமொழி, கட்சிக்காக எப்படி எல்லாம் பாடுபடுகிறார் என்பதை விளக்கிய கருணாநிதி, 'எனக்குள்ள சங்கடங்​களைப் பெரிதுபடுத்தி, நான் என்றைக்கும் யாருக்கும் கட்சியைக் காட்டிக்கொடுக்க மாட்டேன்’ என்று சொன்னார். கனிமொழி மீது வழக்குப் பதிவு செய்வதற்கும், கட்சியைக் காட்டிக்கொடுப்பதற்கும் என்ன சம்பந்தம் என்று தி.மு.க-வினரே குழம்பித் தவிக்கிறார்கள். தேர்தலுக்குத்தான் செலவு செய்தோம் என்று ஒருவர் சொல்ல.... கட்சியைக் காட்டிக்கொடுக்க மாட்டேன் என்று கருணாநிதி விளக்கம் அளிக்க... இந்தப் பேச்சுகள் தொண்டனைத்தான் அதிகமாகக் குழப்புகின்றன. பொதுவாக இதுபோன்ற இன்கேமரா மீட்டிங்கில் கருணாநிதி பேசுவதைப் பத்திரிகைகளுக்குத் தர மாட்டார்கள். ஆனால், அந்த நடைமுறையை மீறி கருணாநிதியின் பேச்சுகள்... அதுவும் கனிமொழியைப் புகழ்பாடும் வரிகள் மட்டும் தேர்வு செய்யப்பட்டு நாளிதழ்களுக்குத் தரப்பட்டன.''

''அதற்கு என்ன காரணம்?''

''கொதிநிலையில் இருக்கும் ராஜாத்தி அம்மாளைத் திருப்திப்படுத்துவதுதான் இதன் முதல் நோக்கம். 'அவங்களை விட்டுட்டு என் மகளை மட்டும் பிடிப்பாங்களா?’ என்று ராஜாத்தி சொல்லி வருவதை சமாதானப்படுத்த, இந்த உரையைக் கருணாநிதி பயன்படுத்திக்கொண்டார். 'என் மீதான வழக்கை சட்டப்பூர்வமாக சந்திப்பேன்’ என்று கனிமொழி சொன்னார் அல்லவா? அதற்கான வக்கீல் குழாம் இப்போதே கூடிவிட்டது. அதில் ஒருவர் சொன்ன வாதம் என்ன தெரியுமா? '60 சதவிகிதம் பங்கு உள்ளவரை விட்டுவிட்டு 20 சதவிகிதப் பங்கு உள்ளவர் மீது வழக்குப் போடுவதை எளிதாக உடைத்துவிடலாம்’ என்று ஒரு வக்கீல் சொல்ல, அதையே ராஜாத்தி அம்மாளும் திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறாராம். கருணாநிதியைக் கிலி ஏற்படுத்தி இருப்பது இந்த வாசகங்கள்தான். இந்நிலையில், சில கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழன் காலை முதல் ராஜாத்தி அம்மாள் சாப்பிடாமல் இருப்பதாக செய்தி கிளப்புகிறார்கள் சிலர்!''

''பிரச்னை முற்றுகிறதா?''

''அதுதான் நடக்கிறது. இரண்டுக்கும் மத்தியஸ்தம் செய்யக்கூடிய ஆட்கள் யாரும் இல்லை! எல்லாச் சிக்கல்களையும் தீர்த்துவைக்கும் மனிதராக இருந்த ஆற்காடு வீராசாமி உடல்நிலையும் இப்போது அதற்கு இடம் கொடுக்கவில்லை. இவர்களும் அவரை ஒதுக்கிவைக்க ஆரம்பித்தார்கள். அன்பழகன் இதில் எல்லாம் எப்போதும் தலையிட மாட்டார். அழகிரி, ஸ்டாலின், ராஜாத்தி ஆகிய மூவரையும் காம்ப்ரமைஸ் செய்து விஷயத்தை விவகாரம் ஆகாமல் தடுக்கும் மனிதர்கள் இப்போதைக்கு தி.மு.க-வில் இல்லை என்பதுதான் நிஜம்!''

''கனிமொழி விவகாரத்தில் அடுத்து என்ன நடக்கும்?''

''மே 6-ம் தேதி அவரை ஆஜராகச் சொல்லி இருக்கிறது சி.பி.ஐ. குற்றப் பத்திரிகையில் சேர்க்கப்பட்டவர்களில் கனிமொழியும் 'கலைஞர் டி.வி.’ சரத்குமாரும் தவிர மற்றவர்கள் அனைவரும் கைதாகிவிட்டார்கள். எனவே இவர்கள் இருவரும் அடுத்தடுத்துக் கைதாகலாம் என்றும் பேச்சுகள். அதைவிட முக்கியமானது என்ன தெரியுமா?''

''சொல்லும்!''

''2ஜி ஊழலில் சிக்கி இருக்கும் ஐந்து நிறுவனங்களின் சொத்துகளை முடக்கும் காரியங்களை சி.பி.ஐ. பார்த்து வருகிறது. அமலாக்கப் பிரிவு வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், சுப்ரீம் கோர்ட்டில் ஒரு கவரை ஒப்படைத்துள்ளார். 'டெலிகாம் முறைகேட்டில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பெயர்கள்தான் அதில் உள்ளன. கலைஞர் டி.வி-யின் பெயரை ஒருவேளை சி.பி.ஐ. குறிப்பிட்டு இருந்தால், அதுவும் முடக்கப்படலாம்’ என்று டெல்லியில் இருந்து சொல்கிறார்கள்!'' என்றபடி கழுகார் எழுந்தார்... பறந்தார்!



சிறுபான்மை சிக்கல்!

'வாக்குப் பதிவுக்குப் பிறகு எடுத்த சர்வேயின்படி 130 தொகுதிகளில் வெற்றி நிச்சயம்!’ என உளவுத்துறை கொடுத்த அறிக்கையைத்தான் கருணாநிதி நம்பிக்கையோடு பார்த்துக்கொண்டு இருந்தார். வெற்றி நிலவரம் மீடியாக்களில் மாறி மாறி அடிபட, கிறிஸ்துவ மற்றும் முஸ்லிம் வாக்குகள் யாருக்கு சாதகமாக விழுந்திருக்கின்றன என்பது பற்றி தனியார் நிறுவனம் மூலம் சர்வே எடுக்கச் சொன்னாராம். 'கடந்த தேர்தலில் தி.மு.க-வுக்கு விழுந்த சிறுபான்மை வாக்குகள் 40-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தலைகீழாக மாறி அ.தி.மு.க-வுக்கு சாதகமாகிவிட்டன!’ என சர்வே சொல்ல... முதல்வரின் முகம் வாடிவிட்டதாம்.


நன்றி ஜுனியர் விகடன்

No comments:

Post a Comment